Monday 13 January 2020

காளையோடு மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு

காளையோடு மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு | முனைவர் இளசை சுந்தரம், மதுரை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர். | தமிழர் கலாசாரத்தின் அடையாளமாக விளங்கி வந்த ஏறுதழுவல் ஆட்டம், பெயர் மாறுதல்கள் கொண்ட பிரிவுகளுடன் இன்றும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டு, மஞ்சு விரட்டு, வடம் மஞ்சுவிரட்டு போன்றவை இதில் அடங்கும்.

இது தமிழக திருமண முறையுடன் தொடர்புடையது. சங்க கால தமிழகத்தில் பலவகை திருமண முறைகள் இருந்தன. களவு மணம், மரபுவழித் திருமணம், பரிசம் கொடுத்து மணத்தல், சேவை மணம், தினைக்கலப்பு மணம், மடலேறி மணமுடித்தல், போர் செய்து மணம் முடித்தல், ஏறு தழுவுதல் ஆகும். இதில் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் உண்டு. ஆனால் ஏறு தழுவுதல் பற்றி மட்டும் அறியலாம்.

ஆண்களின் திருமண தகுதிக்கு சான்று வழங்குதல்; பெண் கேட்கும் வாலிபனின் வீரத்தை நேரில் கண்டறிய களம் அமைத்தல்; ஒரு பெண் ஒரு வாலிபனை விரும்பினால் தூற்றிப் பேசும் ஊரார், அந்த வாலிபன் அந்த வீட்டார் காளையை தழுவி அடக்கி வென்றால் அதை அங்கீகரித்தல்; ஏறு தழுவியவனைப் பெண் விரும்பினால், அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுதல் போன்றவையாகும்.

ஆடுகளத்துக்கு அழைத்து வரப்படும் மாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும் இடம் ’கொட்டம்’ எனப்படும். ஆட்டம் தொடங்குவதற்கு முன் இந்த இடத்தில் ஒவ்வொரு மாட்டுடனும் அதன் பயிற்சியாளர் மூக்கணாங்கயிற்றை பிடித்தபடி நிற்பார். இதற்கு அடுத்த பகுதி ‘உள்வாடி’ எனப்படும். ஆட்டம் தொடங்கியதும் கொட்டத்தில் இருக்கும் மாடுகள் ஒவ்வொன்றாக உள்வாடிக்கு இட்டுச் செல்லப்படும். இங்கு ஒரு மாடும், அதனுடன் பயிற்சியாளர் ஒருவரும் நிற்பதற்கு செவ்வக வடிவிலான இடம் இருக்கும். இந்த இடத்தில் இருந்து காளையின் மூக்கணாங்கயிறு அவிழ்க்கப்பட்டு, வாடிவாசல் களத்திற்கு அனுப்பப்படும்.

உள்வாடியின் வாசல்பகுதியை ஒட்டி, வாசலின் இரு புறத்திலும் ஒவ்வொரு பனைமரம் நடப்பட்டிருக்கும். இது பத்தடி உயரம் இருக்கும்; இது ‘அணைமரம்’ எனப்படும். உள்வாடியின் வெளிப்புறச் சுவருக்கும் அணைமரத்துக்கும் இடையில் சிறிய இடைவெளி இருக்கும். இந்த இடைவெளி ஒருவர் நுழைந்து வெளியேறும் அளவாக இருக்கும்.

அணைமரத்தின் ஓரமாக ‘பிடிகாரர்’ மறைந்திருப்பார்; வரப்போகும் காளையை கவனித்து அதன் மீது தாவி அணைவது ஆட்டத்தின் தொடக்கமாகும். அணைமரங்களின் மேல் பகுதியில் நடுவரும், விருது வழங்குபவரும் அமர வசதி செய்யப்பட்டிருக்கும். அதன் மீது அமர்ந்து உள்வாடியையும் வாடிவாசலையும் கவனிக்க இயலும்.

அணைமரத்திற்கு அடுத்த பகுதி ‘வாடிவாசல்’ எனப்படும். இது காளையும் பிடிகாரரும் விளையாடும் இடமாகும். இதன் தூரம் 50 அடியாகும். இந்த தூரத்துக்கு தென்னை மஞ்சி பரப்பப்பட்டிருக்கும். வாடிவாசலின் 50 அடி தூரத்திற்கு அப்பால் உள்ள பகுதி காளை வெளியேறும் பாதையாகும். வாடிவாசல் களத்தின் ஒரு புறம் முக்கிய விருந்தினர்களுக்கும், மற்றொரு புறம் பொதுமக்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும்.

பொதுமக்களுக்கான இடத்தில் தற்போதைய விதிமுறைகளின்படி பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டிருக்கும். (2007-ம் ஆண்டுக்கு முந்தைய காலங்களில் பார்வையாளர்களுக்கு மாடங்கள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. வாடிவாசல் களத்திற்கும் பார்வையாளர் பகுதிகளுக்கும் இடையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருக்கும். மாடுகள், பார்வையாளர் பகுதிக்குள் நுழையாதபடி பாதுகாக்கவே இந்த ஏற்பாடு.

ஆட்டம் தொடங்கியதும் காளைகள், உள்வாடி எனப்படும் இரண்டாவது இடத்திற்கு இட்டுச் செல்லப்படும். இந்த இடத்தில்தான் விளையாட்டுத் திடலுக்கு காளையை அனுப்புவதற்கு தயார் செய்வார்கள். இந்த இடத்தில் இருந்து அணைமரத்தின் மீது அமர்ந்திருக்கும் நடுவரின் ஆணையை எதிர்பார்த்திருப்பார்கள். முதலில் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டு, அடுத்து முக்கிய பிரமுகர்களின் மாடுகளும், பின் பிற மாடுகளும் அவிழ்த்து விடப்படும். உள்வாடிக்குள் நிற்கும் மாடு பற்றிய விவரத்தையும் நடுவர் ஒலிபெருக்கியில் அறிவிப்பார். உடனே பயிற்சியாளர் மாட்டின் மூக்கணாங்கயிற்றை அவிழ்ப்பார்.

அடுத்தகணம் மாடு மின்னல் வேகத்தில் அணைமரத்தைக் கடந்து வாடிவாசலுக்கு விரையும். அணைமரத்தின் அருகில் பிடிகாரர் மறைந்திருப்பார். ஒரு வினாடி நேரம்தான். வெளியேறும் மாட்டின்மீது பாய்வார். மாட்டின் திமில்தான் பிடிகாரரின் இலக்கு. மாட்டை அடக்குவதற்கு திமிலைப் பற்றுவதே முதல் வேலை. திமிலை அணைந்த பிடிகாரரை மாடு பக்கவாட்டில் குத்த முயற்சி செய்யுமானால், அவர் ஒரு கையால் திமிலைப் பிடித்தவாறே மறுகையால் கொம்பைப் பிடித்து எதிர்திசையில் திரும்புவார்.

மாடு இப்போது களத்தைவிட்டு வெளியேற முயற்சிக்கும். ஒரே ஓட்டமாக வாடிவாசல் எல்லையை கடப்பதே அதன் நோக்கம். தன் மீது அணைந்து இருக்கும் பிடிகாரரின் எடையையும் தாங்கிக் கொண்டு அல்லது அவரை உலுப்பி எறிந்துவிட்டு விரையும். இந்த 50 அடி எல்லைக்குள் வீரர் மாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாவிட்டாலும்கூட, திமிலில் பிடித்த பிடியை விடாமல் மாட்டை அணைந்தபடி வாடிவாசல் எல்லைவரை சென்றுவிட்டால், அவர் காளையை அடக்கிவிட்டதாக அறிவிக்கப்படும். எல்லையை கடக்கும் முன் பிடியை விட்டுவிட்டால் மாடு வென்றதாக அறிவிக்கப்படும்.

பிடிகாரர் வெற்றி பெறாவிட்டால், மாட்டின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படும். உரிமையாளர் அல்லது பயிற்சியாளர் அதை பெறுவார். சில மாடுகள் நின்றபடி துள்ளி துள்ளி பிடிகாரரை உலுப்பித்தள்ள முயற்சி செய்யும். இவை உடனடியாக களத்தைவிட்டு வெளியேற முயற்சி செய்வதில்லை. வாடிவாசலுக்குள்ளேயே நின்று விளையாடி களத்தை பரபரப்பாக்கும். மாடு துள்ளி துள்ளி பிடிகாரரை உலுப்பும் வேளையில் பிடிநழுவாமல் மாட்டோடு அணைந்து மூன்று துள்ளல் வரை சமாளித்துவிட்டால் அது வீரரின் வெற்றியாக அறிவிக்கப்படும். இரண்டாவது துள்ளலுக்கு பின் பிடி நழுவினால்கூட மாட்டுக்குத்தான் வெற்றி.

உழவு மாட்டுக்கும், ஜல்லிக்கட்டு காளைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மனிதர்களை கண்டால் மிரளும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படும். இதற்கு ஓட்டப்பயிற்சி, கொம்பினால் குத்தும் பயிற்சி, சைகைப் பயிற்சி அளிக்கப்படும். தினமும் காலை வேளைகளில் நீச்சல் பயிற்சியும் அளிப்பர். இந்த காளைகள் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும்.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் திமில்பிடி, கொம்புபிடி, கால் பின்னல்பிடி, கழுத்துப்பிடி, வால்பிடி என களத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்ய பயிற்சி பெற்றிருப்பர். இந்த பிடிமுறைகள் சங்க இலக்கியத்தில், ‘ஏற்றின் கொம்பை பற்றி மார்புடன் தழுவிக் கொண்டினர் சிலர்; கழுத்திலே இறுகப் பற்றிக் கிடந்தனர் சிலர்; திமில் முறியும்படி தழுவினர் சிலர்’ என தொடரும். தற்போது ஜல்லிக்கட்டில் வால்பிடி தடை செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு தனிச்சட்டம் அரசால் இயற்றப்பட்டு ஆட்டம் முறைப்படுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Popular Posts