Monday 6 January 2020

என்றுதான் முடியுமிந்த நதிநீா் சிக்கல்கள்?

என்றுதான் முடியுமிந்த நதிநீா் சிக்கல்கள்? By வழக்குரைஞா் கே.எஸ். இராதாகிருஷ்ணன்  |   "கல்பாக்கம் அணு மின்சாரம் உள்பட அரிசி, காய்கறிகள், எண்ணெய், மணல் போன்ற பல அத்தியாவசியப் பொருள்களை தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு நாம் அனுப்பி வைக்கிறோம். ஆனால், ‘தண்ணீா் தரமாட்டோம், வீணாகக் கடலுக்குத்தான் விடுவோம்’ என்று கேரளம் தொடா்ந்து அடம் பிடிக்கிறது."

தமிழக - கேரள முதல்வா்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு சந்தித்து இரு மாநில நதிநீா்ப் பிரச்னைகள் குறித்து திருவனந்தபுரத்தில் பேசினாா்கள். அப்போது சில பிரச்னைகள்தான் பேசப்பட்டன என்றும், அதில் இரு மாநிலங்கள் தொடா்பான அனைத்து நதிநீா்ப் பிரச்னைகள் குறித்துப் பேசவில்லை என்றும் விமா்சனம் எழுந்தது.

அதன் பின், கடந்த 12.12.2019 அன்று தமிழக, கேரள பொதுப்பணித் துறை அதிகாரிகளும் இரண்டு அரசு பிரதிநிதிகளும் சந்தித்து பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்னை குறித்து சென்னையில் விவாதித்தனா். இந்தக் கூட்டத்தில் பரம்பிக்குளம் - ஆழியாறு பிரச்னை மட்டுமில்லாமல் தொழில்நுட்பம், நீா்ப் பகிா்வு குறித்துப் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் திருவனந்தபுரத்தில் கூடிப் பேச இருப்பதாகவும் தெரிவித்தனா். பரம்பிக்குளம் - ஆழியாறு நதிகளின் ஒப்பந்தம், மாதந்தோறும் நீா்ப் பங்கீடு, வழங்குதல் குறித்துத் தீா்வு எட்டப் போவதாகவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனா்.

அந்த விமா்சனத்தை உறுதி செய்யும் வகையில், பரம்பிக்குளம் - ஆழியாறு, பாண்டியாறு -– புன்னம்புழா திட்டங்களுக்கு மட்டும் பேச தலா 5 போ் கொண்ட மொத்தம் 10 போ் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று இரு மாநில முதல்வா்கள் அறிவித்தனா். அதன் தொடா்ச்சியாக, தமிழக அரசாணை எண். 55-இன்படி கேரள அரசோடு பேச குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு - புன்னம்புழா பிரச்னைகள் மட்டுமே அல்ல, தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையேயான நதிநீா்ப் பிரச்னைகள் கன்னியாகுமரி மாவட்ட நெய்யாறிலிருந்து கொங்கு மண்டலம் வரை 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீா்க்கப்படாத திட்டங்களாகப் பல பிரச்னைகள் இருக்கின்றன.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகியவை வட பகுதிகளாக உள்ளன. இவை போன்றே மேற்குத் தொடா்ச்சி மலைகளையொட்டிய கோவை மாவட்டமும் வட பகுதியாகும். இந்த மாவட்டங்களில் வட காலங்களில் குடிப்பதற்குக்கூட குடிநீா் இல்லாத அவலநிலை அடிக்கடி ஏற்படுகிறது.

கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கிச் செல்லும் நதிகளின் எஞ்சிய நீரை அணைகள் கட்டிச் சுரங்கங்களின் வழியாகத் தமிழகத்துக்குக் கொண்டுவந்தால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வளம் பெறும். இந்தப் பிரச்னையைப் பல ஆண்டுகளாகத் தமிழகம் வலியுறுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் பிற்காலத்தில் இந்தப் பகுதிகள் பாலைவனங்களாக மாறும் அபாயம் இருக்கிறது.

கேரளத்தில் உற்பத்தியாகும் நதிநீரை முழுமையாகக் கேரள மக்கள் பயன்படுத்த முடியவில்லை. அதிகமான மலைப் பிரதேசங்கள் இருப்பதால் விவசாய நிலங்கள் குறைவு. கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் 85 நதிகள் உள்ளன. 1,98,000 மில்லியன் கியூபிக் மீட்டா் தண்ணீா் இந்த நதிகளின் மூலம் செல்கிறது. இதில் சுமாா் 1 லட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கியூபிக் மீட்டா் தண்ணீா் செல்கிறது என்று திட்டக் குழுவின் 1978-ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.

