Saturday 7 July 2018

திறமையை வளர்ப்பதே வெற்றியின் திறவுகோல்

திறமையை வளர்ப்பதே வெற்றியின் திறவுகோல் கார்த்திகேயன், திறன்மேம்பாட்டு பயிற்றுனர் பொறியியல் கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாக காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இது பொறியியல் படிப்பில் மாணவர்களின் ஆர்வம் இன்மையை தான் காட்டுகிறது. இதற்கு காரணம் பொறியியல் படித்தால் எதிர்பார்த்த வேலை கிடைப்பதில்லை என்ற எண்ணம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டு இருப்பது தான். இன்று வாட்ஸ்-அப், பேஸ்புக் என்று எந்த ஒரு சமூக வலைத்தளத்தை திறந்தாலும், பொறியியல் படித்து வேலையில்லாத பட்டதாரிகள் பற்றிய கேலிச்சித்திரங்கள் ஏராளமாக காணக்கிடைக்கின்றன. அவற்றில் ஓரளவு உண்மையும் உள்ளது. இதற்கு காரணம் நமது கல்லூரி பாடத்திட்டங்களுக்கும் நாள் தோறும் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி தான். எனவே மாணவர்கள் அவர்களுக்கான சிறந்த வாய்ப்பினை பெற தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வது அவசியம் ஆகிறது. வெறும் கல்லூரி பட்டம் மட்டும் வேலைவாய்ப்பினை பெற போதுமானது என்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எண்ணம் தற்போது மாறத் தொடங்கி இருக்கிறது. நமது தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் 500 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வெளிவருகிறார்கள். அவர்களில் மிகக் குறைந்த அளவினரே ‘கேம்பஸ் இன்டர்வியூ’ எனப்படும் வளாக தேர்வின் மூலம் வேலை பெறுகிறார்கள். தமிழகத்தில் உள்ள சுமார் 2 ஆயிரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் உடனடியாக பணியில் சேருவோர் வெகு சிலரே. இதற்கு காரணம் வேலைவாய்ப்பின்மை அல்ல. வேலைவாய்ப்பினை அடைய போதுமான திறமையை வளர்த்துக்கொள்ளாததே காரணம் ஆகும். பொறியியல் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை அடைய நமது திறமையை வளர்த்துக்கொள்ளவேண்டியது கட்டாயமாகிறது. அண்மையில் ‘வீ பாக்ஸ்’ என்ற நிறுவனம் சமர்ப்பித்த 2018-ம் ஆண்டுக்கான இந்திய வேலை மற்றும் திறன் பற்றிய அறிக்கையில் இந்தியாவில் 45.60 சதவீத மாணவர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. டெக் மகேந்திரா தலைமை நிர்வாக அதிகாரி சி.பி.குர்மானி சமீபத்தில் கூறும்போது, ‘பட்டதாரிகளில் 94 சதவீதம் பேர் வேலைவாய்ப்பிற்கு தகுதி இல்லாதவர்கள்’ என குறிப்பிட்டு உள்ளார். அனைத்து நிறுவனங்களும் தங்களிடம் பணியில் சேரும் இளம் பட்டதாரிகளுக்கு புதிய தொழில் நுட்பங்களை பயிற்றுவிக்க பெரும் தொகையை செலவழிக்கின்றன. தற்போது நிறுவனங்கள் அந்த செலவை குறைக்க புதிய தொழில்நுட்பங்களில் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த விரும்புகின்றன. நேர்முக தேர்வுகளில் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இப்போது வேலைவாய்ப்புகள் நிறைந்த புதிய தொழில் நுட்பங்கள் பற்றி பார்ப்போம். ‘ஸ்மாக்ட்’ எனப்படும் சோசியல், மொபைல், அனாலிட்டிக்ஸ், கிளவுட் அண்ட் இன்டர்நெட் ஆப் திங்ஸ் மற்றும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களும் தகவல் தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கி உள்ளன. இதன் மூலம் நிறுவனங்களின் பல சிக்கலான பிரச்சினைகளுக்கு கூட எளிதாக உலகின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் தீர்வளிக்கலாம். இந்த தொழில்நுட்பங்கள் கற்றவர்கள் பெரிய நிறுவனங்களில் சேர்ந்து அல்லது தனிநபராக பணிபுரிந்து கூட கை நிறைய சம்பாதிக்கலாம். இத்துறைகளில் பொறியியல் பட்டதாரிகளுக்கு மட்டும் அல்லாமல் கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக கணிதம் அல்லது புள்ளியியல் பட்டம் பெற்றவர்களுக்கு பிக் டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. தமிழ் ஆங்கிலம் மற்றும் கலை பட்டதாரிகளும் கன்டென்ட் ரைட்டிங், சமூக ஊடகம், மொபைல், கிராபிக்ஸ் போன்ற துறைகளில் பிரகாசிக்கலாம். தற்போது மாணவர்களிடையே தங்களுக்கு உகந்த சரியான படிப்பை தேர்ந்தெடுப்பதில் முறையான விழிப்புணர்வு இல்லை. வேலை தேடுவோர் மட்டும் அல்ல. ஏற்கனவே பணியில் இருப்போரும் சான்றிதழ்களுடன் கூடிய பயிற்சி பெற்றால் பணியில் மேலும் முன்னேறவும் ஊதியத்தை இருமடங்காக்கவும் உதவும். எம்.எஸ்சி. (கணிதம், புள்ளியியல், பொருளாதாரம்), எம்.பி.ஏ. (பொது), எம்.பி.ஏ. (சுற்றுச்சூழல், வேளாண்மை) படித்தவர்கள் டேட்டா சயின்ஸ், டேட்டா பிசினஸ் அனாலிட்டிக்ஸ், பிசினஸ் அனாலிசிஸ் பயிற்சி பெற்று திறனை வளர்த்துக்கொண்டால் டேட்டா சயின்டிஸ்ட், பிசினஸ் அனலிஸ்ட், மார்க்கெட் ரிசர்ச் துறைகளில் வேலை பெறலாம். எம்.எஸ்சி. (உயிரி தகவல், சுற்றுச்சூழல் மேலாண்மை, அறிவியல்) பட்டதாரிகள் டேட்டா அனாலிடிக்ஸ் பயிற்சி பெற்றால் டேட்டா சயின்டிஸ்ட் ஆகலாம். எம்.எஸ்சி. இயற்பியல் படித்தவர்கள் ஐ.ஓ.டி. செயற்கை அறிவாற்றல் கற்றால் ஐ.ஓ.டி. டெவலப்பர் ஆகலாம். பொறியியல் இளங்கலை (சி.எஸ்., ஐ.டி.) பட்டதாரிகள் கிளவுட் அப்ளிகேசன், டெவலப்மெண்ட் டேட்டா, அனாலிட்டிக்ஸ், மொபைல் ஆப் டெவலப்மெண்ட் பயிற்சி பெற்றால் அப்ளிகேஷன் டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட் ஆகலாம். பொறியியல் இளங்கலை (இ.சி.இ., இ.இ.இ.) பட்டதாரிகள் ஐ.ஓ.டி. மெஷின் லேர்னிங் கற்றால் ஐ.ஓ.டி. டெவலப்பர், ஏஐ டெவலப்பர், டேட்டா சயின்டிஸ்ட் ஆகலாம். கிராமப்புற மாணவர்களுக்கும் புதிய தொழில் நுட்பங்களுக்கும் உள்ள இடைவெளியை குறைத்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு எளிதாகும். மொத்தத்தில் வளரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திறமைகளை வளர்ப்பதுதான் வெற்றிக்கான திறவுகோலாகும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts