Tuesday 31 December 2019

சூப்பர் கிங்ஸ் அணியின் சுபயோக ஜாதகம்

சூப்பர் கிங்ஸ் அணியின் சுபயோக ஜாதகம் | சாத்தான்குளம், அப்துல் ஜப்பார். | இன்னொரு ஐ.பி.எல். குதூகலத் திருவிழா தொடங்கப்போகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை பல சாதகமான சூசகங்கள் தென்படுகின்றன. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் குத்தகை நீடிக்கப்பட்டுவிட்டது. தமிழக கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அறியப்படும் சீனிவாசன் சுக்கானை கையில் பிடித்திருக்கவில்லை என்றாலும் அவரது மகள் தான் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகி இருக்கிறார். நிர்வாகணீ; அனுபவங்கள் ஏராளம். “கோல்ப்” வீராங்கனையும் கூட!

பூட்டிக்கிடக்கும் 12 ஆயிரம் இருக்கைகளுக்கும் வெகு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது. அது நடந்து விட்டால் சேப்பாக்கின் தோற்றப் பொலிவே வியக்கத்தக்க வகையில் மாறிப்போகும். உலக கிரிக்கெட் வரை படத்தில் இந்தியாவுக்கென ஒரு தனி இடம் பெற்றுத்தந்ததில் சீனிவாசனின் பங்கு மிக மிக அதிகம். சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்குப்பின்னால் டோனியும், பிளமிங்கும், ஏனைய வீரர்கள் மட்டும் காரணமல்ல. இவர்களை கட்டிக்காத்து அனுசரணையாக, ஆதரவாக, கண்டிப்பும் கருணையும் ஒருசேர இமயம்போல் உயர்ந்து நிற்கும் சீனிவாசனும் தான்.

டோனி விளையாட வருவாரா? மாட்டாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதற்கு டோனியும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல தகுதி படைத்தவர்களும் நாசூக்காக நழுவிக்கொண்டார்கள். கடைசியில் நான் வீரனாக மட்டுமல்ல கேப்டனாகவும் வருகிறேன் என்று ஊரறிய உலகறிய பிரகடப்படுத்தியும் விட்டார். சூப்பர் கிங்ஸ் அணியினரின் உற்சாகம் உச்சத்தில் எதிரணிக்கு கலக்கம் அடிவயிற்றில்!!!

சூப்பர் கிங்ஸ் அணிக்கு “பாட்டையாக்கள் பட்டாளம்” என்றொரு செல்லப்பெயர் உண்டு. ஏறக்குறைய எல்லோருமே மத்திய வயதைத் தாண்டியவர்கள் என்பது சொல்லப்படும் காரணம். அதனால் என்ன ஓர் ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றி விடக்கூடிய வல்லமை படைத்தவர்கள் அல்லவா இந்த “முதியவர்கள்”. ஷேன் வாட்சன், பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, வெய்ன் பிராவோ, ஜடேஜா என்பவர்களே போதும் ஓர் ஆட்டத்தை வெல்ல!!!

பந்துவீச்சில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், புதிதாக வாங்கப்பட்ட சாம் கர்ரன், ஹேசில் வுட் ஆகியோர் இதற்கு முந்தைய ஆண்டுகளில் தங்கள் திறமைகளை சந்தேகத்துக்கே இடமில்லாமல் நிரூபித்தவர்கள். இதில் பியூஷ் சாவ்லாவின் நிலை தான் புரியாத புதிராக இருக்கிறது. அவரது “ஆடும் காலம்” ஏறக்குறைய “சுபம்” போட வேண்டிய அளவுக்கு வந்துவிட்ட நிலையில் ஆறே முக்கால் கோடி ரூபாயை கொட்டிக்கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்திருக்கிறது சூப்பர் கிங்ஸ்!. நட்பு நிமித்தம் டோனி பிடித்த கடும் பிடிதான் சாவ்லாவுக்கு இந்த புதுவாழ்வை பெற்றுத்தந்திருக்கிறது என்று கிரிக்கெட் வட்டாரம் சொல்கிறது. ஓர் அணிக்கு இவரையும் சேர்த்து ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஏன் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில். சேப்பாக் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு இசைவானது. எனவே வருமுன் காக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று இதை கருதலாம்.

அணியில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே தமிழகத்தினர் இருக்கிறார்கள் என்றாலும் உணர்வு பூர்வமாக தங்கள் சொந்த அணி போல் ஏற்று இதய சிம்மாசனத்தில் இடம் கொடுத்து அமர்த்தி இருக்கிறார்கள் தமிழக மக்கள். சரி, இதெல்லாம் இருக்கட்டும் கோப்பையை யார் தட்டிச்செல்வார்கள்? இதிலென்ன சந்தேகம்? நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ்தான் !!!!!

No comments:

Popular Posts