வெள்ளையர்களை துரத்திய பஞ்சாப் சிங்கம்
எம்.குமார், வரலாற்று ஆய்வாளர்
இன்று(28-ந் தேதி) லாலா லஜபதிராயின் பிறந்த தினம்.
நமது தேசத்தின் வரலாற்றை புரட்டி பார்த்தால் நாடு சுதந்திர காற்றை சுவாசிக்க போராடிய எண்ணற்ற தியாக தலைவர்களின் கண்ணீர் கதைகளை வேதனையுடன் எடுத்துக்கூறும். அந்த வகையில் வெள்ளையர்களின் பிடியில் இருந்து இந்தியா விடுதலை பெற முக்கிய பங்காற்றியவர் லாலா லஜபதிராய்.
வக்கீல் பணியை உதறிவிட்டு விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் லாலா லஜபதிராய். சமூக, சமய பண்பாட்டு மலர்ச்சிக்காவும் பாடுபட்டார். மக்களால் ‘பஞ்சாப் சிங்கம்’ என கம்பீரமாக அழைக்கப்பட்டவர். பஞ்சாபில் பிறந்த ராய், லாகூர் அரசுக் கல்லூரியில் சட்டம் பயின்ற பிறகு வழக்கறிஞராக பணியாற்றினார்.
1888-ம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரசுடன் தன்னை இணைத்துக் கொண்டார். 1905-ல் ஹர்சன் பிரபுவால் கொண்டு வரப்பட்ட வங்கப்பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியது. சுரேந்தர் நாத் பானர்ஜி, அரவிந்த கோஷ் ஆகியோருடன் இணைந்து சுதேசி இயக்கத்திற்காக தீவிரமாக போராடியவர்.
ஆங்கிலேய அரசின் அடக்குறைகளை கடுமையாக எதிர்த்தார். முழு அரசியல் விடுதலை மட்டுமே தீர்வு என முழங்கினார். ஆங்கிலேய அரசு இவரை கைது செய்து பர்மாவுக்கு நாடு கடத்தியது. இதை எதிர்த்து நாடே கொந்தளித்ததால் 6 மாதங்களில் விடுதலை செய்யப்பட்டார்.
காந்தி வருகைக்கு முன்பே இந்திய விடுதலை போராட்டத்தில் மூன்று முப்பெரும் தலைவர்கள் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். அவர்களை லால், பால், பால் என்பார்கள். அவர்கள் முறையே, லாலா லஜபதிராய், லோக் மானிய பாலகங்காதர் திலக், விபின் சந்திரபால் ஆவர்.
முதல் உலகப் போர் நடந்த போது அமெரிக்காவில் இருந்த அவர் ‘இந்திய ஹோம் ரூல் லீக் நியூயார்க்’ என்ற அமைப்பை துவக்கி அங்குள்ள இந்தியர்களின் ஆதரவை திரட்டினார். அமெரிக்க செனட் அவையில் 32 பக்க அறிக்கையை தாக்கல் செய்து ஆங்கிலேயர்களால் இந்தியர்கள் சந்திக்கும் அவலங்களை விவாதத்திற்கு உட்படுத்தினார்.
1919-ம் வருடம் பஞ்சாப் படுகொலைக்குப் பின் இந்தியர்களின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார். மேற்கு வங்கத்தில் அவர் விடுத்த போராட்ட கர்ஜனை ஆங்கில அரசை அதிர வைத்தது. அது இந்தியாவினுள் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 1921-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை பஞ்சாப்பில் திறமையாக நடத்தினார். அதற்காக 18 மாதம் சிறை வாசம் அனுபவிக்க நேர்ந்தது.
ஆனால் ‘செளரி, செளரா’ சம்பவம் காரணமாக காந்தி போராட்டத்தை கைவிட்டது அவருக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு ஆகியோர் தொடங்கிய சுயராஜ்ய கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். பூர்ண சுதந்திர தீர்மானத்தை முதன் முதலில் முன்மொழிந்த பெருமைக்குரியவர் லாலா லஜபதி ராய்தான்.
ராய் இந்து மதக் கோட்பாடுகளை தீவிரமாக நேசித்து வந்தார். ஆரிய சமாஜத்திலும் உறுப்பினராக இருந்தார். இன்றைய பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியான இந்து மகா சபாவிலும் ராய் உறுப்பினராகி தீவிரமாக செயல்பட்டு வந்தார். ஒரே மொழிதான் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் எனக்கூறியதுடன் இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டார்.
அரசியலமைப்புச் சட்ட சீர்திருத்தத்திற்கான சைமன் குழுவில் ஒரு இந்தியர் கூட இடம்பெறாதது நாடு முழுவதும் ஆவேச அலையை எழுப்பியது. அக்டோபர் 30, 1928-ல் லாகூர் வந்த சைமன் குழுவிற்கு எதிராக அமைதியான முறையில் லாகூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு ஜேம்ஸ் யு.ஸ்காட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டார்.
தடியடி என்ற பெயரில் ராயின் இடது மார்பில் பலமாக தாக்கினார்கள். ஆனால் தடியடியினால் கீழே விழுந்தபோதிலும் துளியும் அச்சம் கொள்ளாத லாலா லஜபதிராய் தொடர்ந்து கர்ஜித்தார். “என் மீது விழுந்த அடிகள் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்” என்றார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கேயே நவம்பர் 17, 1928 தனது மூச்சை நிறுத்திக் கொண்டார்.
இவரது மரணத்தால் இந்தியா கொதித்தெழுந்தது. ஆங்கிலேயர்களின் நாடாளுமன்றம் வரை இந்த மரணம் விவாதப் பொருளானது. மாவீரர் பகத்சிங் நண்பர்கள் குழு இதை சவாலாக ஏற்றது. தடியடி நடத்த உத்தரவிட்ட ஜேம்ஸ் யு.ஸ்காட்டிற்கு குறி வைத்தனர். ஆனால் தவறுதலாக சான்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுதந்திர போராட்ட வீரர் என்பதையும் தாண்டி பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் லாலா லஜபதிராய். பல நூல்களை படைத்துள்ளார். இவர் எழுதிய ‘யங் இந்தியா’ என்ற நூலை வெளியிடும் முன்னே இங்கிலாந்திலும், இந்தியாவிலும் ஆங்கிலேய அரசு தடை விதித்தது. இவர் எழுதிய ‘அன்ஹேப்பி’ இந்தியா என்ற நூல் ஆங்கிலேயர் ஆட்சியில் துன்புறும் இந்தியர்களின் நிலையை தெளிவாக எடுத்துக்காட்டியது.
சட்டமேதையாக, சமயப்பற்றாளராக, சிறந்த எழுத்தாளராக, அரசியல் தலைவராக, தியாகியாக என எல்லா துறைகளிலும் முத்திரை பதித்தவர். பஞ்சாப், இமாசல பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பெரு நகரங்களில் பல பிரதான சாலைகள், கட்டிடங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகளுக்கு இந்த தியாகச் செம்மலின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வீரகாவியம் படைத்த மாபெரும் தலைவர் லாலா லஜபதிராயை என்றென்றும் நினைவு கூறுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment