Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

காந்தப்புலத்தை உணரும் திறன் மனிதர்களுக்கு உண்டா?

பூமியில் வாழும் சில உயிரினங்கள் பூமியின் காந்த சக்தியை உணரும் தன்மை கொண்டவை. உதாரணமாக சில பறவைகள், மீன்கள் மற்றும் பாலூட்டிகளுக்கு அத்திறமை உண்டு. இதன்மூலம் அவை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய் கின்றன.

அதுபோல மனிதர்களுக்கும் காந்தப் புலம் உணரும் திறன் உள்ளதா? என்று அறிய ஆய்வுகள் நடந்தன. இதில் மனிதர்களுக்கும் அந்தத்திறன் உள்ளதாகவும் அவர்களால் பூமியின் காந்த சக்தியை உணர இயலும் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால் அந்தத் திறமை உள்ளவர்கள் தம்மிடம் அந்தத் திறமை உள்ளது என்பதை அறிவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது:

பேரடே கூண்டு (Faraday Cage) என்னும் மின் சுருள்கள் சுற்றப்பட்ட ஒரு அலுமினியம் கூண்டினுள் 34 மனிதர்கள் இருட்டறையில் உட்கார வைக்கப்பட்டனர். எல்லா மின் சமிக்ஞைகளும் கூண்டின் உள்ளே வராமல் தடுக்கும் வகையில் இந்த கூண்டு அமைந்திருந்தது. இந்த ஒரு தனிப்பட்ட வடிவமைப்பின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு காந்தப் புலத்தை உருவாக்கினர். அந்தக் காந்தப் புலத்தின் சக்தி பூமியின் காந்தப்புலத்திற்கு ஈடாக இருந்தது. ஆராய்ச்சியாளர்களால் அந்த சுருள்கள் இடையே மின் மாற்றங்களை வேறுபடுத்த முடியும். மேலும் அவர்கள் விருப்பப்படி காந்தப் புலத்தை திசைதிருப்பவும் முடியும். ஒவ்வொரு மனிதனின் தலையிலும் ஒரு தொப்பி போடப்பட்டு அதன்மூலம் அவர் மூளையின் செயல்பாடுகளை, காந்தப்புலம் திசை திருப்பப்படும் போது ஏற்படும் மாற்றங்களையும் பதிவு செய்தனர்.

அந்தப் பதிவுகளை, ஏற்கனவே பதிவேற்றப்பட்ட திசை மாற்றப்படாத காந்தப்புலம் தேர்வு பதிவுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். இதில் அந்தக் குழு ஆல்பா அலைகளைக் கவனித்துப் பார்த்தது. ஒரு மனிதன் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து இருக்கும்போது மூளையில் நியூரான் களின் உதவியில் உருவாகும் அலைகளே ஆல்பா அலைகள். இவ்வகை அலை சமிக்ஞைகள் மனிதனின் ஐந்தறிவுகளில்- முகர்தல், வாசித்தல், கேட்டல் அல்லது தொடுதல் என்னும் உணர்வுகளை அடையும்போது மறைந்தன. எனவே ஆல்பா அலைகள் குறையும் போது மனிதனின் மூளையின் செயல்பாடு நடக்கிறது. காந்தப்புலன் உதவியால் மூளை சில தகவல்களை பெற்று அதன்படி நடக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.

அந்த 34 நபர்களில், அவர்களிடையே காந்தப்புலம் மாற்றப்படும்போது நான்கு மனிதர்களிடம் ஆல்பா நிலையில் மாற்றம் காணப்பட்டது. ஆல்பா அலை குறையும் தன்மை மூளையின் செயல் திறன் உடன் இணைந்து இருந்தது. இதுவே அசையாமல் இருக்கும் மனிதர் உடலுடன் இருக்கும் மூளைக்குத் தெரிவிக்கிறது.

பரிசோதனைகள் மூலம் மனிதர்கள் இடையேயும் காந்தப்புலம் உண்டு, அதை உணரும் சக்தி இருக்கிறது என்பதைக் கூறினாலும் அது எப்படி நடக்கிறது என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. மிருகங்கள் மற்றும் பறவைகள் இடையே எப்படி அந்த காந்தப்புலம் உணரும் திறன் நடக்கிறது என்பதையும் விஞ்ஞானி களால் முழுவதும் அறியமுடியவில்லை.

ஆனால் தற்போது இரு கோட்பாடுகள் மூலம் இப்படி இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஒரு கோட்பாட்டின்படி கண்ணின் விழித்திரையில் உள்ள கிரிப்டோகுரோம் (Cryptochrome) என்னும் சிறப்பு புரதம் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பி காந்தப்புலம் பற்றி தகவல் தருகிறது என்று கூறுகின்றனர்.

இன்னொரு கோட்பாட்டின்படி மேக்னடைட் (Magnetite) என்னும் மிக நுண்ணிய காந்தத் துகள்கள் மூலம் இத்தகவலை தெரிவிக்கலாம் என்பதே. ஏனெனில் மனிதனின் மூளையில் இவ்வகை நுண்துகள்கள் மிகப்பரவலாக இருப்பதை ஏற்கனவே கண்டுள்ளனர். அந்தப் பரவலான அளவு, மூளையில் ஒரு உயிரியல் திசைகாட்டியாக செயல்பட முடியும் என எண்ணுகின்றனர்.

ஒருவருக்கு காந்தப்புலம் உணரும் திறன் இருந்தாலும் அது அவரது ஆழ்மனது நடத்தையில் மாற்றம் செய்யுமா?, அதனை மூளை எப்படி உபயோகிக்கும்? என்பதுபோன்ற பல கேள்விகள் உள்ளன. இதுகுறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்திவருகிறார்கள்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement