Sunday 15 July 2018

கண்டக்டர் சேவை பயணிகளின் தேவை

அரசு பஸ்களில் முக்கிய நகரங்களில் தற்போது கண்டக்டர் இல்லாத அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. டிக்கெட் கொடுத்து பணம் வாங்குவது மட்டும் கண்டக்டர் பணி என்று நினைப்பது தவறு. பயணிகள், அவர்கள் கொண்டு வரும் உடைமைகளை கண்காணிப்பது, போக்குவரத்து நெரிசலின் போது டிரைவருக்கு உறுதுணையாக இருப்பது, பெண் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்கிறார்களா? முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை வசதி செய்து கொடுப்பது? இப்படி பல்வேறு பணிகளையும் கண்டக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 21 ஆயிரத்து 744 பஸ்கள் ஓடுகின்றன. இந்த பஸ்கள் தினமும் 87 லட்சத்து 22 ஆயிரம் கிலோ மீட்டரை கடக்கின்றன. இதில் தினமும் ஒரு கோடியே 80 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் இந்த பஸ்கள் சென்று வருகின்றன. தற்போது அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.134 கோடியே 53 லட்சம் செலவில் 515 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளது. தற்போது புதிதாக வாங்கப்பட்டு உள்ள அரசு பஸ்சில் ‘பிரித்அனலைசர்‘ என்ற கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இது மது குடித்து விட்டு டிரைவர் பஸ்சை இயக்கினால் பஸ் நகராது. இது வரவேற்கத்தக்கது தான். இதன் மூலம் போதை இல்லாத டிரைவர் மூலம் நல்ல பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம். தனியார் பஸ் சேவைக்கு இணையாக அரசு விரைவு பஸ்களும் நவீன வசதிகளுடன் படுக்கை, குளிர்சாதனம், இன்னும் ரெயில்களில் இருப்பது போல கழிவறை வசதிகளுடனும் இயக்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கது. இதில் படுக்கை , கழிவறை வசதி இல்லாத புதிய சொகுசு பஸ்கள் தற்போது தமிழகத்தில் முக்கிய நகரங்களில் கண்டக்டர் இல்லாத சேவையை தொடங்கி உள்ளன. ஒன் டூ ஒன், பாயிண்ட் டூ பாயிண்ட், பைபாஸ் ரைடர், சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகிய பெயர்களில் இந்த கண்டக்டர் இல்லாத பஸ் சேவை செயல்படுகிறது. தற்போது கண்டக்டர் இல்லாமல் இடைநில்லா பஸ்கள் இயங்குகின்றன. நீண்ட தொலைவு, ஒரு பேச்சு துணைக்கு கூட ஆட்கள் இல்லாமல், ஒரு எந்திரத்தை போன்று பஸ்சை இயக்க வேண்டிய காலகட்டத்தில் டிரைவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். பஸ்சுக்குள் பயணிகள் எப்படி இருக்கிறார்கள். பயணிகள் போர்வையில் திருடர்கள் நடமாடுகிறார்களா? பெண் பயணிகளிடம் சில்மிஷத்தில் யாராவது ஈடுபடுகிறார்களா? என்பதை டிரைவர் கண்காணிக்க முடியாது. ஆனால் அரசு பஸ் கண்டக்டர் அவ்வப்போது பஸ்சில் ரோந்து வருவார். பெண் பயணிகளிடம் யாராவது சில்மிஷத்தில் ஈடுபடுகிறார்களா? பாதுகாப்பாக பயணம் செய்கிறார்களா? பயணிகளின் உடைமைகள் பாதுகாக்கப்படுகிறதா? என்பதை அவ்வப்போது கண்காணிப்பார். நீண்ட தொலைவு பயணத்தின் போது பயணிகள் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றாலும் அவருக்கு சிகிச்சை அளிக்க கண்டக்டர், டிரைவர் உதவியுடன் முன்வருவார். இனி இது போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால் பயணிகளின் நிலைமை சொல்லி மாளாது. பின்இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஒரு பயணிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் அவர் உடனே பஸ்சின் முன்பு இருக்கும் டிரைவரை சந்தித்து தனது உடல்நிலை சரியில்லை என்று கூற முடியுமா? ‘சிக்கனம்‘ என்ற பெயரில் அரசே இது போன்ற செயலில் ஈடுபடுவது முறையாகுமா? வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது தான் ஒரு அரசின் கடமை. ஆனால் இங்கே... கண்டக்டர் இல்லாத சேவை என்று ஒரு பஸ்சுக்கு ஒரு பணியிடம் என்று தனியார் நிறுவனங்களை போன்று ஆட்குறைப்பு செய்வது நல்லதா? கண்கள் இரண்டு ஆனாலும் பார்வை ஒன்று தான். அரசு பஸ் சீராக இயங்க வேண்டும் என்றால் டிரைவரும், கண்டக்டரின் பங்களிப்பும் அவசியம் தேவை. தற்போது கண்டக்டர் இல்லாமல் டிரைவரை மட்டும் கொண்டு இயங்குகின்ற பஸ்கள் அனைத்தும் பஸ்நிலையத்தில் தங்களுக்கான நேரம் வந்ததும் குறைவான பயணிகள் இருந்தாலும் அங்கிருந்து புறப்பட்டு சென்று விடுகின்றன. அந்த நகரின் முக்கிய பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நின்றாலும் அவர்களை ஏற்றுவதில்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அது மட்டுமின்றி செல்லக்கூடிய ஊர்களில் பயணிகள் தாங்கள் பஸ் நிலையத்துக்கு முன்பாக இறங்க வேண்டிய நிலையில் இருந்தால் கண்டக்டர் பணியில் இருக்கும் போது அவரிடம் சொன்னால் நாம் இறங்க ஏற்பாடு செய்வார். ஆனால் இப்போது பின் இருக்கையில் இருப்பவர்கள் முன்னால் சென்று டிரைவரிடம் கூறி தான் குறிப்பிட்ட இடத்தில் இறங்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அது மட்டுமின்றி நடுவழியில் பஸ் ஏதாவது பழுது ஏற்பட்டால் டிரைவர் மட்டும் அதை சரி செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும். கண்டக்டர் இல்லாமல் டிரைவர் மட்டும் பஸ்சை இயக்குவது கடிவாளம் போட்ட குதிரை ஓடுவது போன்று தான். இது ஆரோக்கியமானது அல்ல. ஆனால் மற்ற அரசு பஸ்சுகளை போல் இதிலும் கண்டக்டர்களை பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போல் அரசும் ஆட்குறைப்பு என்ற பெயரில் கண்டக்டர் பணியிடங்களை ரத்து செய்ய முயற்சிப்பது நல்லது அல்ல. அரசு பஸ்களில் கண்டக்டர் பணி வழங்குவதன் மூலம் தமிழகத்தில் ஒரு ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும் அவர்கள் வாழ்வின் மகிழ்ச்சிக்கும் அரசு உறுதுணையாக இருக்கிறது என்ற நம்பிக்கையை விதைக்க முன் வர வேண்டும். -குருவன்கோட்டை ஸ்ரீமன்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts