Thursday 19 September 2019

அது இந்தி நாள் என்றால், எது தமிழ் நாள்?

அது இந்தி நாள் என்றால், எது தமிழ் நாள்?

சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை.

இ ந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தான் ஒரே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். அப்படி இருப்பது தான் உலக அளவில் இந்தியாவை ஒருமுகமாககாட்டும் என்று தன்னுடைய வலைத்தளத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

அது இந்தி நாள் அன்று வெளியிடப்பட்டது என்பதைத் தவிர அதற்கு வேறு முக்கியத்துவம் ஏதும் இல்லை என்றும் முன்னாள் உள்துறை அமைச்சர்களும் இப்படி அந்த இந்தி தினத்தில் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர் என்றும் இப்போது சமாதானம் சொல்லப்படுகிறது.

இந்தி தினமென்று ஒரு மொழிக்கு மட்டும் ஒரு தினத்தை வைத்துக்கொள்வது ஒரு சமமற்ற தன்மைதான். செப்டம்பர் 14-ந்தேதி இந்தி தினம் என்றால் எது தமிழுக்கான தினம்? எது இந்தியாவின் பிற மொழிகளுக்கான தினங்கள்?. இந்தி அலுவல் மொழியாக இருக்கிறது. அப்படியானால் இணை அலுவல் மொழியாக இருக்கிற ஆங்கிலத்துக்கு ஏதேனும் தனியாக ஒரு தினம் இருக்கிறதா? ஒரு குறிப்பிட்ட மொழியை மேம்படுத்துவதற்காக இப்படி அரசு ஒரு தினத்தை குறிப்பது வெறுமனே வாழ்த்துச் சொல்லும் சடங்கோடு முடிவடைந்துவிடாது. அந்த மொழிக்கு அரசின் பணத்தில் இருந்து அதாவது மக்களின் வரிப்பணத்தில் இருந்து மேலும் மேலும் நிதி ஒதுக்குவதற்கும் இந்த இந்தி தினம் உதவும். இதனை அமித்ஷா செய்திருப்பது என்பது மட்டுமல்ல வேறு யார் செய்து இருந்தாலும் அது தவறானது தான்.

இந்தி எதிர்ப்புக் குரல் என்பது தமிழ்நாட்டில் இன்று தான் புதிதாக எழுகிறதா? பல இந்தி போராட்டங்களை தமிழகம் கண்டு இருக்கிறது. அப்போது எல்லாம் காங்கிரஸ் அரசு தானே பெரும்பான்மையாக இருந்து இருக்கிறது. மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசை எதிர்த்து தானே 1965-ல் அத்தனை பெரிய போராட்டம் தமிழகத்தில் நடந்தது. ஆனால் நாம் பா.ஜ.க. அரசுக்கு எதிராக செயல்படுகிறோம் என்பது உண்மை அல்ல. இந்தி திணிப்புக்கு எதிராகவே தமிழகம் எப்போதும் களத்தில் நிற்கிறது என்பது தான் உண்மை.

இந்திக்கு மட்டும் தனிச்சிறப்பு வழங்கப்படுவது எதனால் என்று கேட்டால் அது பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி என்கிறார்கள். அந்த பெரும்பான்மை மக்கள் என்னும் தொடருக்குள் பல்வேறு கிளை மொழிகளை, பேசும் மக்களின் எண்ணிக்கையும் உள்ளடங்கி இருக்கிறது. அவர்கள் சொல்வதை அப்படியே உண்மை என்று எடுத்துக்கொண்டாலும் 35 சதவீத மக்கள் இந்தி பேசும் மக்கள் என்றால் 65 சதவீத மக்கள் இந்தி பேசாத மக்கள் தானே? எது பெரும்பான்மை என்பதை இப்போது அவர்கள் சொல்லட்டும்.

இப்படி பெரும்பான்மை வாதம் பேசும் அவர்கள் வெறும் 25 ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்துக்கு ஏன் வரிப்பணத்தை கொட்டி கொடுக்கிறீர்கள் என்று கேட்டால் அது தொன்மையான மொழி என்கிறார்கள். இந்தி என்று வருகிற போது பெரும்பான்மைவாதம் முன்னிறுத்தப்படுகிறது, சமஸ்கிருதம் என்று வந்தால் தொன்மை வாதம் முன்னிறுத்தப்படுகிறது. சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்றால் தமிழ் தொன்மையானது இல்லையா?.

நான் கேட்பது இந்தி இருக்கும் இடத்துக்கும், சமஸ்கிருதம் இருக்கும் இடத்துக்கும் தமிழைக் கொண்டு வாருங்கள் என்பது இல்லை. இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணை ஏற்றுக் கொண்டுள்ள 22 மொழிகளுக்கும் சமத்துவம் கொண்ட இடத்தை வழங்குங்கள் என்பது தான்.

நாம் நம் தாய் மொழிக்காக மட்டும் பேசவில்லை. இந்திய மொழிகளின் சமத்துவத்துக்காகவே குரல் கொடுக்கிறோம். நம்மீது எந்த ஒரு மொழியும் திணிக்கப்படக்கூடாது என்பதைப் போலவே தமிழ்மொழியும் பிறர் மீது திணிக்கப்படக் கூடாது என்றே அவரவர் ஆசைப்படுகிறோம். அவரவர் தாய் மொழியில் அவரவர் செயல்படுவதற்கு அனுமதி வேண்டும். அந்த நிலை வரும் வரை ஆங்கிலமும் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பது தான், அன்றும் இன்றும் என்றும் தமிழ்நாட்டின் கொள்கை.

எனவே தேசிய இனங்களின் உரிமைகளுக்கும், மாநில சுயாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரான குரலை, அரசின் குரலை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

No comments:

Popular Posts