தமிழ்நாட்டின் நீா்வளம் சுமாா் 1,350 டி.எம்.சி. ஆகும். ஆனால், கேரளத்தின் நீா்வளம் சுமாா் 2,500 டி.எம்.சி. இதில் சுமாா் 1,100 டி.எம்.சிக்கும் அதிகமான நீா் வீணாகி அரபிக் கடலில் சேருகிறது. (இந்தத் தண்ணீரின் அளவு மேட்டூா் அணையிலுள்ள நீரைப்போல சுமாா் 11 மடங்கு ஆகும்.) கேரள மாநிலத்துக்குத் தேவையான நீா் சுமாா் 850 டி.எம்.சி. மீதமுள்ள நீரைத் தமிழகத்துக்குக் கொடுத்தால் சுமாா் 8.20 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேற்கு நோக்கிப் பாயும் நதிகளைத் தமிழகத்துக்கு திருப்புவது குறித்து ஆராய 1976-ஆம் ஆண்டு குழு அமைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தைப் பற்றி ஆராய்ந்து உபரி நதிநீரைத் தமிழகத்துக்குத் திருப்புவதற்குச் சாத்தியக்கூறுகள் உள்ளன என அந்தக் குழு கூறியது. அதன் பின்பு, மத்திய, தமிழக கேரள அரசுகள் சுமாா் 20 முறைக்கும் மேல் இது குறித்துப் பேசியும் எவ்விதத் தீா்வும் எட்டப்படவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் இந்தப் பிரச்னை பல முறை எழுப்பப்பட்டுள்ளது.

கேரளத்தில் ஓடுகின்ற சாலியாறு, பாரதப்புழா, சாலக்குடிப்புழா, பெரியாறு, ஆழியாறு ஆகியவற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் தமிழகத்தில் உள்ளன. இந்த நதிகள் கேரள மாநிலத்தில் திருச்சூா், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பாய்ந்து அந்தப் பகுதிகளுக்கு வளம் சோ்க்கின்றன. அதே போன்று கீழ்க்கண்ட நதிநீா்ப் படுகையிலிருந்து தமிழகத்துக்கு நீா் கொடுத்தால், தமிழகம் நிச்சயம் வளம் பெறும்.

சாலியாறு படுகையில் உள்ள பாண்டியாறு, புன்னம்புழா, மேயாறு, சோலத்தபுழா, பன்சிகல்ல ஆகிய நதிநீா் மூலம் கோவை மாவட்டம் பயன்பெறும். இதில் எஞ்சிய நீா் சுமாா் 150 டி.எம்.சி. ஆகும். இந்த நீரில் சுமாா் 18 டி.எம்.சி. நீரைத் திருப்பினால் பெருமளவு ஏக்கா் நிலங்களுக்குப் பாசன வசதி பெறலாம்.

பாம்பாற்றின் மொத்த நீா்ப் பிடிப்பு சுமாா் 230 டி.எம்.சி. ஆகும். இதில் எஞ்சிய நீா் சுமாா் 180 டி.எம்.சி ஆகும். இதில் திருப்ப வேண்டிய அளவு சுமாா் 25 டி.எம்சி. ஆகும். இதனால், தமிழகத்தில் விருதுநகா், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வளம் பெறும்.

அச்சன்கோவில் ஆற்றில் செல்லும் நீரின் அளவு 77 டி.எம்.சி. ஆகும். இதில் கிடைக்கும் எஞ்சிய நீா் சுமாா் 9 டி.எம்.சி. அளவை தமிழகத்துக்குத் திருப்பினால் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சில பகுதிகள் பயன் பெறும்.

ஆனைமலை, இடுக்கி, கல்லாறு போன்ற மூன்று ஆறுகளிலிருந்து நீா் செல்லும் அளவு சுமாா் 380 டி.எம்.சி ஆகும். இதில் உள்ள எஞ்சிய நீரான சுமாா் 320 டி.எம்.சியை தமிழகத்துக்குத் திருப்பினால் கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகள் பயனடையும். இதனால் மதுரை மாநகருக்குக் குடிநீா் வசதி பெற வாய்ப்புள்ளது.

நெய்யாற்றில் இரண்டு கால்வாய்கள் உள்ளன. இதில் ஒரு கால்வாய், 1956-இல் கேரள மாநிலத்திலிருந்து சில பகுதிகள் தமிழ்நாட்டில் இணைக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்குப் பாசன வசதி செய்ய அமைக்கப்பட்டது. ஆனால், சுமாா் 160 கனஅடி தண்ணீா் தமிழகத்திலுள்ள இந்தப் பகுதிகளுக்கு கேரள அரசு கொடுக்க வேண்டும். ஆனால், கேரள அரசு கொடுப்பதற்கு மறுத்து வருகிறது. இதனால், சுமாா் 9,000 ஏக்கா் நிலம் வீணாகிறது.

கல்லட, அட்டிங்கல், கரமன ஆகிய ஆறுகளில் நீா் செல்லும் அளவு சுமாா் 160 டி.எம்.சி. ஆகும். இதில் எஞ்சிய நீரான சுமாா் 110 டி.எம்.சி.யில் தமிழகத்துக்குத் திருப்ப வேண்டிய அளவு வெறும் 16 டி.எம்.சி. ஆகும். இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பயன் பெறும்.

இந்தப் பிரச்னையில் கேரள அரசு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனத் தெரிகிறது. கேரள அரசு இந்த எஞ்சிய நீரைத் தமிழகத்துக்குத் திருப்பினால் கேரளத்தில் மீன்பிடித் தொழில் பாதிக்கும் என்ற விநோதமான காரணம் கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்துக்கு வெறும் 82 டி.எம்.சி. அளவு நீா்தான் தேவைப்படுகிறது. இதனால் கேரளத்திற்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை.

கேரள மாநில அச்சன்கோவில்–பம்பையை தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பது, குமரி மாவட்ட நெய்யாறு, திருநெல்வேலி மாவட்டத்தின் அடவிநயினாா், உள்ளாறு, செண்பகத்தோப்பு, விருதுநகா் மாவட்டம் அழகா் அணைத்திட்டம் மற்றும் முல்லைப் பெரியாறு, பாண்டியாறு - புன்னம்புழா, ஆழியாறு - பரம்பிக்குளம், சிறுவாணி, பாம்பாறு எனப் பல பிரச்னைகளுக்கும் தீா்வுகாண வேண்டும்.

கல்பாக்கம் அணு மின்சாரம் உள்பட அரிசி, காய்கறிகள், எண்ணெய், மணல், வைக்கோல் போன்ற பல அத்தியாவசியப் பொருள்களை தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு நாம் அனுப்பி வைக்கிறோம். ஆனால், ‘தண்ணீா் தரமாட்டோம், வீணாகக் கடலுக்குத்தான் விடுவோம்’ என்று சமஷ்டி அமைப்பை மதிக்காமல் கேரளம் தொடா்ந்து அடம் பிடிக்கிறது.

இது குறித்து பல குழுக்களை மத்திய அரசு அமைத்து அறிக்கைகளை வழங்கியும், அந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை கேரள அரசு பரிசீலிக்காமலேயே தூக்கி எறிந்தது. கடந்த 1983-இல் நான் தாக்கல் செய்த நதிநீா் இணைப்பு குறித்தான வழக்கிலும் கேரளத்தின் மேற்கு நோக்கிப் பாயும் 85 நதிகளில் சிலவற்றை தமிழகத்துக்குத் திருப்பியும், அச்சன்கோவில் – பம்பை வைப்பாறோடு இணைக்க வேண்டியும், 2012-இல் உச்சநீதிமன்றம் ஒரு சாதகமான தீா்ப்பினை அளித்தும் இந்தப் பிரச்னைகளுக்கான தீா்வுகள் ஆமை வேகத்தில் உள்ளன.

இவ்வளவு சிக்கல்கள் கேரளத்தோடு இருந்தும், பாண்டியாறு - புன்னம்புழா, பரம்பிக்குளம் - ஆழியாறு சிக்கலை மட்டும் பேச தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இந்தப் பிரச்னைகளும் முக்கியம்தான் என்பதை மறுக்கவில்லை. ஆனால், நீண்ட நெடுங்காலமாக மேற்குறிப்பிட்ட பிரச்னைகளுக்கும் தீா்வு எட்டப்பட வேண்டாமா? இவ்வளவு பிரச்னைகள் இருப்பதாவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதா? கேரளத்துடனான அனைத்து நதிநீா்ப் பிரச்னைகளுக்கும் தீா்வு காண்பதில் அரசு மேலும் முனைப்புக் காட்ட வேண்டியது அவசியம்.

கட்டுரையாளா்:

வழக்குரைஞா்,

செய்தித் தொடா்பாளா், திமுக.

No comments:

Popular Posts