Saturday 26 January 2019

அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு சாதகமா? பாதகமா?

அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு சாதகமா? பாதகமா? ப டிப்படியாக உயர்ந்து வருகிறது தமிழக கல்வித்துறை. தனியார் வசம் இருந்த கிண்டர்கார்டன் எனப்படும் மழலையர் பள்ளிக்கூடங்களை சொந்தமாக்கி சாத்தியமாக்கி இருக்கிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. தனியார் பள்ளிகள் வசம் இருந்த தூண்டில் இந்த கே.ஜி. வகுப்புகள். 5 வயது நிறைவடைந்த பின்னர்தான் அரசு பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க முடியும் என்ற நிலை இருந்ததால், 3 வயதில் இருந்தே சமாளிக்க முடியாத குழந்தைகளை கே.ஜி. வகுப்புகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் எல்லா வீடுகளையும் எட்டிப்பார்க்க, அந்த நுழைவு வாயில் தனியார் பள்ளிகளின் முக்கிய வாயிலாகவே உள்ளது. ஏற்கனவே மழலையர்களுக்காக அங்கன்வாடி மையங்கள் சமூக நலத்துறை மூலம் இயங்கி வந்தாலும், அதில் தனியார் ஆங்கிலப்பள்ளிகளுக்கு நிகரான கல்வி வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் அதில் குழந்தைகளை சேர்க்க பொதுமக்கள் விரும்பவில்லை என்பதே உண்மையாக இருந்தது. ஆனால், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்ககோட்டையன் எடுத்த பல்வேறு திட்டங்கள் பள்ளிக்கல்வித் துறையை புது எழுச்சி கொள்ள வைத்தது. அவரால் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று, அங்கன்வாடி மையங்களை மழலையர் வகுப்புகளாக மாற்றுவது. இந்த திட்டம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை கடந்த விஜயதசமி நாள் வெளிக்காட்டியது. மாதிரி பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்ட எல்கே.ஜி. வகுப்புகளை பொதுமக்கள் பலரும் வந்து பார்த்து, அடுத்த ஆண்டு சேர்க்கைக்காக முன்பதிவு செய்து வரும் வேளையில், அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிக்கூடங்களுடன் இணைந்து இருக்கும் அங்கன்வாடி மையங்களை மழலையர் பள்ளிகளாக மாற்றி, வகுப்புகளையும் தொடங்கி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை. கடந்த 21-ந்தேதி வகுப்புகள் தொடங்கிய அன்று மாணவர் சேர்க்கை பரவலாக நன்றாகவே இருந்தது என்கிறது அதிகாரிகளின் புள்ளிவிவரங்கள். பெற்றோர் பலரும் பள்ளிக்கூடங்களுக்கு வந்து மழலையர் வகுப்புகள் செயல்பாடுகள் குறித்து கேட்டு செல் கிறார்கள். இனி இலவசமாக மழலையர் கல்வி கிடைக்கும் என்பது நடுத்தர பெற்றோருக்கும், நமது குழந்தைகளும் மழலையர் பள்ளிக்கு செல்லுமே என்கிற மகிழ்ச்சி ஏழை பெற்றோருக்கும்... ஆனால், ஆசிரியர்கள் மத்தியில் இன்னொரு வடிவில் பிரச்சினை எழும்பி உள்ளது. தொடக்கத்தில் அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, சமூக நலத்துறை மூலம் பணியில் சேர்ந்து தற்போது அங்கன்வாடி அமைப்பாளர்களாக இருக்கும் பணியாளர்கள் தங்களுக்கு ஆசிரியை பணி வர வாய்ப்பு உள்ளது என்று கருதினார்கள். காரணம், கடந்த சில ஆண்டுகளாக அங்கன்வாடி பணியாளர்களாக தேர்வு பெற்றிருப்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்கள். ஆசிரியை பயிற்சி முடித்தவர்களும் இருக்கிறார்கள். எனவே கல்வித்தகுதி அடிப்படையில் தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், மழலையர் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் என்ற முடிவு, அவர்களுக்கு மட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. மழலையர் பள்ளிகளுக்கு பணிநிரவல் முறையில் தற்போது ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 30 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் உள்ளது. இந்த விகிதாச்சாரத்தின் படி உபரியாக இருக்கும் ஆசிரியைகளை மழலையர் பள்ளிகளுக்கு அனுப்ப முடிவு செய்து, பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் அவர்களுக்கு ஊதிய பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு பாடம் எடுக்க செல்வதன் மூலம் தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலை வந்து விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த வாரமே பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியும் யாரும் உத்தரவை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் 21-ந்தேதி மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டபோது அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியைகள் யாரும் பணிக்கு வரவில்லை. எனவே மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பது சாதகமா? பாதகமா? என்கிற கேள்வி மக்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும், அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டு இருக்கிறது. மழலையர் வகுப்புகளுக்கு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தை அளிக்கிறது. ஆனால், அங்கன்வாடி மையங்கள் மூலம் உணவு, சத்துமாவு, முட்டை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 1-ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு 14 வகையான இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இருக்கிறது. புதிதாக தொடங்கப்பட்ட மழலையர் பள்ளிகளுக்கு இந்த இலவசங்கள் கிடைக்குமா? என்பது பெற்றோரின் கேள்வி. பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் குழந்தைகள் சென்றுவிட்டால், அங்குள்ள அங்கன்வாடி மையங்களில் எங்களுக்கு என்ன வேலை? நாங்கள் என்ன செய்வது? என்பது அங்கன்வாடி மைய பணியாளர்களின் கேள்வி. மழலையர் பள்ளிகளுக்கு என்று நியமிக்கப்பட்டு இருக்கும் ஆசிரியைகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குவார்கள்?. அவர்களை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் கட்டுப்படுத்த முடியுமா? அவர்களை வேறு வகுப்புகள் எடுக்க பயன்படுத்த முடியுமா? என்பது பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களின் கேள்வி. இதுவரை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்றுத்தந்து விட்டு, உபரி என்கிற காரணத்தால் மழலையர் பள்ளிகளுக்கு செல்பவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு விடுமுறை எடுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் குழந்தைகளை கவனிப்பார்களா?. இனி வரும் ஆண்டுகளில் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்தால் மீண்டும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரையான பள்ளிக்கூடங்களில் பாடம் எடுக்க அனுமதிக்கப்படுவார்களா?. அங்கன்வாடி மையங்கள் சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் இயங்குவதால், மழலையர் பள்ளிகளில் பணிக்கு சேரும் ஆசிரியைகளும் பள்ளிக்கல்வித் துறையில் இருந்து சமூக நலத்துறைக்கு சென்று விட வேண்டுமா? என்ற கேள்வி ஆசிரியர்களுக்கு. ஒன்றிய வாரியாக, பள்ளிக்கூடங்கள் வாரியாக இளையோராக இருக்கும் ஆசிரியர்களுக்கு அடுத்து அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும்போது நமக்கும் இதே நிலைதானா? என்ற கேள்வி. இப்படி கேள்விகளால் தங்களுக்கு பாதகமாக இருப்பதாக ஒருதரப்பு இருக்கிறது. எனவே தற்போது மழலையர் பள்ளிக் கூடங்கள் வெற்றிகரமாக இயங்க, அரசின் சார்பில் சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு என்று புதிதாக ஆசிரியைகளை தேர்வு செய்து பணியில் நியமித்து குழந்தைகளுக்கு சிறப்பான அடித்தளத்தை உருவாக்க வேண்டும். -முடிவேல் மரியா

No comments:

Popular Posts