Saturday 28 September 2019

விக்ரம்: அனுபவ பாடங்கள்

விக்ரம்: அனுபவ பாடங்கள்

விக்ரம் லேண்டர்

முனைவர் மயில்சாமி அண்ணாதுரை,

துணைத்தலைவர்,

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம்.

ஜூ லை, ஆகஸ்டு மாதங்களையும் தாண்டி செப்டம்பர் மாதத்திலும் இந்திய செய்தி ஊடகங்களை சந்திரயான்-2 நிரப்பி இருந்தது. இந்தியாவின் இரண்டாவது நிலவு பயணந்தான் அது.

சந்திரயான்-2 2019 ஜூலை 22-ந் தேதி மதியம் 2.31 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கிளம்பியது. படிப்படியாக தனது பயண வழியை மாற்றியும், உயர்த்தியும் ஆகஸ்டு 20-ந் தேதி காலை 9.30-க்கு நிலவைச் சுற்றிய நீள்வட்ட பாதையை அடைந்தது. செப்டம்பர் 2-ந் தேதி சந்திரயான்-2 ஆர்பிட்டர் விக்ரம் என்ற நிலவின் தரையைத் தொடுவதற்காய் கட்டமைக்கப்பட்ட கலனைத் தன்னிடமிருந்து பிரித்து விட்டது.

அடுத்த நாள், செப்டம்பர் 3-ந் தேதி ஆர்பிட்டரை 95-க்கு 100 கி.மீ. என்றும், விக்ரமை இரு கட்டங்களில் நிலவைச் சுற்றிய 35 கி.மீ.க்கு 100 கி.மீ. என்ற நீள்வட்ட பாதைக்கும் மாற்றினர் நம் அறிவியலாளர்கள்.

இந்த நிலவு பயணத்தின் கடைசி கட்டமாக, செப்டம்பர் 7-ந் தேதி அதிகாலை 1.40 மணியளவில் நிலவின் தரையிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் நிலவைச் சுற்றி வரும் வண்ணம் பயணித்த விக்ரம், தன்னுடன் பிரக்யான் என்ற ஆறு சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு மெதுவாகவும், பத்திரமாகவும் நிலவின் தென் துருவத்துக்கு அருகில் தரை தொட்டு 1.55 மணி அளவில் இறங்கும் வண்ணம் தன் பயணத்தை தொடங்கும் வண்ணம் பணிக்கப்பட்டது. முன்பே விக்ரமின் கணினியின் மூளையில் ஏற்றப்பட்ட கட்டளைகளின் படி, தானியங்கி முறையில் அதன் பயணம் தொடங்கியது.

விக்ரம் நிலவைத் தொடும் அந்த தருணம் இந்தியாவின் விண்வெளி சரித்திரத்தில் தென் துருவத்திற்கு அருகே, மனிதனால் செய்யப்பட்ட கலன் ஒன்றை மெதுவாக இறக்கிய முதல் நாடாக இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்ற காத்துக்கொண்டிருந்தது.

அந்த இறுதிக்கட்ட டிக் டிக் 15 நிமிடங்களின் வினாடிகள் நகர நகர, எந்த தருணத்தில் எந்த வேகத்தை அடைய வேண்டும் என்று முன்னரே கணித்து குறிக்கப்பட்டிருந்த பச்சை நிற கோட்டின் மேல் விக்ரமின் பயணம் கட்டித்தழுவிய படி சென்றது.

விக்ரமின் வேகம் எதிர்பார்த்த படி குறைந்து கொண்டே வந்தது.

நடு இரவு தாண்டிய அதிகாலை என்பதையும் பொருட்படுத்தாது 130 கோடி இந்திய இதயங்களும் தங்களின் லப் டப் துடிப்புடன் அந்த நிகழ்வை உன்னிப்பாய் பார்த்துக்கொண்டு நிலவைப் பத்திரமாக தொடும் அந்த தருணத்திற்காக காத்துக்கொண்டிருந்தன.

11 நிமிடங்கள் 38 வினாடிகள் கடந்த நிலையில், நிலவின் தரைக்கு மேல் 2.6 கி.மீ. இருக்கும் போது, விக்ரமின் பயணத்தில் மெதுவாக ஒரு தடுமாற்றம் காணத்தொடங்கியது.

விக்ரமின் வேகம் குறைவதற்கு பதில், வேகம் கூட ஆரம்பித்தது. விஞ்ஞானிகள் சுதாரிக்கும் முன், நிலவின் தரைக்கு அருகே வேகமாய் 335 மீ தூரத்தை அடைந்து, தான் பூமிக்கு அனுப்பிக்கொண்டிருந்த சமிக்ஞைகளை நிறுத்தி நிலவின் தரை தொட்டு விழுந்தது. பல இதயங்கள் துடிக்க மறந்தன. இந்தியா ஸ்தம்பித்தது.

சந்திரயான்-2 பயணத்தின் முதல் பின்னடைவை உலகமே பார்த்தது.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 99 மீட்டர் தாண்டிய நிலையில், தவறி விழுந்த இளையனாய், விக்ரம் நிலவின் தரையில் அடுத்து 14 நாட்கள் இந்திய விண்வெளி ஆய்வகமும், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வகமும் பல முறை, பல பல வகைகளில் தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களிலிருந்தும், நிலவைச் சுற்றி வரும் சந்திரயான்-2 செயற்கைக்கோளின் உதவியுடனும், அமெரிக்காவின் நிலவுக் களத்தின் வழியாகவும் முயற்சித்தும் விக்ரமை உயிர்ப்பிக்க முடியவில்லை.

மெதுவாக நிலவில் இறங்க வேண்டிய விக்ரம் நிலவின் தரையில் நிலைகுலைந்து விழுந்திருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்த மக்களின் பார்வை இப்போது வேறு விதமாக திரும்பியுள்ளது.

சந்திரயான்-2வின் திட்டம் இப்போது சந்திரயான்-1 போல் ஆகிவிட்டது. இந்தியா சந்திரயான்-2 திட்டத்திற்கு இதுவரை செய்த செலவு கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்.

திட்டத்திற்காக உழைத்த விஞ்ஞானிகளின் ஊதியம், தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களை உபயோகித்தது, விண்வெளி ஆய்வுக்களத்தின் கட்டுமான மற்றும் சோதனை கூடங்களில் செலவழித்த நேரங்களுக்கான பணம் போன்றவற்றை சேர்த்தால் சந்திரயான்-2க்கான மொத்த செலவு இன்னும் கூடும். மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு செலவு இதற்கு தேவையா?

இது ஒரு வெற்று பெருமைக்கா? இந்த பின்னடைவில் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன? என்ற கேள்வி பட்டியலும் பலரால் முன்வைக்கப்படுகிறது. அறிவியல் ஆய்வுகளை வழக்கமாக போடும் லாப நஷ்ட கணக்குகளை மனதில் கொண்டு எடை போடுவது சரியில்லை தான். இருந்தாலும் சந்திரயான்-2 திட்டத்தால் கிடைத்த பயன்களை, “எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்ற முறையில் சிந்தித்து பார்க்க இங்கு சில விதைகளைத் தூவுகிறேன். முதலில் சந்திரயான்-2 திட்ட வரையறையில் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்கள்.

1. சந்திரயான்-1-ன் நிலவு பற்றிய கண்டுபிடிப்புக் களை உறுதிப்படுத்துவது.

2. நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மெதுவாகவும், பத்திரமாகவும் இறங்கி நிலவின் தரையில் ஆய்வுகளை மேற்கொள்வது.

3. இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஆர்வமும், எழுச்சியையும் ஊட்டுவது.

இந்த மூன்று குறிக்கோள்களில் எந்த அளவு நிறைவேறியிருக்கிறது அல்லது நிறைவேற வாய்ப்புள்ளது என்பதைப் பார்ப்போமா?

முதலாவது குறிக்கோள், சந்திரயான்-2ன் ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி ஐந்து வருடங்களுக்கு மேல் பணி புரிய வாய்ப்பிருப்பதாலும், சந்திரயான்-1ஐ விட திறன் வாய்ந்த அறிவியல் கருவிகள் இருப்பதாலும், சந்திரயான்-1க்கு பிறகு இந்தியாவில் மிகப்பல இளம் அறிவியலாளர்கள் உருவாகி இருப்பதாலும், சர்வதேச மூத்த அறிவியலாளர்கள் பலரும் கூட இப்போது நமது திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவதாலும், சிறப்பாக நிறைவேற மிகுந்த வாய்ப்புள்ளது என்பதை நாம் உணர முடியும்.

மூன்றாவது குறிக்கோள் எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே நிறைவேறியுள்ளது என்பதை இந்த கட்டுரையின் முகப்பில் நாம் பார்த்த இந்தியர்களின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்த காட்சி நிறைவேறிவிட்டது. இரண்டாவது குறிக்கோளான நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மெதுவாகவும், பத்திரமாகவும் இறங்கி நிலவின் தரையில் ஆய்வுகளை மேற்கொள்வது என்பதில் முழு வெற்றி கிட்டவில்லை. காரணம், குறிப்பிட்ட இடத்தில் விக்ரமால் பத்திரமாக தரையிறங்க முடியாமல் போனதுதான்.

முன்பே பார்த்தபடி ஜூலை 22-ந் தேதி பிற்பகல் 2.43-லிருந்து செப்டம்பர் 7, அதிகாலை 1.51:36 வரை விக்ரமின் நீண்ட நெடிய பயணத்தில் எல்லாம் சரியாக நடந்திருந்தாலும், முத்தாய்ப்பான மூன்று நிமிடங்கள் விக்ரமை தடுமாறச் செய்து நிலவின் தரையில் படுக்க வைத்து பூமியுடனான தொடர்பைத் துண்டித்த போது முழுமையான வெற்றியை இந்தியா தவறவிட்டு விட்டது.

இந்த சறுக்கல் ஏன் என்பதை முழுமையாக ஆராய்ந்து இந்திய விண்வெளி ஆய்வகம் அடுத்த நிலவுப் பயணத்தில் முழு வெற்றி பெற மனமார வாழ்த்துவோம்.

No comments:

Popular Posts