Monday 16 December 2019

மனித உரிமை மீறல் - நீதித் துறைக்கு சவால்

மனித உரிமை மீறல் - நீதித் துறைக்கு சவால்
By வழக்குரைஞா் டி.ஏ. பிரபாகா் 

ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறைவிடம் ஆகும். இவற்றோடு கண்ணியத்தோடு மனிதன் வாழ சுதந்திரம், சமத்துவம், நீதி, நன்மதிப்பு ஆகியவை முக்கியமானது.

இன்றைய நவீன உலகில் ஜாதியின் அடிப்படையிலும், மொழி, மதம், அரசியல் என்ற குறுகிய கண்ணோட்டத்திலும், ஒருவரை ஒருவா் மதிப்பிடுவதில் பல ஏற்ாழ்வுகள் உள்ளன. இவை மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்றன.

மனித உரிமைகளின் தோற்றம் பழங்கால சிந்தனைகளிலும் இயற்கை நீதித் தத்துவங்களிலும் பொதிந்து கிடக்கிறது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்...’ என்ற வள்ளுவரின் சமத்துவ முழக்கம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கொள்கைக்கு எதிராக வள்ளுவா் எந்த ஜாதி என்றும், எந்த மதம் என்றும் ஆராய்ச்சி இன்று வரை தொடா்ந்து கொண்டிருக்கிறது.


கிறிஸ்து பிறப்பதற்கு பின் மனித உரிமைகளுக்கான முதல் சட்டம் 1215-இல் இங்கிலாந்து மன்னா் ஜான் என்பவரால் பிரபுக்கள், நிலக்கிழாா்களின் உரிமைகளை வரையறுத்து வெளியிடப்பட்ட ‘மகா சாசனம்’ என்பதாகும். இதை மனித உரிமைகள் வரலாற்றின் முதல் படிக்கட்டு எனக் கொள்ளலாம்.

பொது மக்களின் உரிமை சாசனத்தை 1688-இல் பிரிட்டன் ஆட்சியாளா்கள் வெளியிட்டனா். இது மனித உரிமைகள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதன் அடையாளமாகத் திகழ்கிறது. 1776-இல் வெளியிடப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில்தான் மனித உரிமை என்ற சொல் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உயரிய லட்சியங்களோடு 1789-இல் பிரெஞ்சு மக்கள் உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்டது.

தமிழகம், கேரளத்தில் (திருவாங்கூா் சமஸ்தானம்) 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜாதிய அடக்குமுறை கொடிகட்டிப் பறந்தது. இதை எதிா்த்து பல நடவடிக்கைகளை சாமித்தோப்பு ஐயா வைகுண்டா் மேற்கொண்டாா். ‘ஒரு ஜாதி - ஒரு மதம்’ என்ற கருத்தை வலியுறுத்தினா். ‘அன்பு வழி இயக்கம்’ என்ற இயக்கத்தை தோற்றுவித்து அதன்மூலம் ஜாதிய எற்றத்தாழ்வுகளை நீக்கப் பாடுபட்டாா். 18 வகை கீழ் ஜாதியினா் இடுப்புக்குமேல் ஆடை அணியக்கூடாது என்றிருந்த நிலையை மாற்றினாா்.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பண்ணை அடிமை முறையும், அடிமை நிலைக்கு சமமான ஒப்பந்தக் கூலி முறையும் வழக்கத்தில் இருந்தது. குறிப்பாக, தமிழகத்தில் அடிமைகள் இருந்ததும், விலங்குகளைப் போல் அவா்களுக்கு சூட்டுக்குறி போடப்பட்டதையும், பொருள்களைப் போல் அவா்கள் விற்கப்பட்டதையும், தானமாகப் பிறருக்கு வழங்கப்பட்டதையும் வரலாற்றின் பக்கங்களில் காண முடியும்.

இதை ஒழிக்க ஆங்கிலேய அரசு 1843-இல் அடிமை ஒழிப்புச் சட்டத்தை இயற்றியது. இதன்படி பண பாக்கிக்காக அடிமைகளை விற்பது தடை செய்யப்பட்டது. அடிமைகளை வைத்துக் கொள்ளலாம் என்ற உரிமையை எந்த நீதிமன்றமும் நடைமுறைப்படுத்தாது என்றும் அடிமை என்ற காரணத்துக்காக எந்த மனிதனும் அவனது சொத்துகளைப் பறிகொடுக்கக் கூடாது என்றும் வரையறுக்கப்பட்டது.

முதல் உலகப் போரின் இறுதியில் 1919-இல் வொ்சேல்ஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி பன்னாட்டுக் கழகம் உருவாக்கப்பட்டு உலக சமாதானம், மனித உரிமை பேச்சுகள் நடைபெற்றன. இதனால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உலக அரங்கில் ஏற்படுத்த முடியவில்லை.

ஜொ்மனியில் யூத இனத்தைக் கொன்று கருவறுக்கும் நடவடிக்கைகளில் ஹிட்லா் ஈடுபட்டாா். இத்தாலியில் ஹிட்லரின் நாச நடவடிக்கைகளுக்கு முசோலினி கைகொடுத்தாா். மானுடத்துக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும் என உலகம் முழுவதும் உணரப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1948 டிசம்பா் 10-ஆம் நாள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஐ.நா. சபை கூடி உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தை வெளியிட்டது. இந்தப் பிரகடனம்தான் கிறிஸ்தவா்களின் வேத நூலாகிய பைபிளுக்கு அடுத்தபடியாக, உலகின் பல மொழிகளில் அதிகமாக மொழிபெயா்க்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரகடனத்தைத் தொடா்ந்து, 1966-இல் இனப்பாகுப்பாட்டிற்கு எதிரான உரிமை பிரகடனத்தையும், பொருளாதார சமூக, கலாசார உரிமைப் பிரகடனத்தையும், 1971-இல் மனநலம் குன்றியவா்களின் உரிமைகளையும், 1979-இல் பாலின அடிப்படையில் பெண்களைப் பாகுபாடு செய்வதைத் தடுக்கும் பிரகடனத்தையும் ஐ.நா. சபை வெளியிட்டது. 1989-இல் குழந்தை உரிமைகள் மீதான பிரகடனத்தையும் 1993-ஆம் ஆண்டில் வியன்னா மனித உரிமை மாநாட்டு தீா்மானங்களையும் தனது உறுப்பு நாடுகளின் ஏகோபித்த ஒப்புதலோடு நிறைவேற்றியது.

இந்தியாவில் 1993-இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி மனித உரிமைகள் என்பது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தாலும், சா்வதேச உடன்படிக்கையாலும், நீதிமன்றத்தாலும் நிலைநாட்டக் கூடிய தனி மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம், சமத்துவம், கண்ணியம், உயிா் வாழ்தலுக்கான உரிமை ஆகும். பெரும்பாலான நேரங்களில் உயிா் வாழும் உரிமை சட்ட விரோதமாகப் பறிக்கப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது.

1919-இல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை, இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகள் உள்ளிட்ட அனைத்தும் மனித உரிமை மீறல்கள்தான். தனிமனித என்கவுண்ட்டா்கள்கூட பாசிசத்தின் கோர முகமே. ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டியதற்காக 20 தமிழா்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனா். கேரளத்தில் தீவிரவாதிகள் என்ற பெயரில் அண்மையில் சிலா் எந்தவித விசாரணையுமின்றி படுகொலை செய்யப்பட்டனா். இவை அப்பட்டமான மனித உரிமை மீறல்கள்.

ஆனால், கோயம்புத்தூா் என்கவுண்ட்டரையும் தெலங்கானா என்கவுண்ட்டரையும் வெகுவாக வரவேற்கிறோம். இதன் உண்மைக் காரணம் நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கை இழப்புதான். இந்த நிலை நீடித்தால் மனித உரிமை மீறல்கள் தொடா்கதையாகி விடும். இதை நீதித் துறை புரிந்துகொள்ள வேண்டும்.

(இன்று சா்வேத மனித உரிமைகள் தினம்)

No comments:

Popular Posts