Tuesday 31 December 2019

ஒவ்வொரு மனிதனும் ஒரு மர்ம நாவலே!

ஒவ்வொரு மனிதனும் ஒரு மர்ம நாவலே! -ராஜேஷ்குமார் | எந்த ஒரு குற்றம் நடைபெற்றாலும் சரி, அந்த குற்றம் எதற்காக நடைபெற்றது என்பது மூன்று காரணங்களுக்குள் அடங்கி விடும். பணம், பெண், பகை என்பதுதான் அந்த மூன்று. பொதுவாக இந்த மூன்று காரணங்களைத் தவிர வேறு எந்த ஒரு காரணமும் இருக்காது. இந்த மூன்றையும் வைத்துதான் நான் குற்றவியல் புதினங்களை கடந்த 50 வருட காலமாக எழுதி கொண்டு இருக்கிறேன். நான் மட்டுமல்ல இந்த உலகத்தில் எந்த மொழியில் யார் எழுதுவதாக இருந்தாலும் சரி, அந்த எழுத்தாளரும் இந்த மூன்று காரணங்களை வைத்துதான் ஒரு குற்றவியல் புதினத்தை எழுத முடியும்.

வெகு அரிதாக இந்த மூன்று காரணங்களையும் தாண்டி வேறு சில காரணங்களுக்காகவும் குற்றங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன என்பதை நான் என்னுடைய புதினங்களில் சொல்லியிருக்கிறேன். அதற்காக நிறைய படிக்க வேண்டியிருந்தது. இதையும் தாண்டிய நாளிதழ்களில் ஒரு குற்றச் செய்தி வந்து விட்டால், அந்த செய்தியில் உள்ள உண்மைத் தன்மைகளை தெரிந்து கொள்ள மருத்துவம், விஞ்ஞானம், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட வல்லுனர்களைப் போய் பார்த்து தகவல்களை சேகரிக்க வேண்டியிருந்தது.

நாளிதழ்களில் வரும் குற்றச் செய்திகள் படிப்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் சில செய்திகள் மட்டும் அடிமனதை நெருடும். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டு இருக்கும் ஒரு நபரின் தோற்றத்தையும் அவர் குற்றவாளியாய் இருக்க முடியாது என்பது எனக்குள் ஒரு பொறி தட்டும். அவர் குற்றவாளி இல்லையென்றால் வேறு யார் குற்றவாளியாக இருக்க முடியும் என்று யோசிப்பேன்.

அந்த யோசிப்பு சிறிது சிறிதாய் ஒரு குற்றவியல் கதைக்கான கருவாய் மாறும். அந்தக் கருவை அடிப்படையாய் வைத்து கொண்டு ஒரு சிறுகதையையோ நாவலையோ எழுதி முடித்து விடுவேன். செய்தித்தாள்களில் வரும் செய்திகளை காட்டிலும் என்னுடைய வாசகர்களும், வாசகிகளும் என்னுடைய வீடு தேடி வந்து அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை சொல்லும்போது அந்தச் சம்பவங்கள் கதைகளில் வரும். கற்பனை சம்பவங்களைக் காட்டிலும் பிரமிப்பை உண்டாக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

அந்த பிரமிப்புதான் என்னைக் குற்றவியல் புதினம் எழுதும் ஓர் எழுத்தாளராக மாற்றியது. 1980-களில் மிகவும் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் மட்டுமே பத்திரிகைகளில் நாவல்களையும் தொடர் கதைகளையும் எழுதி வந்தார்கள். சரித்திரக் கதைகளை எழுதுவதில் சிலர் சக்கரவர்த்திகளாக திகழ்ந்தார்கள். சமூக நாவல்களை திறம்பட எழுதிய ஆண் எழுத்தாளர்களும், பெண் எழுத்தாளர்களும் பெரும் புகழ் பெற்று விளங்கினார்கள்.

இவ்வளவு புகழ் பெற்ற எழுத்தாளர்களையும் மீறி நான் எழுதுவதில் காலூன்றி நிலைத்து நிற்க வேண்டுமென்றால் அவர்கள் தொடாத துறை எதுவென்று யோசித்து குற்றவியல் புதினம் எழுதும் துறையைத் தேர்ந்து எடுத்தேன். எழுதவும் ஆரம்பித்தேன்.

ஆனால் குற்றவியல் புதினம் எழுதுவது எவ்வளவு கடினமான ஒன்று என்பதைப் போகப் போக புரிந்து கொண்டேன். சமூக சரித்திரம் சம்பந்தப்பட்ட கதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கும் என்னைப் போன்ற குற்றவியல் புதினங்களை எழுதும் எழுத்தாளர்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதை உணர்ந்தேன். அதாவது சமூக, சரித்திர கதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்குத் தேவையான, ஏராளமான விஷயங்கள் இந்த சமூகத்தில் நிறைந்து காணப்படுகின்றன. அவர்களின் எல்லை பெரியது. ஆனால் குற்றவியல் கதைகள் எழுதும் எழுத்தாளர்களின் எல்லை குறுகியது.

இந்த குறுகிய எல்லைக்குள்தான் அந்த குற்றவியல் புதின எழுத்தாளர் தன்னுடைய சாம்ராஜ்யத்தை நிறுவியாக வேண்டும். அப்படியே சாம்ராஜ்யத்தை நிறுவி ஆட்சி செய்தாலும் இந்த எழுத்துலகத்தில் உள்ள சிலர் குற்றவியல் கதைகளில் இலக்கியம் இல்லை என்று குறுக்கே சுவர் எழுப்புகிறார்கள்.

அவர்கள் உண்மையை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

தமிழில் முப்பெரும் காப்பியங்கள் என்று நாம் கொண்டாடி மகிழ்கின்ற மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் இந்த மூன்றும் குற்றவியல் சம்பவங்களால் நிறைந்து காணப்படுபவை. மண், பெண், பொன் என்ற மூன்றின் மேல் மனிதர்களுக்கு தகாத ஆசை ஏற்படக்கூடாது என்பதற்காகவே படைக்கப்பட்ட காலத்தால் அழியாத இதிகாசங்கள். மண்ணுக்காகவும், பெண்ணுக்காகவும் இரண்டு மிகப்பெரிய போர்கள். பொன்னுக்காக கோவலன் கொலையுண்டு ஒட்டு மொத்த மதுரையையும் தீக்கிரை.

சகுனி, பொற்கொல்லனைப் போன்ற வில்லன்களும் கூனி மந்தரை போன்ற வில்லியும் அன்று படைக்கப்பட்ட இந்த மூன்று காப்பியங்களிலேயே வாழ்ந்து காட்டி விட்டு போயிருக்கிறார்கள்.

நம் தமிழ் கலாச்சார அடிப்படையை வைத்து பார்க்கும்போது உலகின் முதல் பாலியல் பலாத்காரம் கவுரவர் சபையிலே திரவுபதி துகில் உரியப்பட்டதுதான். அதே போல் உலகின் முதல் பெண் கடத்தல் ராவணன் மாறு வேடத்தில் வந்து சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திக் கொண்டு போனதுதான். தன் கணவன் கோவலன் அநியாயமாய் கொலை செய்யப்பட்டதால் வெகுண்ட கண்ணகி மதுரையை தீயால் எரித்தது உலகின் முதல் வன்முறை.

மகாபாரத்தில்தான் எத்தனை சூழ்ச்சிகள்? எத்தனை சதித்திட்டங்கள்? எத்தனை பொய்யுரைகள்?எல்லாவற்றுக்கும் மேலாக சூதாட்டம், அதுவும் மனைவியை பணயம் வைத்து ஆடுகிற சூதாட்டம் உச்சபட்ச குற்றம். ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தைக் கொல்ல நேரிட்டால் அதற்காக சொல்லப்படும் அர்த்தபுஷ்டியான ஒரு பிளாஷ்பேக். திருதராஷ்டிரனுக்கு கண் பார்வை இல்லாத காரணத்தால் குருசேத்திரத்தில் நடக்கும் போரை அரண்மனையின் ஓர் அறைக்குள்ளே இருந்தபடி எதிர்புற சுவற்றில் காட்சிகளாக விரிகின்ற போர்க்கள சம்பவங்களை நேரடி ஒளிபரப்புப் போல் வர்ணனை செய்யும் சஞ்சயன். பீஷ்மரின் மரணத்திற்கு காரணமான திருநங்கை சிகண்டி.

மகாபாரதத்தில் நேர்மறையான கதாபாத்திரங்கள் எவ்வளவு இருக்கிறதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் எதிர்மறையான பாத்திரங்களும் இருக்கின்றன. அதனால்தான் மகாபாரதத்தை நாம் எவ்வளவு முறை படித்தாலும் நமக்கு அலுப்பதே இல்லை.

அதேபோல்தான் ராமாயணமும் குற்றச் சம்பவங்களால் ததும்பி நிற்கிறது. கைகேயி கேட்கும் வரம், தசரதனின் மரணம், ராமனின் வனவாசம், வாலி வதம், சூர்ப்பனகையின் அங்க பங்கம், அனுமனின் வாலில் தீ வைத்ததால் லங்கா தகனம், சேது பாலம், ராவணனிடம் இருந்து சீதையை மீட்டு எடுத்து அயோத்திக்கு வந்ததும் குடிமக்களில் யாரோ ஒரு நபர் பேசிய பேச்சைக் கேட்டு ராமன் தன் மனைவி சீதையை சந்தேகப்படுவது, சீதை தீக்குளிக்க முன் வருவது. இப்படி ராமாயணத்தில் எந்த ஒரு சம்பவத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு குற்றவியல் அம்சம் ஒளிந்து இருப்பதால்தான் ராமாயணம் இன்றளவும் மக்களால் படிக்கப்படுகிறது. தொலைக்காட்சி திரைப்படங்கள் மூலமாக பார்க்கப்படுகிறது.

மூன்றாவது காப்பியமான சிலப்பதிகாரமும் இந்த விஷயத்தில் சற்றும் சளைத்தது அல்ல.

தன் மனைவி கண்ணகி அழகுப் பெட்டகமாய் வீட்டில் இருக்கும்போதே மாதவியுடன் தொடர்பு வைத்து இருந்த கோவலன் போன்றவர்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏதாவது வியாபாரம் செய்து வாழ்க்கையை செழிப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தன் நகைகளை கழற்றிக் கொடுக்கும் இன்றைய காலத்து பெண்களைப் போலவே சிலப்பதிகாரத்தில் வாழ்ந்த கண்ணகியும் இருந்திருக்கிறாள்.

அடுத்தவன் மீது அபாண்டமாய் திருட்டுப் பட்டம் சூட்டும் இன்றைய காலத்து அரசியல்வாதிகளைப் போலவே அன்றைக்கும் ஒரு பொற்கொல்லன் இருந்திருக்கிறான். அதேபோல குற்றம் செய்யாத ஒரு நபரை நிரபராதி என்று நிரூபிக்க ஒரு திறமையான வக்கீல் வாதம் செய்து ஒரு சாட்சியத்தின் மூலம் நிரூபிப்பதைப் போல் கண்ணகியும் பாண்டியனின் அரசவையில் சொற்போர் புரிந்து தன் சிலம்பை உடைத்து தன்னுடைய கணவன் நிரபராதி என்பதை உறுதிப்படுத்துகிறாள்.

இவ்வாறு மக்கள் விரும்பிக் கொண்டாடும் முப்பெருங்காப்பியங்களும், ‘மண், பெண், பொன்’ மீது மக்கள் பேராசை வைத்து அழிந்து போய் விடக்கூடாது என்பதற்காகவே எழுதப்பட்டவை. இதை இலக்கியம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

ஆனால் இன்றைக்கு நான் எழுதும் குற்றவியல் புதினங்கள் எவ்வித ஆபாசமும் இன்றி ஒரு நல்ல செய்தியோடு எழுதப்பட்டாலும் எழுத்துலகில் இருக்கும் ஒரு சிலர் அதை மாற்றான் தாய் பார்வையோடு பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

நாம் அன்றாடம் எத்தனையோ மனிதர்களை பார்க்கிறோம். ஒரு சிலரை நல்லவர் என்று நம்பி பழகிக் கொண்டிருப்போம். ஒரு கட்டத்தில் அவர் அவ்வளவு நல்லவரில்லை என்கிற விஷயம் தெரிய வரும்போது அதிர்ந்து போகிறோம். அவரா இப்படி? என்று வியப்பின் உச்சிக்கே போய் விடுகிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மனிதனின் மனமும் ஒரு மர்ம நாவலைப் போன்றது. அவர்களோடு நெருங்கி பழகியபோதுதான் அவருடைய மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. நான் பல தரப்பட்ட மனிதர்களைப் பார்த்து விட்டேன், பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அதனால்தான் என்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுத முடிந்தது. எழுதிக் கொண்டும் இருக்க முடிகிறது.

No comments:

Popular Posts