Thursday 10 January 2019

பணி வெளிநாட்டில், பாசம் தாய் நாட்டில்...!

பணி வெளிநாட்டில், பாசம் தாய் நாட்டில்...! கால்டுவெல் வேள்நம்பி (அமெரிக்க வாழ்தமிழர் ) இன்று (ஜனவரி 9-ந் தேதி) வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம். நமது தாயகமாம் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து கால் நூற்றாண்டுகள் அமெரிக்கா வாழ் தமிழ் குடிமகனாக வாழ்ந்து வருகிறேன். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்று பெரும் கவிஞர் கணியன் பூங்குன்றனார் படைத்த பாடல் வரியை முழுமையாக ஏற்றுக் கொண்ட நாடு அமெரிக்கா. அமெரிக்கா சென்றது கனவல்ல. என்னைப் போல் பல தமிழர்கள் பணத்துக்காக பஞ்சம் பிழைப்பதற்காக சென்றவர்கள்தான் ஏராளமாக இருப்பினும் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டனர். ஒரு சிலர் வாரத்தில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பல மணி நேரம் வேலை செய்தாக வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது சினிமா பார்ப்பது என இரண்டு நாட்கள் ஓடி விடும். மீதமுள்ள நேரங்களில் தான் தொலைபேசி மூலமாக தாயகத்தில் உள்ள உறவினர்களுடனும், நண்பர்களிடமும் உறவாட முடியும். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் மக்கள் தொகையில் தமிழர்கள் நான்காவது இடத்தில் இருக்கிறார்கள். இதில் சொந்தமாக தொழில் செய்பவர்களும், பல்வேறு அலுவலகத்தில் பணிபுரிபவர்களும் அடக்கம். உறவுகளை விட்டு நட்புகளை விட்டு புலம்பெயர்ந்த பின்பு குழந்தைகளின் சூழலும் கல்வியும் முக்கிய பங்காக இருப்பதால் தாயகம் செல்ல வேண்டும் என்று விரும்பினாலும் அது கடினமாக உள்ளது. இன்றைய சூழலில் அமெரிக்காவில் குடியுரிமை பெறுவது முக்கிய பிரச்சினை. அது வாங்க 10 ஆண்டுகள் வரை ஆகும். அதற்கு மேலும் ஆகலாம். குடியுரிமை கிடைத்ததும் மிச்சப்படுத்திய காசுகளில் பிறந்த மண்ணில் இல்லம் ஒன்று வாங்க வேண்டும் என்று விரும்புவோம். இப்படி சிக்கனமாக வாழும் வாழ்க்கையும் வேலைகளும் மனதினை இறுக்கமடைய செய்கிறது. மனைவி கர்ப்பமாக இருக்கும் போதோ அல்லது பிரசவத்தின் போதோ குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக பெற்றோர்களை அழைத்து வருவோம். ஆனால் அவர்கள் விரும்பியபடி அமெரிக்காவில் எங்கும் சுற்றிப்பார்க்க முடியாத சூழ்நிலையில் ஆறு மாதம் இல்லச் சிறை வாழ்க்கையில் வைப்பது தவிர்க்க முடியாதது. உலகில் எங்கு சென்றாலும் தன் வசதிகளை குறைத்துக்கொண்டு ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ்வது கடினம். புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் புதியதாக ஒரு வாழ்வாதாரத்தை உருவாக்க வேண்டியது அவசியமான ஒன்று. இன்று சீனர்கள் புலம் பெயரும் போது தாயகத்தில் உள்ள சொத்துகளை மொத்தமாக விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு வந்து அதனை வைத்து தொழில் தொடங்கி நல்ல பலன் அடைகின்றனர். பின்னர் தன்னுடைய தாயகத்தில் தொழிலைத் தொடங்கி வளமாக வாழும் வாழ்வினை நெறிப்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் தமிழர்களாகிய நாம் இதை உணர பத்தாண்டுகள் ஆகிறது. இருப்பினும் அன்பினை பகிர்ந்து கொள்கிறோம் நட்பினை உறவாக்கிக் கொள்கிறோம். தமிழின் பெருமை புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒரு பெரிய பலம். அங்கு மொழி மட்டும்தான் உறவுக்கு பாலமாக இருக்கிறது. தமிழர் இனம் என ஒன்றுபட்டு ஜாதி, மதம் கடந்து ஒற்றுமையான வாழ்வை நிறைவுடன் மகிழ்ந்து வாழ்கிறோம். அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது குடியுரிமை பிரச்சினை பூதாகரமாக தோன்றும். இதையெல்லாம் கடந்து தன்னம்பிக்கையுடன் தொப்புள்கொடி உறவுடன் உறவாடி வருகிறோம். சமுதாய நோக்கில் அமெரிக்கா ஒரு மூன்று தலைமுறைக்கு முன்னோக்கி உள்ளது. இதனால் புலம் பெயர்ந்தவர்கள் தாயகத்திற்கு வருவது குறைந்துவிட்டது. மற்றபடி இன்றைய சூழ்நிலையில் திறமை வாய்ந்தவர்களுக்கு ஏற்றவாறு ஒத்துழைப்பது வளர்ந்த நாடுகளின் தனித்துவம். தொழில் வாழ்க்கை அமைப்பு, இல்லற வாழ்க்கை அமைப்பு அனைத்தும் இருப்பினும் இறுகிய மனதை இளக செய்வது தாயகத்திலுள்ள உறவுகள், வாழும் பூமியில் உள்ள நட்புகள் மட்டுமே! இன்னும் முப்பது ஆண்டுகளில் பெரும் நிறுவனங்களில் நம் குழந்தைகள் அனைவரும் நல்ல ஒரு இடத்தினை அடைவது தவிர்க்க முடியாதது இதே காரணத்தினால் மட்டுமே புலம்பெயர்ந்தவர்கள் தாயகம் திரும்புவது கேள்விக்குறியே? எந்த ஊர் என்றாலும் நம்ம ஊர் போல வராது. 25 வருடங்கள் தமிழகத்தில் வாழ்ந்த வாழ்க்கைதான் எங்களின் ஆணிவேர். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, சினிமா, கோவில் திருவிழா, நாடகம், பொருட்காட்சி, அருங்காட்சி, சர்க்கஸ், அருகாமையில் அமைந்த மளிகை டீ கடை, அப்பா அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு விளையாடும் கிரிக்கெட், கில்லி தாண்டல், பம்பரம் பசிக்கும் நேரத்தில் வாங்கித் தின்னும் காலங்கள் என பசுமரத்தாணி போல பதிந்த நினைவுகள் அவ்வப்போது வந்து செல்லும். இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும் போதும் இந்தியாவிற்கு வந்து நினைவுகளை மனதிற்கு புதிய தெம்பினை வரவழைத்துக்கொண்டு மீண்டும் செல்லும் போது விமானத்தில் அனைத்து நினைவுகளையும் அசை போட்டுக் கொள்வதே எங்களுடைய உற்சாகத்தின் மருந்து. நாங்கள் பெற்ற இன்பங்கள்அனுபவித்த உல்லாச வாழ்க்கை எங்கள் தலைமுறைக்கு கிடைக்கவில்லை என்பது வருத்தமே. இருப்பினும் இந்த அனுபவங்கள் எங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ்ச் சங்கமும் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் பல்வேறு விழாக்களை நடத்தி வருகின்றன. இந்த விழாக்களில் பாரம்பரிய உடை அணிகலன் உணவு என அனைத்தையும் எங்களுடைய தலைமுறைக்கு தந்து தமிழர்களுடைய தொன்மையையும் தன்மையையும், மொழி, கலாச்சாரம், மரபு என தக்கவைத்து கொண்டிருக்கிறோம். அடிப்படைத் தேவைகள் வசதிகள் என அனைத்தும் நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு கிடைத்து எந்த வித மன உளைச்சல்களும் இல்லாமல் நிம்மதியுடன் வாழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

No comments:

Popular Posts