Thursday, 9 January 2020

தழைக்கட்டும் ஜனநாயகம்

தழைக்கட்டும் ஜனநாயகம் | By எஸ். ஸ்ரீதுரை  | தமிழக ஊரக உள்ளாட்சித்தேர்தல் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமின்றி நடந்து முடிந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டு வந்த நிலையில், நகராட்சிகள், மாநகராட்சிகளைத் தவிர்த்துவிட்டு, மீதமுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பர் 30-ஆம் தேதியன்று முடிந்து விட்டது.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களைவிட, உள்ளாட்சித் தேர்தல்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஏனெனில், சட்டங்களை இயற்றும் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் காட்டிலும், அன்றாட வாழ்வில் மக்களோடு நெருக்கமாக இருந்து, அவர்களின் நல்வாழ்வுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்தாம். எனவேதான், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் தங்களின் சொந்தச் செல்வாக்கின் மூலம் உள்ளாட்சிப் பதவிகளுக்குத் தேர்வு பெறுவதைக் காண்கிறோம்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல், சில சுவாரஸ்யமான  வேட்பாளர் தேர்வுகளைக் கொடுத்துள்ளது மட்டுமின்றி,  ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என். தொட்டி ஊராட்சி மன்றத் தலைவராக சௌந்தர்யா (வயது 21) என்ற  கல்லூரி மாணவியும், திருவாரூர் மாவட்டம் அச்சுதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக ருக்மிணி (வயது 22) என்ற பட்டதாரி இளம்பெண்ணும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இளைய தலைமுறையினர் பொதுப்பணியில் ஈடுபடுவதற்கு ஊக்கமளிக்கும் செய்தியாகும்.

திருச்செங்கோடு ஒன்றிய வார்டு உறுப்பினராக ரியா,  திருச்சி மாவட்டம் மருதூர் ஊராட்சி வார்டு உறுப்பினராக பன்னீர்செல்வி ஆகிய திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. காலம் காலமாக சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டும், திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்களில் கேலிக் குள்ளாக்கப்பட்டும் வந்த திருநங்கைகளுக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் மூன்றாம் பாலினத்தவரின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வலுவாக ஊன்றியுள்ளது.

இந்தத் தேர்தலில், தாங்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்று நிரூபிக்கும் வகையில் பற்பல ஊராட்சிப் பதவிகளுக்கு மூத்த குடிமக்களும் போட்டியிட்டுள்ளனர். இவர்களுள், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் புஞ்சை புதுப்பாளையத்தில் நல்லம்மாள் (82), மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியம் அரிட்டாபட்டியில் அழகம்மாள் (79) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம்   அ.தரைக்குடியில் தங்கவேலு (70) ஆகியோர் ஊராட்சித் தலைவர்களாகத் தேர்வாகியுள்ளதும் கவனத்தைக் கவர்கிறது. தள்ளாத வயது  என்று கூறிக்கொண்டு,  தங்களால் யாருக்கு என்ன நன்மை? கழிவிரக்கத்துடன் காலத்தைத் தள்ளும் மூத்த குடிமக்களிடையே, தங்களாலும்  சமுதாயத்துக்கு உழைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ள இந்த மூத்தோர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் கான்சாபுரம் ஊராட்சித் தலைவராக அந்த ஊரில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்த சரஸ்வதி என்பவர் தேர்வு பெற்றுள்ளதும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தைச் சேர்ந்த கோவில்குப்பம் ஊராட்சித் தலைவராகக் காஞ்சனா என்ற பெண்மணியும், வழூர் அகரம் ஊராட்சித் தலைவராக செல்வி என்ற பெண்மணியும் தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் இருவருமே முன்னாள் ஊராட்சித் தலைவரான தனபால் என்பவரின் மனைவியர் என்பதும் ஒரு சுவாரஸ்யமான தகவல்தான். எனினும், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட சில மரணங்கள் சோகத்தை ஏற்படுத்துகின்றன.

பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிமன்றத் தலைவராகப் போட்டியிட்டுத் தேர்வுபெற்ற மணிவேல் (70) என்பவர், வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பின்பு காலமானதும், திருப்பூர் மாவட்டம் ஊகாயனூர் ஊராட்சிமன்றத் தேர்தலில்  சுப்பிரமணியம்  என்பவர் வார்டு உறுப்பினராகத் தேர்வு பெற்றதை அறிந்து உற்சாகத்தில் திளைத்த அவருடைய மகன் கார்த்தி என்ற இளைஞர் அகால மரணமடைந்ததும் வருத்தமளிக்கவே செய்கின்றன. நீண்ட காலமாக இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால், மக்கள் நலன் சார்ந்த பொதுப்பணிகள் பலவும் அதிகாரிகள்,  ஊழியர்களை நம்பியே நடைபெற்றுவந்தன. 

கொசு ஒழிப்பு உள்ளிட்ட பொது சுகாதாரப் பணிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி போன்ற பணிகள் யாவிலும் ஓரளவு சுணக்கம் இருக்கவே செய்தது. தத்தமது வார்டுகள்,  ஊர்களின் தேவைகளை எடுத்துக்கூறி, நலப்பணிகளை முன்னின்று நடத்திட மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் போனதே இந்தச் சுணக்கத்துக்குக் காரணம்.

இனிவரும் காலங்களில், மக்கள் பிரதிநிதிகளும், அரசுத்துறையினரும் இந்த விஷயத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இந்தப் பணிகளுக்கு உரிய நிதியைத் தாமதமின்றி ஒதுக்கீடு செய்து உதவுவது தமிழக அரசின் கடமையாகும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் கையூட்டு உள்ளிட்ட புகார்களுக்கு இடமளிக்காமலும், தத்தமது குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இல்லாமலும் பொதுப்பணி ஆற்ற வேண்டும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இனத்தவருக்குப் பிற ஜாதியினர், பதவிக்குரிய மதிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்க முன்வரவேண்டும். சமுதாய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நம்முடைய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இனி, நமது மாநிலத்தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை ஒன்றை வைக்கவேண்டியுள்ளது.  ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாத ஒன்பது மாவட்டங்களிலும் விரைவாக வார்டு மறுவரையறை செய்து முடித்து, அவற்றுடன்  நகர்ப்புறம், மாநகராட்சிகளுக்கான தேர்தல்களையும் காலம் தாழ்த்தாமல் நடத்தி முடித்து, ஜனநாயகம் தழைக்க உதவ வேண்டும்.

No comments:

Popular Posts