Tuesday 31 December 2019

3 தலைநகரங்கள் சாத்தியமா?

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் அபரிமிதமாக வெற்றியை பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில், தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டைப்போல 3 தலைநகரங்கள் இருக்கும் என்று அறிவித்துள்ளது, நாடு முழுவதும் இது சாத்தியமாகுமா?, நடைமுறையில் நிறைவேற்றக்கூடியதா?, இதன் பலன் என்ன? என்பதுபோன்ற பலத்த சிந்தனை அலைகளை உருவாக்கிவிட்டது. ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதி பிரிக்கப்படவேண்டும் என்று பல ஆண்டுகளாக பெரிய போராட்டங்கள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து, 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலமாக உருவாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறி, நாட்டில் 29-வது மாநிலமாக தெலுங்கானா உருவெடுத்தது. இதன்கீழ் மொத்தம் உள்ள 23 மாவட்டங்களில், ஆந்திராவுக்கு 13 மாவட்டங்களும், தெலுங்கானாவுக்கு 10 மாவட்டங்களும் என பிரிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் தலைநகராக இருக்கும் என்றும், அதற்குள் ஆந்திரா ஒரு தனி தலைநகரத்தை கட்டி உருவாக்கிவிடவேண்டும் என்றும் அந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், அமராவதியில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி செலவில் புதிய தலைநகரை உருவாக்க, இதற்கு முன்பு இருந்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பெரும் முயற்சி எடுத்து வந்தார். 53 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தலைநகரம் உருவாக்கப்படவேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெற்றவுடன், அமராவதியை தலைநகராக்க தொடர்ந்து கட்டமைப்பு முயற்சிகள் மேற்கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்போது ஜெகன்மோகன் ரெட்டி ஒரு தலைநகரம் என்ன?, 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டில் 3 தலைநகரங்கள் இருக்கின்றன. அதுபோல, ஆந்திராவிலும் மாநிலத்தின் வளர்ச்சியை பரவலாக்க 3 தலைநகரங்கள் அமைக்கப்படும். நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட விசாகப்பட்டினம் நகரம் நிர்வாக தலைநகரமாக அதிக முதலீடுகள் இல்லாமல் அமைக்கப்படமுடியும். அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதிமன்ற தலைநகரமாகவும் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். இதற்காக ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.நாகேஸ்வரராவ் தலைமையில், பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை பெற கடந்த மாதமே ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. அதிலும் ஏறத்தாழ இந்த 3 தலைநகர முடிவுக்கு ஆதரவாகவே பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோல, மற்றொரு நிபுணர் குழுவும் இந்த கருத்துரு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவித்துள்ளார்.

3 தலைநகரங்கள் என்றால், முதல்-மந்திரி எங்கு தங்கி இருப்பார். நிர்வாக தலைநகரத்திலா?, சட்டமன்ற தலைநகரத்திலா? என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. கர்னூலை பொறுத்தமட்டில், 1953-ம் ஆண்டு முதல் 56-ம் ஆண்டுவரை கர்னூல்தான் முதல் தலைநகரமாக இருந்தது. தெலுங்கானா, ஆந்திரா, ராயலசீமா பகுதிகளை ஒருங்கிணைத்தபிறகு, 1956-ல் ஐதராபாத் தலைநகரமானது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் தலைநகரமாக மும்பையும், துணைத்தலைநகரமாக நாக்பூரும் செயல்படும் முன்னுதாரணம் இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சி பரவலாக்கப்படவேண்டும் என்ற நோக்கில் ஜெகன்மோகன் ரெட்டி எடுத்துள்ள முயற்சி வெற்றி பெற்றால், பல மாநிலங்கள் இதை பின்பற்றுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., திருச்சியை தமிழ்நாட்டின் தலைநகரமாக்க வேண்டும் என்று அறிவித்து, அது பலத்த சர்ச்சைக்குள்ளாகி பின்பு அந்த எண்ணம் கைவிடப்பட்ட வரலாறு தமிழ்நாட்டில் இருக்கிறது. எனவே, இது சாத்தியமா?, சாத்தியமில்லையா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

No comments:

Popular Posts