Saturday, 5 January 2019

தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ

தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ அண்ணல்தங்கோ அருள்செல்வன், (அண்ணல்தங்கோவின் பேரன்) இ ன்று (ஜனவரி 4-ந் தேதி) தமிழறிஞர் அண்ணல்தங்கோவின் நினைவுநாள். தமிழறிஞர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் ஒரு அவையில் சொற்பொழிவாற்றும்போது, “அதோ வந்திருக்கிறார் அண்ணல்தங்கோ. இங்கே நான் பேசும்போது, எத்தனை வடமொழி, பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறேன் என்று எண்ணி எண்ணி, அதனை என்னிடம் குத்திக் காட்டவே வந்திருக்கிறார்” என்றாராம். அந்த அளவிற்கு வடமொழி தவிர்த்து, தூயத்தமிழே எங்கும் செயல்படவேண்டும் என செயல்பட்ட தமிழ்ப்புலி அண்ணல்தங்கோ. 1904-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி முருகப்பனார், மாணிக்கம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் அண்ணல்தங்கோ. அவர் பிறந்தபோது பெற்றோர் அவருக்கு சூட்டிய பெயர் சுவாமிநாதன். பிற்காலத்தில் தனித்தமிழ் பற்றுக்கொண்ட அவர், தம் பெயரை தாமே அழகிய தமிழில் “அண்ணல்தங்கோ” என மாற்றிக் கொண்டார். அதோடு தாம் சந்திக்கும் அனைத்து அறிஞர் பெருமக்களின் பிறமொழி, வடமொழி பெயர்களை தூயதமிழ் பெயராக மாற்றத் தலைப்பட்டார். கலைஞர் கருணாநிதி பெயரைக்கூட தூயதமிழில் “அருள்செல்வன்” என்று மாற்றினார் அண்ணல்தங்கோ. இது குறித்து கலைஞரே முரசொலியில் குறிப்பிடுவதாவது “என் கருணாநிதி என்ற பெயர் வடமொழிப் பெயராகும். அன்றைக்கு குடியாத்தத்தில் வடமொழி பெயர்களை எல்லாம் துறந்து தூயதமிழ் பெயர்களை நாமெல்லாம் சூட்டிக் கொள்ளவேண்டும் என ஒரு தனி இயக்கத்தையே நடத்தியவர் அண்ணல்தங்கோ. அவர் எனக்கு கடிதம் எழுதும் போதெல்லாம் அருள்செல்வன் அவர்களுக்கு என்றே குறிப்பிட்டு எழுதுவார். நான் அப்போது அறிஞர் அண்ணாவிடம் அண்ணல்தங்கோ என் பெயரை அருள்செல்வன் என மாற்றியுள்ளாரே, பெயரோடு தொடரலாமா என ஆலோசனை கேட்டபோது அண்ணா, திரைத்துறை, அரசியல்துறை, என அனைத்துத் துறைகளிலும் உன்பெயர் பரவிவிட்டது. இப்போது திடீரென நீ உன்பெயரை மாற்றிக்கொண்டால், குழப்பம் ஏற்படலாம் என என்னிடம் கேட்டுக்கொண்டதால் தான் நான் கருணாநிதியாக இன்று உங்களிடம் இருக்கிறேன். இல்லாவிட்டால் அண்ணல் தங்கோவின் அருள்செல்வனாகத்தான் தமிழகத்தில் வலம் வந்திருப்பேன்” என சான்றுரைக்கிறார். கிருபானந்தவாரியரை அருளின்பக்கடலார், கர்மவீரர் காமராசரை காரழகனார், நாராயணசாமியை நெடுஞ்செழியன், சி.பி.சின்ராஜை சி.பி.சிற்றரசு, இளமுருகு தனபாக்கியத்தை இளமுருகு பொற்செல்வி, தார்பிடோ ஜனார்தனத்தை மன்பதைக்கன்பன், மே.வீ.வேணுகோபாலபிள்ளையை மே.வீ.குழற்கோமான், ஜீவானந்தத்தை உயிரின்பன், அரங்கசாமியை அரங்கண்ணல் என இவர் தமிழ்படுத்திய பெயர்களின் பட்டியல் நீளும். இவரின் இளமை பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மதுரை கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, மதுரை வைத்தியநாத அய்யர் மற்றும் சிதம்பர பாரதியுடன் ஆறு மாதம் சிறை தண்டனை அடைந்தார். நாகபூர் கொடி போராட்டத்தில் ஈடுபட்டு, நாகபூர், பிடல், சாகர் சிறைகளில் ஒரு ஆண்டு கடும் தண்டனை பெற்றார். காந்தியைக் கொண்டு குடியாத்தத்தில் ஒரு மாபெரும் கூட்டத்தைக் கூட்டினார் அண்ணல்தங்கோ. சிலரின் சூழ்ச்சியால் தீண்டாமை ஒழிப்பு நன்கொடையை மட்டும் பெற்றுக்கொண்டு காந்தியார் குடியாத்தம் மேடையில் பேசாமலேயே சென்றுவிட்டார். இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த அண்ணல்தங்கோ காங்கிரசில் இருந்து விலகினார். தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு, தமிழர்நலம் காக்க “உலகத்தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவை” எனும் அமைப்பை, உலகத்தமிழர்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கத்துடன் தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தமிழ் அறிஞர்களை வேலூருக்கு அழைத்து வந்து, தை புத்தாண்டு நாள் தமிழ்த்தேசிய திருநாள் பொங்கல் விழாவினை வெகு சிறப்பாகக் கொண்டாடினார். 1927-ல் தமிழ்மண் வரலாற்றில் முதல்முறையாக தம் திருமணத்தை தாமே தலைமையேற்று, புரோகிதத்தை மறுத்து திருக்குறளை முன்மொழிந்து, சிவமணி அம்மாளை திருமணம் செய்துகொண்டது புரோகித மறுப்புத் திருமண வரலாற்றில் பெரும் புரட்சியாகப் பதிவு செய்யப்பட வேண்டியது. அண்ணல்தங்கோவே நூற்றுக்கணக்கான தமிழ் திருமணங்களை தலைமை தாங்கி நடத்தி வைத்ததை, பேராசிரியர் அன்பழகன் தாம் எழுதிய நூலான, “தமிழர் திருமணமும் இனமானமும்” என்ற நூலில் வானளவிப் புகழ்கிறார். தமிழர் நலம் காக்க “தமிழ்நிலம்” எனும் வார இதழை தொடங்கி நடத்தினார் அண்ணல்தங்கோ. தமிழ்நிலம் இதழில் பாரதிதாசன், கி.ஆ.பெ.வி., பாவாணர், திருக்குறள் முனுசாமி, கீ.ராமலிங்கனார், வெள்ளை வாரணனார், சி.பி.சிற்றரசு, மே.வீ.வேணுகோபாலபிள்ளை, அ.கி.பரந்தாமனார் பிற அறிஞர்களின் கட்டுரைகளைக் கொணர்ந்து தமிழ்நாட்டில் தமிழ் பரப்புவதற்கு பெரும் பங்காற்றினார். அண்ணல்தங்கோ பெரியார், அண்ணாவின் பொதுவுடமைக் கருத்துகளை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அவர்களின் திராவிடர் என்ற சொல்லோடு முழுமுரண்பாடு கொண்டிருந்தார். அவரை அண்ணா சமாதானம் செய்தார். இவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் 2008-ல் அன்றைய முதல்-அமைச்சர் கலைஞர் நாட்டுடமை படுத்தி தேசியமயமாக்கி அறிவித்து பெருமை சேர்த்தார். 1974 ஜனவரி 4-ந் தேதி அண்ணல்தங்கோ மறைந்தார். தேவநேயப்பாவாணர் அண்ணல் தங்கோவின் இறப்பையொட்டி ஒரு பெரும் இரங்கற்பாவை கதறியழுது வெளியிட்டார். அண்ணல்தங்கோவின் புகழ் இம்மண்ணில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

No comments:

Popular Posts