Tuesday 14 January 2020

மண் பானையில் பொங்கலிடுங்கள்

மண் பானையில் பொங்கலிடுங்கள்  | By செ. சரத்  |   தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கலின் பெருமை, சீவக சிந்தாமணியில் பாடலாக இடம்பெற்றுள்ளது. அதாவது, மங்கை வளர்த்த செந்தீயில் பொங்கல் பொங்கியதாக அது கூறுகிறது. இப்படி சங்க காலம் தொட்டே பொங்கல் தமிழர்களின் மரபோடு ஒன்றிய திருவிழாவாய் இருந்து வருகிறது. ஆனால், அப்படிப்பட்ட திருவிழாவானது இன்று பட்டுப்போய், காலத்தோடு தேய்ந்து புதுமைப் பொங்கலாய் உருவெடுத்துள்ளது.

அதனை வளர்ச்சி என்று கூறமுடியவில்லை என்றாலும், நவீன யுகத்தின் வார்ப்பு என்று கூறுவதே சாலப் பொருந்தும். அத்தகைய யுகத்தின் முன்னோக்கிய பார்வையும், கடந்து வந்த பாதையும் பலவற்றையும் மாற்றியுள்ளது.இன்றும் பொங்கல் தமிழர்களின் அடையாளத்தை தரணியெங்கும் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது. "தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பார்கள். அதன் பொருள், உழவர்கள் தங்களின் வயலில் விளைந்த நெல்மணிகளை விற்று அதன்மூலம் அவர்களின் எதிர்கால வாழ்வைச் சீர்படுத்துவார்கள். அத்தகைய வாழ்வுக்கு அடித்தளமிட்ட  இயற்கை தெய்வத்துக்கும், சூரியன், மாடு என உதவிய எல்லாவற்றுக்கும் புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து, அரிசியாக்கி, பொங்கலிட்டு நன்றி பாராட்டுவதே பொங்கல் திருவிழா.

பொங்கலுக்கு முதல் நாள் போகி. மழைக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன், நமது பழைய ஆடைகளைக் குப்பையில் எறியும் விழா. விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். சூரியனுக்கு நன்றி செலுத்துவது சூரியப் பொங்கல்  நாளாகும். அதிகாலையில் சூரியக் கடவுளுக்குப் பொங்கல் பானையில் பொங்கலிட்டு, படையல் செய்து கொண்டாடுவார்கள்.அடுத்து விவசாயத்துக்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். அன்றைய தினம் கால்நடைகளைக் குளிப்பாட்டி, அழகுபடுத்தி, பொங்கலிட்டு வணங்குவர்.

இறுதியாக காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இந்தப் பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல், பெரியோர் ஆசி பெறுதல் முதலானவை அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், வீர சாகசப் போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். இவையே பொங்கல் திருநாளின் அடையாளங்கள் ஆகும். ஆனால், அவை இன்று மெல்ல மெல்ல மாறிவருகின்றன.மனிதர்களின் வளர்ச்சி என்பது அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து வளம் பெற்று மகிழ்ச்சியாய் வாழ்வதே ஆகும். அத்தகைய மகிழ்ச்சிக்கு வித்திடுவதில் பண்டிகைகள் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால், அவை இன்று குறுகிய வட்டத்தில் அரங்கேறி வருகிறது என்பது காலம் கடந்த வேதனை. முன்பெல்லாம் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் பொங்கல் பண்டிகையை  வாழ்த்து அட்டைகள் மனமார வரவேற்கும். அவை இன்று காலத்தின் பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடான கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-ஆப்) மூலம் ஆக்கிரமித்துவிட்டது.

குயவன் வடித்த மண் பானையில் பொங்கல் பொங்குவதே அழகு. இங்கு அழகு என்பதைவிட அவர்களின் பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கைக்கு வித்திடும் பண்டிகைக் காலம் ஆகும்.  மண் பாண்டத் தொழிலை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் (குயவர்கள்) மேற்கொள்வார்கள்.  அவர்கள் செய்யும் பானைக்கு, பொங்கல் விழா, கோடைகாலத்தில் (சித்திரை) குடிநீருக்குப் பயன்படுத்த நல்ல தட்டுப்பாடு இருக்கும். அதேபோல் அவர்கள் செய்யும் விளக்குகள் கார்த்திகை தீபத் திருநாளன்று அதிக அளவில் விற்கப்படும். பின் மாட்டுப்பொங்கலன்று (தை) அவர்கள் மண்ணைக் கொண்டு விதவிதமாக சிலைகளைச் செய்வார்கள். அவை மாடு, கோழி, குழந்தை முதலிய வடிவில் இருக்கும். தேவைப்படுவோர் அவர்களுக்கு வேண்டிய வடிவில் மண் சிலைகளை வாங்கி வனத்தில்  உள்ள ஒரு கோயிலில் சென்று வைப்பார்கள். அப்படி என்ன வடிவிலான சிலைகளை வைக்கிறார்களோ அவை நீண்ட ஆயுளுடன் நன்றாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

மேலே குறிப்பிட்ட மூன்று மாதங்களின் வழியே கிடைக்கும் வருமானமே அவர்களுக்குப் பிரதான ஒன்றாகும். இப்படி இருக்கையில் இன்று பலரும் மண்பானையின் வசீகரத்தை மறந்து குக்கர் போன்றவற்றைக் கொண்டு பொங்கல் வைப்பது ரசனை மறந்த மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. பொங்கல் திருவிழாவைக் கொண்டாட இதுவரை பலரும் பானை வாங்க குயவனை நாடி, பச்சரிசி, முந்திரி, உலர் திராட்சை என வகைகளைத் தேடி, இன்சுவையின் இதயமான கரும்பை வாங்கி நல்லதொரு பண்டிகையை நாளொரு விடியலில் கொண்டாடினர். ஆனால், அவையெல்லாம்  இன்று நொடிப் பொழுதில் ஒட்டுமொத்த தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய பெரிய இணையவழி வர்த்தக நிறுவனங்கள் வாரிக்கொண்டு வருகின்றன.எனவே, பண்டிகைக்காக தெருவோரக் கடைகளில் விற்கும் விற்பனையாளர்களும், சிறு மளிகை வியாபாரிகளும் பண்டிகையின் கொண்டாட்டத்தை அனுபவிக்காமலே கடந்து விடுகின்றனர். இணைய வழி வர்த்தகத்தில் வாங்குவது எளிது என்று சிலருக்கு மனதில் எழலாம். ஆனால், சற்றே சிந்தியுங்கள். இந்தப் பண்டிகைக்காகக் காத்திருந்து, தன்னிடம் உள்ளவற்றை விற்றால் மட்டுமே அவர்களின் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறும்.

என்னதான் நொடிப்பொழுதில் இணையத்தில் பொங்கல் பொருள்களை வாங்கி பொங்கல் வைத்தாலும் அதில் வராத சுவை, அலைந்து திரிந்து, பேரம் பேசி, அடித்து பிடித்து வாங்கி, வெயிலில் நடந்து, கரும்பை வாங்கி வந்து, முக்கோணத்தில் கல்வைத்து, கைவண்ணச் சித்திரமான மண் பானையில் பொங்கலிட்டு பொங்குவதில் வருமே ஒரு சுவை... அதுவே இனிதினும் இனிதாய் சுவைக்கும். நீங்களும் சுவைத்துப் பாருங்கள்.

No comments:

Popular Posts