Friday 12 October 2018

முற்றிலும் சத்து வாய்ந்த முட்டை

முற்றிலும் சத்து வாய்ந்த முட்டை ரம்யா ராமச்சந்திரன், ஊட்டச்சத்தியல் நிபுணர் இன்று(அக்டோபர் 12-ந்தேதி)உலக முட்டை தினம். காலங்காலமாக உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் உணவில் முட்டைக்கு தனி இடம் உண்டு. முட்டை முற்றிலும் சத்து வாய்ந்த உணவு என்பது மருத்துவரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கும் உண்மை. ஞாபக சக்தி மேம்படவும், மூளை மற்றும் தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், பார்வை திறனுக்கும் முட்டை பல விதங்களில் உதவுகிறது. முட்டையின் நன்மைகளைப் பரவலாகத் தெரியப்படுத்துவதற்காகவும் மனிதர்களின் வாழ்க்கையில் முட்டையின் சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின்களும், குறிப்பாக வைட்டமின்கள் ஏ, பி12, பி2, பி5 முதலியவை உள்ளன. மேலும் கோலின் போன்ற கனிமச்சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன. முட்டை சத்துகளின் தொகுப்பாகும். வளரும் குழந்தைகள் தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வைட்டமின் ‘டி’யைத் தரும் உணவுகளில் இதன் மஞ்சள் கருவும் ஒன்று. கொழுப்புச் சத்துகளின் இருப்பிடமாக மஞ்சள் கரு இருப்பதால் அதை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். முட்டை சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாத நோய் வருவதில்லை. இருப்பினும் இதய நோயாளிகள் சர்க்கரை நோயாளிகள் முட்டையை தவிர்ப்பது நல்லது. அவர்கள் ஒரு நாளைக்கு 2, 3 முட்டைகளின் வெள்ளைக் கருவை எடுத்துச் சாப்பிடலாம். முட்டையில் உள்ள புரதம் பசியை கட்டுப்படுத்துகிறது.இதனால் மாவு சத்து உள்ள உணவுகள், நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுவதால் உடல் எடை குறையவும் வாய்ப்பு உள்ளது. கோழி முட்டை நம்மிடையே பிரபலமாக உள்ளது. சராசரியாக ஒரு கோழி வருடத்துக்கு 150 முதல் 200 முட்டைகள் இடும். ஒரு கோழி 21 வார வயதாக இருக்கும் போது முட்டையிடும். இயற்கையாகவே முட்டைகளுக்கு பாதுகாப்பு கவசமுள்ளது. எனினும் அது எளிதில் உடையக்கூடியது. முட்டைகளை வாங்கும் போது நல்ல முட்டைகளாக ரத்தக்கறை இல்லாத முட்டைகளாக பார்த்து வாங்க வேண்டும். ஓடு உடைந்த முட்டைகளை வாங்க கூடாது. ஓடு உடைந்த முட்டை 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் கெட்டுவிடும். நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் போலி முட்டையின் ஓடு பார்ப்பதற்கு பள பள வென்று இருக்கும். தொட்டு பார்த்தால் சிறிது சொர, சொரப்பாக இருக்கும். உண்மையான முட்டை இறைச்சி வாசனைத்தரும். போலி முட்டையில் எந்தவித வாசனையும் இருக்காது. போலி முட்டையை உடைத்த உடனேயே மஞ்சள் கருவும், வெள்ளைக்கருவும் ஒன்றாக கலந்து விடும். முட்டைகளை குளிர் சாதனப் பெட்டியின் உள்அறையில் தான் வைக்க வேண்டும். இதன் மூலம் நிலையான மற்றும் குளிர் வெப்ப நிலையை பராமரிக்க முடியும். குளிர் சாதனப் பெட்டியின் கதவில் வைக்கும்போது வெப்ப நிலை மாற்றத்தின் காரணமாக முட்டையின் தரம் கெட்டு போக வாய்ப்புள்ளது. அதை உபயோகிக்கும் போது உடலில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. முட்டைகளை மண் பானையில் வைப்பது சிறந்தது. குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் முட்டைகளை பச்சையாக குடிக்கக்கூடாது. அது பாக்டீரியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் வேக வைத்த முட்டையை சாப்பிடலாம். நாட்டுக்கோழி முட்டைக்கும், பிராய்லர் கோழி முட்டைக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டுக்கும் சத்து ஒன்று தான். நடை முறையில் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த ஒரு முழு உணவாக முட்டை திகழ்கிறது. முட்டைகளை நன்றாக அவித்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் அது குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது போன்ற விஷயங்களில் பெற்றோர் கவனமாக இருப்பது அவசியம்.உலக அளவில் முட்டைக்கான சந்தையில் கோழிமுட்டை மட்டுமின்றி வாத்து, காடை, கவுதாரி போன்றவற்றின் முட்டைகளும் பிரபலமானவை. இந்தியா முட்டை உற்பத்தியில் 3-வது இடத்தில் உள்ளது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts