Tuesday 10 July 2018

மக்கள் தொகை பெருக்கத்தின் சிக்கல்களை களைவோம்

மக்கள் தொகை பெருக்கத்தின் சிக்கல்களை களைவோம் பேராசிரியர் மு.ராமதாஸ், முன்னாள் எம்.பி. நாளை (ஜூலை 11-ந்தேதி) உலக மக்கள் தொகை தினம். “உலகம் பிறந்தது எனக்காக! ஓடும் நதிகளும் எனக்காக! மலர்கள் மலர்வதும் எனக்காக! அன்னை மடியை விரித்தாள் எனக்காக (மக்களுக்காக)!” என்ற பிரபலமான வரிகள் உலகத்திற்கும் மக்களுக்கும் உள்ள உறவையும், மக்களுக்கும் உலகத்திற்கும் உள்ள இருபாதை உறவையும் நன்கு புலப்படுத்துகிறது. ஆனால் மக்கள் தொகையின் வளர்ச்சியினால் இந்த இரு உறவுகளுக்கும் சமன்பாடு இன்றி, பல்வேறு அபாயகரமான விளைவுகள் ஏற்பட்டு மக்கள் நலனும் உலக நலனும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சினை பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடமும் அரசுகளிடமும் ஏற்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் வலியுறுத்தவே உலக மக்கள் தொகை தினம் இந்தியா உள்பட எல்லா உலக நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. உலக மக்கள்தொகை உச்சகட்டமான 500 கோடியை எட்டிய நாள் 1987-ம் ஆண்டு ஜூலை 11-ம் நாள் ஆகும். அன்றைய தினம் உலக நாடுகள் அச்சம் கலந்த ஆர்வத்தை வெளிப்படுத்தி, மக்கள் தொகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உலக நாடுகள் ஒன்று கூடி விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட முகமையின் பொதுக்குழு, முதல் உலக மக்கள் தொகை தினத்தை 1989-ம் ஆண்டு ஜூலை 11-ம் நாள் கொண்டாடியது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. உலக மக்கள் தொகை 1900-ம் ஆண்டில் 170 கோடியாக இருந்தது. ஆனால் 30-வது உலக மக்கள் தொகை தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் உலக மக்கள் தொகை 4.5 மடங்கு உயர்ந்து, 763 கோடியாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் சீனா மற்றும் இந்தியாவில் மட்டும் 36.2 விழுக்காடு மக்கள் வாழ்கிறார்கள். அதாவது, இவ்விரு நாடுகளிலும் 276.9 கோடி மக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சீனா 141.5 கோடி மக்களோடு (18.5 விழுக்காடு) முதலிடத்திலும், இந்தியா 135.4 கோடி மக்களோடு (17.7 விழுக்காடு) இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, மற்ற வளர்ந்த நாடுகளைவிட மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அபரிமிதமாக உள்ளதால், அதன் மக்களின் எண்ணிக்கை 1951-ல் 36.1 கோடியிலிருந்து தற்போது 135.4 கோடியாக, அதாவது 3.8 மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவின் துரித மக்கள் தொகை வளர்ச்சிக்கு முக்கிய காரணம் குறைந்து வரும் இறப்பு விகிதமும், அதிகரித்து வரும் பிறப்பு விகிதமும் ஆகும். கடந்த 60 ஆண்டுகளில் அரசுகள் எடுத்த முயற்சிகளால் இந்த இரண்டு விகிதங்களும் குறைந்து வந்தாலும், பிறப்பு விகிதம் இன்னும் கணிசமாக உயர்ந்த நிலையில் உள்ளது. இந்தியக் கிராமப்புறங்களில் காலம் தொட்டு இருந்து வந்த கூட்டுக்குடும்ப முறை மற்றும் இளம் வயது திருமணங்கள் அதிக இறப்பு விகிதத்திற்கு காரணங்களாக அமைந்தன. அத்தோடு வரதட்சணை முறை, மதநம்பிக்கை மற்றும் சமூக எண்ணங்கள், ஆண், பெண் ஏற்றத்தாழ்வுகள், கல்வியறிவின்மை, வறுமை, குடும்பக்கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை, எதிர்காலச் சிந்தனையற்ற பொறுப்பற்றக் குடும்பத்தலைவர்கள் ஆகியவை அரசின் முயற்சிகளை முறியடித்து குழந்தை பிறப்பை அதிகரித்து இருக்கின்றன. இதனால் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. இச்சூழல் நீடித்தால் 2050-ம் ஆண்டில் 165.6 கோடி மக்களோடு இந்தியா சீனாவை புறந்தள்ளிவிட்டு உலகிலே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் நாடாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உலக மக்கள் தொகையில் 17.7 விழுக்காட்டைக் கொண்டுள்ள இந்தியா, நிலப்பரப்பை பொறுத்த வகையில் உலக நிலப்பரப்பில் 2.4 விழுக்காட்டை மட்டுமே கொண்டுள்ளது. இந்த சமன்பாடற்ற நிலை, மக்களின் தேவைகளுக்கும் அளிப்பிற்கும் உள்ள இடைவெளியைப் பெருக்கி, எங்கும் போட்டி, எதிலும் போட்டி என்ற ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுதல், சுத்தமற்ற கிராமங்கள், திறந்த வெளிக்கழிப்பிட முறை, குடிநீர் மற்றும் வீடுகள் பற்றாக்குறை, நகரமயமாகும் பிரச்சினைகள், பெருகிவரும் குற்றங்கள், குழந்தைத் தொழிலாளர் பெருக்கம், முதியோர் பிரச்சினை, ஊட்டச்சத்துக் குறைவு, விலைவாசி உயர்வு, நில அளவு குறைதல், உணவுப் பற்றாக்குறை, வேலையின்மை, அரசின் நலவழிச் செலவு அதிகரிப்பு, வறுமை, பசி, பட்டினி, ஊழல் போன்ற பிரச்சினைகள் மக்கள் தொகைப் பெருக்கத்தின் வெளிப்பாடுகளே. உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார சக்தி கொண்ட நாடாக திகழும் இந்தியா, இப்படி வறுமையிலும், ஏற்றத்தாழ்வுகளிலும் உழலும் ஒரு நாடாக உருவெடுத்திருப்பதற்கு மக்கள் தொகைப் பெருக்கமே முக்கிய காரணம். இதை உணர்ந்து குழந்தைப் பெருக்கத்தைக் குறைப்பதற்கு உறுதியேற்கும் நாள்தான் உலக மக்கள் தொகை தினம். அரசுகள், மெத்தனமாக இல்லாமல், அவசரமாக நடவடிக்கை எடுக்க உறுதி ஏற்க வேண்டும். அரசின் முயற்சிகளோடு தனி மனித முயற்சியும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். திட்டமிட்ட குடும்பத்தை உருவாக்க பெற்றோர்களுக்கு உரிமை அளிக்க வேண்டியதைத் தான் இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினம் வலியுறுத்துகிறது. ஒரு தனி மனிதன் தான் எத்தனை குழந்தைகளை எந்த இடைவெளியில் பெறுவது என்ற முடிவை சுதந்திரமாகவும் பொறுப்புடனும் எடுப்பதற்கான உரிமையை அரசுகள் ஒரு அடிப்படை உரிமையாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்த உரிமை ஒருவர் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கவும், பெண்கள் அடிக்கடி கருவுற்று களைப்படைந்து உருக்குலைந்து போவதைத் தவிர்க்கவும் உதவும். இந்த உரிமையை நிலை நிறுத்த அரசுகளும், சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், இளைஞர் அமைப்புகளும், சுய உதவிக் குழுக்களும், தனியார் மருத்துவ நிலையங்களும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாம் இதை இப்போதும் செய்யத் தவறினால், சமூக பொருளாதார வளர்ச்சியின் முயற்சிகள் எல்லாம் பயனற்று போகும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts