22. ‘ஆயுதம்’ செய்வோம், ஆயத்தம் செய்வோம்

‘ஆயுதம்’ செய்வோம், ஆயத்தம் செய்வோம் ஆதிகால மனிதன் தீட்டப்பட்ட கல்லால் மரத்தை வெட்டினான், கூர்மையான ஈட்டியால் வலிமையான மிருகத்தை வீழ்த்தினான். சக்கரம் தயாரித்து அதை ஒரு வண்டியில் பொருத்தி வேகமாக இடம்பெயர்ந்தான். தீ வைத்துப் புதர்களை அழித்து விவசாயம் செய்தான். ஆயுதங்கள் செய்யத் தெரியாத சிங்கங்களும், யானைகளும், முதலைகளும் மனிதனிடம் தோற்றுப் போயின. பல ஆயிரம் உயிரினங்கள் பூமியில் வாழும் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்து போயின. தகுதி இருப்பதால்தான் மனிதன் உலகில் தொடர்ந்து நீடித்து வருகிறான். சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பயன்படுத்தியவர்களாலே போர்களில் வெற்றி பெற முடிந்தது. துப்பாக்கிகள் இருந்ததால்தான் கொலம்பசால் 1492-ம் ஆண்டு அமெரிக்காவின் பகாமாஸ் தீவை அடைய முடிந்தது. அமெரிக்கோ வெஸ்புஜி என்பவர் அங்கு மக்களைக் குடியேற வைத்ததும் துப்பாக்கிகளின் பலத்தால்தான். தென்அமெரிக்காவுக்கு வெறும் 550 வீரர்களுடன் சென்ற ஸ்பெயின் தளபதி கார்டீஸ், லட்சத்துக்கும் மேற்பட்ட அஸ்டெக் மெக்சிகோ வீரர்களை 1519-ம் ஆண்டு தோற்கடித்து ஸ்பானியர்களை குடியேற வைத்தார். சில ஆண்டுகள் கழித்து தென்அமெரிக்காவின் இன்கா என்ற பகுதியை பிரான்சிஸ்கோ பிஸ்ஸாரோ என்ற ஸ்பெயின் தளபதி வெறும் 168 வீரர்களைக் கொண்டு கைப்பற்றினான். கார்டீஸ் கையாண்ட அதே போர்த் தந்திரம்தான் இப்போதும் கையாளப்பட்டது. ஸ்பெயின் நாட்டுத் தூதுவன் என்று ஒரு பொய்யைச் சொல்லி, அரசன் அட்டஹலுபாவுடன் நட்புக் கொண்டு, அதற்குப் பிறகு அவனையே கடத்திச் சென்று தென்அமெரிக்காவைக் கைப்பற்றினான் பிரான்சிஸ்கோ. 1519-ம் ஆண்டு கார்டீஸ், அஸ்டெக் நாட்டில் கையாண்ட போர் உத்தி, 1532-ம் ஆண்டு, அஸ்டெக்குக்கு அருகில் இருக்கும் இன்கா நாட்டு அரசனைச் சென்றடையவில்லை போலிருக்கிறது. தெரிந்திருந்தால் எச்சரிக்கையாக இருந்திருப்பான். தகவல் எவ்வளவு விலை மதிப்பற்றது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். இன்றும் தகவல் வைத்திருப்பவர்களால்தான் உலகை ஆள முடிகிறது. கூகுள் நிறுவனம் ஒருநாள் முடங்கினால் உலகம் இருண்டுவிடும். ஈ-மெயில், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நிறுவனங்கள் தகவல்களை வைத்துக்கொண்டு நமது வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி, நம்மை ஆள்கின்றன. தகவல் தொழில்நுட்பம் சக்திவாய்ந்தது. நாகரிக உலகில் மனிதர்களை ஆள கல்லும், வில்லும், வேலும், துப்பாக்கியும் தேவையில்லை. அதற்குப் பதில், அறிவு, தொழில்நுட்பம், பொருளாதாரம், சமுதாயக் கட்டமைப்பு, வெளியுறவுக் கொள்கை போன்ற ஆயுதங்கள் இருந்தாலே போதும். இந்த ஆயுதங்களையே நீங்களும் தயாரிக்க வேண்டும். ‘கல்வி என்பது மிகப் பெரிய ஆயுதம். அதை வைத்துக்கொண்டு இந்த உலகையே ஆளலாம்’ என்றார் நெல்சன் மண்டேலா. இவர் 28 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது நூல்களைப் படித்துக்கொண்டிருந்தார். அறிவாலும் சிந்தனையாலும் தெளிவு பெற்ற இவரின் போராட்டத் தலைமையில் தென்ஆப்பிரிக்காவுக்குச் சுதந்திரம் கிடைத்தது. நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஒரு சிலர் மட்டுமே படிக்கலாம் என்ற நிலைமை இருந்ததால், இப்போதுதான் முதல் தலைமுறையினர் கல்லூரிக்குள் காலடி வைக்கிறார்கள். அவர்களில் சிலர் ஆயுதமும் ஏந்தி வருகிறார்கள். கல்வி அறிவுதான் ஓர் இளைஞனிடம் இருக்க வேண்டிய ஆயுதம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. கல்வி ஆயுதத்தைப் பிரயோகிக்கப் பழகினால் உலகில் எந்த நாட்டிலும் மரியாதை உண்டு என்பதை அந்த மாணவர்கள் உணர வேண்டும். மனிதனின் நிரந்தர ஆயுதம் அவனது உடல். இந்த உடலில்தான் அவனது மூளையும் இருக்கிறது. உணர்வுகளும், உணர்ச்சிகளும், குணங்களும் உடலோடு புதைந்து கிடப்பவை. உடலைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை சுவாமி விவேகானந்தரை விட சிறப்பாகக் கூறிவிட முடியாது. நம் நாட்டில், ஒரு மனிதனின் அனைத்துப் பலவீனங்களுக்கும் காரணம் அவனது பலவீனமான உடல்தான் என்றார் அவர். நமது உடல் நிலையானது அல்ல, குணம்தான் நிலையானது என்ற பரப்புரை பலமாக மேற்கொள்ளப்படுகிறது. உடல் பொய்யானது என்றும், தற்காலிகமானது என்றும் கற்பிக்கப்பட்டுவிட்டது. அப்படிப் பார்த்தால் எல்லாமே தற்காலிகமானவைதான். சூரியன் கூட ஒருநாள் வெடித்துச் சிதறும். எனவே இந்தப் பொய்யுரையைப் புறக்கணிப்பது நல்லது. நலமான உடலே அடிப்படையானது. நல்ல உறுதியான உடலை வைத்துத்தான் நற்பண்புகளை வளர்க்க முடியும். உடலை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தினர் ஜப்பானியர். அவர்களின் தற்காப்புக் கலையின் பெயர் கராத்தே. அதாவது, ‘வெறும் கை’. அதுவே ஆயுதம் ஆகிறது. நாம் ஏற்படுத்திக்கொண்ட உறவுகளும் நட்புகளும் நமக்கு இருக்கும் வலுவான ஆயுதங்கள் எனலாம். நமது பெற்றோர், சகோதர, சகோதரிகள், உறவினர்கள் நம்மை இதுவரை பத்திரமாகப் பார்த்துக்கொண்டவர்கள். நாம் ஓர் உயர் நிலையை அடைந்ததும் அவர்களது உறவை உதறிவிடுதல் ஆகாது. அவர்கள்தான் நமது ஆணிவேர், நம்மை ஏற்றிவிட்ட ஏணிகள். ஒருவேளை தீயவர்களின் சூழ்ச்சியால் அல்லது நமது தவறுகளால் நாம் வீழ்ச்சியுற்றால், நமக்குக் கைகொடுப்பவர்களும் இந்த உறவுகளும் நட்புகளும்தான். எனவே அவற்றை எப்போதும் புதுப்பிக்க வேண்டும். போர் ஆயுதங்களை வைத்திருந்தவர்கள் எல்லாம் போர்வீரர்களும் அல்ல, அவற்றை வைத்திருந்ததால் மட்டும் அவர்களுக்கு வெற்றி கிட்டவும் இல்லை. ஐரோப்பியர்கள் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் கொண்டுவந்தனர். படைக்கலன்கள் சர்வதேசச் சந்தையில் எளிதில் கிடைத்ததால் அவற்றை நம் நாட்டு அரசர்களும் வாங்கிக் கொண்டனர். அன்றைய நாள் உலகிலேயே பெரிய பணக்காரராகக் கருதப்பட்ட திப்பு சுல்தானிடம் எல்லாவிதப் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் இருந்தன. ஆனால் 1799-ம் ஆண்டு மே 4-ம் நாள் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த போரில் அவர் கொல்லப்பட்டார். அவரது படைகள் சிதறி ஓடின. அதற்குக் காரணம், நவீன போர்த் தளவாடங்களை அவரது வீரர்களால் கையாள முடியவில்லை. அதற்கு பயிற்சியும், போர்ப் பழக்கமும் இருந்திருக்க வேண்டும். அவருக்கு எதிரியாக நின்ற டியூக் ஆப் வெல்லிங்டன் என்ற போர்த்தளபதி மிகுந்த தைரியசாலி. வீரர்களுக்கு வீரன். பல போர்க்களங்களில் முதல் ஆளாக, வீரர்களுடன் தோளோடு தோள் நின்று போரிட்டவன். பின்னர் ஒருநாள், உலக மாவீரன் நெப்போலியனையே வீழ்த்தியவன். போர்க்களத்தில் நிற்பவர்களுக்கு பீரங்கியை விடப் பெரியது போர்ப்பயிற்சிதான். சரி, இன்றைய ‘போர்க்களத்தில்’ புகும்முன் நீங்கள் பெற வேண்டிய பயிற்சிகள் எவை? இதோ... தமிழ் மொழி, ஆங்கில மொழி இவற்றைச் சரளமாகப் பேசவும், எழுதவும் பழகிக்கொள்ளுங்கள். செய்தித்தாள்களைப் படித்து உலக நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளுங்கள். ஓடுதல், நீந்துதல், சைக்கிள் பயணம், கராத்தே போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுடன் பேச, ஒத்துழைக்கப் பழக வேண்டும். வருமானம் ஈட்ட, ஈட்டிய வருமானத்தைச் சேமிக்கக் கற்க வேண்டும். வாகனம் ஓட்ட, பழுதுபார்க்கத் தெரிந்துகொள்ள வேண்டும். வீட்டையும் தோட்டத்தையும் பராமரிக்க வேண்டும். நண்பர்களையும் உறவினர்களையும் உங்கள் படைவீரர்களாக மாற்ற வேண்டும். அவர்களை உங்கள் குழந்தைகளைப் போல நேசிக்க வேண்டும். ஏழைகள் பலருக்கு உதவிகள் செய்ய வேண்டும். பெரியதொரு நல்ல விஷயத்தை இந்தப் பூமிக்கு விட்டுச் செல்ல வேண்டும். நாகரிக உலகின் படைக்கலன்கள் தகவல், தொழில்நுட்பம், செயல்திறன், கனவு, கற்பனை, புதுமை, மனநலம், உடல்நலம், நல்ல உறவுகள், தொடர்புத் திறன், எளியவர் மீது அக்கறை போன்றவை. துப்பாக்கியை விடச் சக்தி வாய்ந்தது பேனா. நவீன ஆயுதக் கிடங்கு நூலகம். இந்தப் படைக்கலன்களைப் பயன்படுத்தி சிறந்த பயிற்சி எடுத்தால் இந்த உலகமே ஒரு விளையாட்டு மைதானமாக இருக்கும். வாழ்க்கைப் போர் கூட ஒரு திருவிழாவாக மாறும்.

Comments