Sunday 14 April 2019

மக்கள் மனம் கவர்ந்த மாமேதை...!

மக்கள் மனம் கவர்ந்த மாமேதை...! டாக்டர் அம்பேத்கர் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் இ ன்று (ஏப்ரல் 14-ந்தேதி) டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள். பன்னெடுங்கால இந்திய வரலாற்றில், மனிதர்கள் தங்கள் மதங்களாலும், பண்பாட்டு நம்பிக்கைகளாலும், கலாச்சார வேறுபாட்டாலும் சக மனிதர்கள் மீது செலுத்திய சொல்லொண்ணா துயர்களை, இழிவுகளை, சாதி ஏற்றத்தாழ்வுகளை, சுரண்டல்களை, மனித தன்மையற்ற செயல்களை, பிரச்சினைகளின் அடிப்படையில் வீழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை மாற்றியமைக்க, வீரியமிக்க தன் அறிவுத்திறனால் நெஞ்சுறுதியோடு செயல்பட்டவர் டாக்டர் அம்பேத்கர். “யாரும் யாருக்கும் அடிமையில்லை. சாதி என்பது ஒரு வித மனநோய், தன்னை உயர்ந்தவனாகவும், பிறரை தாழ்ந்தவனாகவும் பார்ப்பவன் மனநோயாளி,” என்று சூளுரைத்து நவீன இந்தியாவிற்கான வடிவத்தை தந்தவர், “நவீன இந்தியாவின் தந்தை” புரட்சியாளர் அம்பேத்கர். சாதி ஏற்றத்தாழ்வு, வருணாசிரம அடுக்குகள் கடந்து இன்று எல்லோரது மனநிலையையும், வாழ்வையும் எப்படி இறுக பற்றிக் கொண்டிருக்கிறது என்று புரிய வைத்து அதற்கு எதிராக நம்மை தற்காத்துக்கொள்வதற்கான அரிய மருந்தாக புரட்சியாளர் அம்பேத்கர் இன்றும் திகழ்கிறார். பொது சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை பற்றி பேசுவது இன்றும் கூட அவ்வளவு எளிதில் நிகழ்ந்துவிடுவதில்லை அல்லது புரிந்துகொள்ளப்படுவதில்லை என்னும் பட்சத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முன் இருந்திருக்கக் கூடிய நிலைமையை எண்ணிப் பாருங்கள். அன்னிய ஏகாதிபத்திய அடிமை முறைக்கு எதிராக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, அம்பேத்கரின் குரல் மட்டும் தான், சொந்த மக்கள் மீது இந்நாட்டு மக்கள் இத்தனை ஆண்டுகாலமாக செலுத்தி கொண்டு வந்த சாதி இழிவை, அடிமை முறையை போக்குவதை குறித்து ஒலித்துக்கொண்டிருந்தது. பல்வேறு எதிர்ப்புகள், பயமுறுத்தல்கள், கல் எறிதல், நேரடியான வன்முறை, சொந்த சமூக மக்களின் பழிதீர்ப்பு படலங்கள் என எதற்கும் அஞ்சாது, தான் கொண்ட கொள்கையிலிருந்து பின் வாங்காது தொடர்ந்து போராடினார். அம்பேத்கர் நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து கொண்டு அப்படியே லண்டன் சென்று பொருளாதார துறையில் முதுகலைப்பட்ட படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, பரோடா மன்னரின் நிதியுதவி திடீரென நிறுத்தப்பட்டதன் பேரில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பரோடா அரசாங்கத்திற்கு வேலை செய்ய இந்தியா திரும்பி வந்தார். லண்டன் சென்று படித்து வரும் தன்னை வரவேற்க யாரும் வரவில்லை என்று அவர் மனம் வருந்தவில்லை. அவருக்கும் ஏற்கனவே இந்தியாவின் மனம் தெரிந்தது தான். ஆனால் தான் தங்குவதற்கு கூட யாரும் இடம் தராமல் அலைக்கழிப்பார்கள் என்று அவர் சற்றும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தான் லண்டன் சென்று படித்து வருகிறோம், பரோடா அரசாங்கத்தில் நல்ல மதிப்புடைய பணி, தன் கையில் வாடகைக்கு எடுக்கும் அறைக்கு கொடுத்து விடக்கூடிய பணம், என எல்லாம் இருந்தும் தீண்டத்தகாதவன் என்ற காரணத்தினால் தங்குவதற்கு அறை கிடைக்காமல் பட்ட அவதி அவரை நிம்மதியிழக்க வைத்தது. பின் எப்படியோ தன்னை பார்சி என்று சொல்லி ஒரு பார்சி விடுதியில் தங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்கிறார். ஆனால் சில நாட்களில் அங்கும் “தீண்டத்தகாதவன்” என்று அவரை தெரிந்து கொண்ட பார்சிகள், “பார்சிகள் தங்கும் இடத்தில் ஒரு தீண்டத்தகாதவன் தங்கி புனிதத்தை போக்கிவிட்டான்,” என்று அவரை அடிப்பதற்கு பெரும் கூட்டம் கூடியிருக்க, அந்த கூட்டத்தின் முன் நின்று கொண்டிருந்தார் அம்பேத்கர். இந்த காட்சி அவருக்கு என்ன மாதிரியான மனநிலையை கொடுத்திருக்க முடியும் என்று யோசித்து பார்க்க வேண்டும். அப்போது அவர் மற்றவர்களை போல நல்ல உடை உடுத்தியிருந்தார், அரசு வேலை செய்து கொண்டிருந்தார், விடுதிக்கு கொடுக்க வேண்டிய பணம் அவருக்கு இருந்தது. அதிகப்படியான பணத்தை வாடகையாக கொடுத்துக் கொண்டிருந்தார். இவையெல்லாம், இருந்தும் அவர் எப்படி இந்துகளுக்கு “தீண்டத்தகாதவனோ”, பார்சிகளுக்கும் அப்படியே. இத்துணை அவமானங்கள் பட்டாலும், பெருந்துயர் அடைந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் தன் எழுத்தாலும், அயராத உழைப்பாலும், தீண்டத்தகாத மக்கள் அவர்களின் அடிமை நிலையை எப்படியாவது உணர்ந்து அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதில் மட்டும் விடாப்பிடியாகவே இருந்தார். தனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, கிடைக்காத பட்சத்தில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு தன் மக்களுடைய உரிமைகளை நிலைநாட்டினார். வேறெந்த தலைவர்களுக்கும் இல்லாத பெரும் பொறுப்பு அம்பேத்கருக்கு தன் மக்கள் மேல் இருந்தது. ஒரே நேரத்தில் சமூக தளத்திலும், அவர்களை அரசியல் தளம் நோக்கி அழைத்து செல்வதிலும் முனைப்போடு இருந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் பொறுப்புக்கு வந்த பின்பு, இந்து சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் தர மறுத்த நேரு தலைமையிலான சொந்த அரசை எதிர்த்து தன் பதவியை துச்சமென நினைத்து தூக்கியெறிந்தவர் அம்பேத்கர். குழந்தை திருமண தடை, பெண்ணின் திருமண துணையை அவளே தேர்ந்தெடுத்தல், விதவை மறுமணம், விவாகரத்து பெறும் உரிமை, பெண்ணுக்கும் சொத்தில் பங்கு இவைகள் தான் அம்பேத்கர் முன்மொழிந்த சட்ட வரைவு. ஆனால் இதை அப்போது இருந்த எதிர்கட்சிகள், ஆளும் அரசு என அனைவரும் எதிர்த்தனர். “இந்த சட்டங்களை நிறைவேற்ற முடியாத சட்ட அமைச்சர் பதவியே எனக்கு வேண்டாம்,” என தன் பதவியை முதன் முதலில் உலகிலேயே பெண்களுக்காக தூக்கியெறிந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் தான். இப்படியாகவே யாருக்கும், எவ்வித பயமுறுத்தலுக்கும் எப்போதும் அஞ்சாது, “நாய்கள் குரைப்பதால் பயணம் நின்று விடாது” என்ற பழமொழி போல, “எனது எதிராளிகள் என்ன சொன்னாலும் எனது கடமையை நான் செய்தாக வேண்டும்,” என்று அறிஞர் வால்டேர் சொன்னது போல, தன் காலத்தின் வரலாற்றை எழுதுகிறவன் தான் கூறிய ஒவ்வொன்றுக்காகவும், தான் கூறாத ஒவ்வொன்றுக்காகவும் தாக்கப்படுவதை, விமர்சிக்கப்படுவதை எதிர்பார்த்தாக வேண்டும். ஆனால், “சத்தியத்தையும், சுதந்திரத்தையும் நேசிக்கிறவனும், எதையும் எதிர்பார்க்காதவனும், எதற்கும் அஞ்சாதவனும், எதையும் கேட்காதவனும், அறிவுலகில் உண்மையைப் பேணி வளர்ப்பதன்றி வேறு எதற்கும் ஆசைப்படாதவனுமாகிய ஒருவனை இந்த சின்னஞ்சிறிய அற்பமான குற்றச்சாட்டுகள் ஊக்கமிழக்கச் செய்திடலாகாது,” என்ற புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் மனம் கவர்ந்த மாமேதையாக இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தான் போராடி பெற்ற சட்டங்களின் வாயிலாக எப்போதும் பிறந்து கொண்டேயிருக்கிறார்.

No comments:

Popular Posts