Saturday 28 December 2019

வெற்றிக்கு இரண்டு திறன்கள்

வெற்றிக்கு இரண்டு திறன்கள் | சோம வள்ளியப்பன் | கு ருபிரசாத் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இவருடைய பெயரை கூகுளில் தேடினால், பல பக்கங்களுக்கு தகவல்கள், புகைப்படங்கள் வருகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த குருபிரசாத் இப்போது, நாடு முழுவதும் மட்டுமல்ல உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் பிரபலம். சச்சின் தெண்டுல்கரை விரும்புகிறவர்கள், கவனிக்கிறவர்கள் பாராட்டும் நபர் ஆகியிருக்கிறார், குருபிரசாத்.

சில நாட்களுக்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோள், ‘இந்த நபர் இருக்கும் இடம் தெரியவில்லை. இவரை சந்திக்க விரும்புகிறேன். நெட்டிசன்கள் எனக்கு உதவ முடியுமா?’ என்பதுதான். சச்சின் சந்திக்க விரும்பும் நபர்தான், குருபிரசாத்.

கிரிக்கெட் உலகில் பெரும் சாதனையாளர், பலகோடி ரசிகர்களை பெற்றிருக்கும் ஒரு பிரபலம், இப்படி வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு குருபிரசாத் என்ன செய்துவிட்டார்? நிகழ்ந்தது இதுதான். 2001-ம் ஆண்டில் இலங்கையுடனான கிரிக்கெட் தொடர் பந்தயத்தின் ஒரு போட்டி சென்னையில் நடந்து இருக்கிறது. அப்போது விளையாட வந்திருந்த அணி வீரர்களில் ஒருவரான சச்சின், நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, அங்கு பாதுகாவலராக வேலை செய்துகொண்டிருந்த குருபிரசாத் என்பவர், அவர் மிகவும் விரும்பி ரசிக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரரான சச்சின் அவருடைய அறையை விட்டு வெளியே வந்து லிப்டில் போக காத்திருப்பதைப் பார்த்திருக்கிறார்.

சச்சினை நெருங்கிய குருபிரசாத், “நான் உங்கள் ரசிகன். எனக்கு உங்கள் கையெழுத்து வேண்டும்” என்று கேட்டிருக்கிறார். சினேக பாவத்துடன் சச்சின் ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருக்கையில், “ஒரு நிமிடம் உங்களுடன் கிரிக்கெட் குறித்து பேசலாமா?” என்று கேட்டிருக்கிறார். “ம் .. சொல்லுங்கள்” என்றிருக்கிறார் சச்சின்.

“நீங்கள் ‘எல்போ கார்டு’ அணிந்து மட்டையை சுழற்றும் போது, அது உங்களுக்கு இடையூறாக இருக்கிறது. அதன் காரணமாக நீங்கள் அவுட் ஆகிறீர்கள். அந்த கார்டின் வடிவத்தை மாற்றி அமைக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார். சச்சினுக்கு வியப்பு. “உலகிலேயே நீங்கள் ஒருவர்தான் இந்த விஷயத்தை சரியாக கவனித்து சொல்கிறீர்கள்! எப்படி? என்று கேட்டிருக்கிறார்.

“நான் உங்களுடைய தீவிர ரசிகன். நீங்கள் அவுட்டாகும் விதங்களை, அந்த குறிப்பிட்ட பந்துவீச்சுகளை பதிவு செய்து, பலமுறை ‘ரீவைண்ட்’ செய்து பார்ப்பேன். அப்போது இதை கவனித்தேன்” என்று சொல்லியிருக்கிறார். சச்சின் உடனே அவரது அறைக்குப் போய், அந்த ‘எல்போ கார்டு’ வடிவத்தை மாற்றியமைத்து பார்த்திருக்கிறார். பின்னர் அது நிரந்தரமாக மாற்றியமைக்கப்பட்டு சச்சினுக்கு பலனுள்ளதாக அமைந்திருக்கிறது. அதனால்தான் சச்சின் அவரது டுவிட்டர் பக்க வேண்டுகோளுக்கு, ‘ஒரு தற்செயலான சந்திப்பு மறக்க முடியாதது ஆகலாம்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். அப்போதே குருபிரசாத் இந்த நிகழ்வை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சச்சினின் டுவிட்டர் வேண்டுகோளை பார்த்த குருபிரசாத்தின் உறவினர் ஒருவர், தகவல் சொல்ல, இப்போது சேதி, அதே ஓட்டல் நிர்வாகம் மூலம் சச்சினுக்கு போய்விட்டது. சச்சின் குருபிரசாத்தை சந்திக்கவிருக்கிறார்.

குருபிரசாத்துக்கு இப்போது தனிமதிப்பு, பாராட்டுகள், புகழ். தவிர சச்சினுடனான அறிமுகம். இவையெல்லாம் எப்படிக் கிடைத்தன?

படிப்பில், தொழில், வியாபாரத்தில், வேலையில், கலைகளில் என்று பலரும் செய்யும் எதிலும் வெற்றிபெற விரும்புகிறோம். குருபிரசாத் பெற்றிருக்கும் இந்த வாய்ப்பும் வெற்றியும் சில செய்திகளை உள்ளடக்கியிருக்கின்றன. நுணுகிப் பார்த்தால் அவற்றைக் கண்டுபிடிக்கலாம்.

எவ்வளவோ நபர்கள் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள். சிறந்த ஆட்டக்காரர்களின் அபிமானிகளாக இருக்கிறார்கள். குருபிரசாத் ரசித்ததுடன் தொடர்பானவற்றை உன்னிப்பாக கவனித்திருக்கிறார். நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்திருக்கிறார். இப்படி ஒரு வாய்ப்பு வரும் என்று திட்டமிட்டு செய்யவில்லை. அவருடைய ஈடுபாடு காரணமாக அப்படித் தெரிந்துகொண்டிருக்கிறார்.

பொழுதுபோக்கிற்காக பார்ப்பதிலும் கூர்மை இருந்திருக்கிறது. விவரம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் இருந்திருக்கிறது. இரண்டாவதாக, ஒரு சந்தர்ப்பம் தற்செயலாக கிடைத்தபோது அதை தவறாமல் பயன்படுத்தும் தைரியமும் சச்சினையே ‘ம்.. சொல்லுங்கள்’ என்று கேட்கவைக்கும் அளவு இங்கிதமாக பேசவும் முடிந்திருக்கிறது.

ஆர்வம் காரணமாக மட்டுமே ஒரு வேலையைச் செய்து, உலக அளவில் கவர்ந்து ஈர்த்த மற்றொரு தமிழரின் பெயர் நினைவுக்கு வருகிறதா? ஆம். நாசாவுக்கே, விக்ரம் லேண்டர் விண்கலம், சந்திரனில் விழுந்த இடத்தை சுட்டிக்காட்டிய பொறியாளர் சண்முகா சுப்பிரமணியன் செய்த வேலை நினைவுக்கு வரலாம். சண்முகா சுப்பிரமணியன் அவருடைய ஆர்வமான விண்வெளி குறித்து தொடர்ந்து பார்த்தும் படித்தும் தெரிந்து கொண்டிருந்தவர் விக்ரம் லேண்டர் எங்கே விழுந்திருக்கும் என்பதை எவரிடமும் கேட்டுக் கொள்ளாமலேயே அவராகவே மிக நுட்பமாகவும் தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்து கண்டுபிடித்திருக்கிறார்.

குருபிரசாத்தால் சச்சின் பெற்றிருக்கும் பலன்கள் குறைவானதல்ல. அந்த யோசனை காரணமாக ‘எல்போ கார்டு’ வடிவமைப்பை மாற்றி, அதனால், பல சந்தர்ப்பங்களில் அவுட் ஆவதைத் தவிர்த்து, ஓட்டங்கள் குவித்து, வெற்றி, பணம், புகழ் எல்லாம் பெற்றிருக்கிறார். சச்சின் வெற்றிகரமானவராக இருப்பதற்கான காரணங்களில் சிலவற்றை இந்த நிகழ்வின் மூலமும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

சச்சினுக்கு உதவிய அந்த மாற்றம் நிகழ்ந்தது எப்படி? சச்சினுக்காக வேலை செய்யும், அதற்காக சம்பளம் பெறும் பல வல்லுனர்கள் சொல்லாததை, அப்படிப்பட்ட ‘காப்பான்’கள் தயாரிக்கும் நிறுவன வல்லுனர்கள் கண்டுகொள்ளாதவைகளை, ஒரு ரசிகர் கண்டறிந்து சொல்லியதால் அது சாத்தியமானது. ஒரு சாதாரண ரசிகரிடம் இருந்த அந்த பலன்தரும் யோசனை பிரபலமான சச்சினை அடைய முடிந்தது எப்படி? தங்கியிருக்கும் விடுதியின் பாதுகாப்பு பணியாளரை கேட்டால் ஆட்டோகிராப் போட்டுக் கொடுப்பது பல பிரபலங்களும் செய்வதுதான். ஆனால், அடுத்து கிரிக்கெட் குறித்து நான் ஒன்று உங்களுக்கு சொல்லட்டுமா என்று அப்படி ஒரு மனிதர் கேட்க, ‘ம்.. சொல்லுங்கள்’ என்று கேட்டுக் கொள்ளும் மனப்பாங்கு சச்சினுக்கு இருக்கிறது. சாதாரண ரசிகர் சொல்லும் ஆலோசனையை கேட்டுக்கொள்ள சம்மதிப்பது, கேட்டுக்கொள்வது, ஏற்றுக்கொள்வது, வெளிப்படையாக பாராட்டுவது, அந்த ஆலோசனையை நடைமுறைப்படுத்துவது, நினைவு வைத்து, அது குறித்து பொதுவெளியில் எழுதுவது, நன்றி சொல்வது, சந்திக்க விரும்புவது என்று, சச்சினிடம் இருக்கும், வெற்றியை உறுதி செய்யும், குணநலன்களும் பண்புகளும் ஏராளம்.குறிப்பாக செய்வதென்பதையும், அக்கறையுடன் செய்வதும் சொல்லப்படும் ஆலோசனைகளை கேட்பதும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் இரண்டு குண நலன்கள்.

No comments:

Popular Posts