Saturday, 28 December 2019

எலும்பு தின்னும் ஒட்டகம்

எலும்பு தின்னும் ஒட்டகம்

முனைவர் வே. ஞானப்பிரகாசம்,

முன்னாள் துணைவேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.

பொதுவாக ஒட்டகம் பாலைவனத்தில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு திமில் அல்லது இரு திமில் கொண்ட இருவகையான ஒட்டகங்கள் உள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகளால் ஒரு திமில் ஒட்டகங்கள் அவற்றின் பால், இறைச்சிக்காகவும், சுமைகளை ஏற்றிச் செல்லவும், வண்டி இழுக்கவும் வளர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் பண்டைக்காலத்திலேயே ஒட்டகங்கள் இருந்தன என்பதற்கு அகநானூற்றில் சான்றுகள் உள்ளன.

ஒட்டகத்தின் உடல் எடை 250-லிருந்து 680 கிலோ வரை இருக்கும். இதன் உயரம் 7 முதல் 8 அடி வரை இருக்கும். இவை சராசரியாக 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டவை. 200 கிலோ வரையிலான எடையை சுமந்து கொண்டு 50 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கக் கூடியது. கொதிக்கும் மணலிலும் கடுமையான வெப்பத்திலும் உணவின்றி, நீரின்றி 8 நாட்கள் வரை இருக்கும். அதன் எடையில் 22 சதவீதம் இழந்த பின்னும் உயிர் வாழும் தன்மை கொண்டவை. கடும் குளிர் காலத்தில் உணவின்றி, நீரின்றி ஆறுமாதம் வரை கூட இருக்கும். மேய்வதற்கு புல் போன்ற சிறிது உணவு கிடைத்தால் கூட போதும், அடுத்த 10 மாதங்களுக்கு தேவையான அளவு சேமித்து கொள்ளும். இடையில் நீர் கூட அருந்தாமல் இருக்கமுடியும். நீர் அருந்தாமல் சில மாதங்கள் இருந்தாலும் மீண்டும் நீர் அருந்தும்போது ஒரே மூச்சில் 100 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும் குணம் கொண்டது. இவ்வாறு நீரைக் குடித்தவுடன் 10 நிமிடங்களில் அதன் உடலில் தேவையான நீர்ச்சத்து பெற்று விடும்.

‘பாலைவனத்துக் கப்பல்’ என்று அழைக்கப்படும் ஒட்டகம் பாலைவன சூழலில் வாழ வசதியாக அதன் உடல் உறுப்புகளான ரோமம், தோல், கண், காது, மூக்கு, வாய், கால்கள், பாதம், திமில் ஆகியவை அமையப்பெற்றுள்ளன. ஒட்டகத்தின் ரோமமும், தோலும் அப்படி ஒரு தடிமனானது மட்டுமின்றி அதற்கு சிறந்த வெப்ப தடுப்பானாக பயன்படுகிறது. அது மட்டுமல்ல, கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை சுயமாக மாற்றிக்கொள்ளும். இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனிநிலையில் கடுங்குளிர்காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது. அதேநேரம், கடும் கோடை வெப்பக்காலங்களில் கடும் வெயில் கொளுத்தும்போது, வெப்பம் கடத்தா தன் தடிமனான தோலினாலும், தன் உடல் வெப்பநிலையை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கிறது. இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகிறது. இதன் மூக்கமைப்பானது, சுவாசித்து வெளியே அனுப்பும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேற விடாமல் தடுத்து விடும் அமைப்பு உடையது. மேலும், பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட தன் மோப்ப சக்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது.

பாலைவனம் என்றாலே புழுதிக் காற்று, மணற்புயல் பிரசித்தம். அப்படி, மணலோடு சேர்ந்து காற்று வீசும் போது ஒட்டகம் மூக்கை மூடிக்கொள்ளும். அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது. அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றன் உள் ஒன்றாக கோர்த்துக்கொண்டு மணற்புயலிலிருந்து கண்ணிற்கு முழுப்பாதுகாப்பு அளிக்கிறது.

ஒட்டகத்தின் கண்களுக்கு கீழே உள்ள இமை போன்ற திரை அமைப்பு வாகனத்தின் வைப்பர் போல செயல்பட்டு கண் பரப்பை சுத்தப்படுத்தி கூடுதலாய் கண்களுக்கு பாதுகாப்பை அளிக்கிறது. கண்ணிலும் அதன் கண்ணிற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பு அமைப்பும், புருவமும் பாலைவனத்து சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்களைதாக்கி விடாமல் வெளிச்சத்தை பாதியாக தடுத்து விடுகிறது..! அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்து இருப்பதால் தலையை திருப்பாமல் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது. பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.

பல தமிழ் அறிஞர்கள், பண்டைய இலக்கியத்தில் விலங்குகள் குறித்து பாடப்பட்டுள்ள பாடல்களை ஆய்வு செய்து, அவை குறித்து விரிவாக எழுதி உள்ளனர். அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கதாக இருந்தாலும், அவர்கள் தொழிலால் வேறுபட்டதினால், அவர்களுடைய விளக்கங்கள் கால்நடை மருத்துவ அறிவியல் உண்மைகளுக்கு மாறுபட்டவையாக உள்ளன. உதாரணமாக, அகநானூறில் வரும் ஒரு பாடலில் பாறைகளில் உலர்ந்து கொண்டிருக்கும் செம்மறி ஆட்டின் வெள்ளை எலும்புகளை தின்று ஒட்டகம் தன் பசியை தீர்த்து கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. “குறும்பொறை உணங்கும் தகர் வெள்ளென்பு கடுங்கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் கல் நடுங் கவலைய கானம் நீந்தி” (அகம் 345, 1719) இது பற்றி விளக்கம் அளித்த ஒரு தமிழ் அறிஞர், ஒட்டகம் எலும்பை தின்பதாக புலவர் கூறி இருப்பது செவி வழி செய்தியாக தோன்றுகிறது. ஒட்டகம் எலும்பை தின்பது உண்மையன்று என்று எழுதி உள்ளார்.

ஆனால், கால்நடை மருத்துவ நோய் தீர்ப்பியல்படி, ஒட்டகம் எலும்பை தின்னும் என்பது உண்மையே. தனது உணவின் மூலம் போதுமான அளவு பாஸ்பரஸ் தாது சத்து கிடைக்காவிட்டால், ஒட்டகம் எலும்பை தின்று இக்குறையை போக்கி கொள்ளும் என்பது உண்மையே. இந்நோய் இன்றும் இந்தியாவில் ஒட்டகம் அதிகமுள்ள ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் காணப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் , பிகானீரில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் ஒட்டக ஆராய்ச்சி நிலையத்தில் இந்நோய் பற்றிய பல ஆராய்ச்சிகள் செய்ய பட்டுள்ளன. ஆகவே, பண்டைய தமிழ் புலவர்கள் ஒட்டகம் பற்றி பாடியுள்ள பாடல் அறிவியல் பூர்வமாக சரியானதே.

No comments:

Popular Posts