Tuesday, 10 July 2018

டிஎன்பிஎஸ்சி இணையவழித் தேர்வு: மிச்சமிருக்கும் நம்பிக்கைக்கும் மோசமா?

டிஎன்பிஎஸ்சி இணையவழித் தேர்வு: மிச்சமிருக்கும் நம்பிக்கைக்கும் மோசமா? முறையான அரசு நிர்வாகத்துக்கு சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட தேர்வுமுறை அவசியம் செ.இளவேனில் உ லகின் மிகக் கடுமையான போட்டித் தேர்வுகளுள் ஒன்றாக இந்திய குடிமைப் பணித் தேர்வுகளைச் சொல்வார்கள். தமிழகத்திலிருந்து அனைத்திந்திய பணிகளுக்குத் தேர்வெழுதும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளையும் எழுதுகிறார்கள். அனைத்திந்திய அளவில் போட்டியிட்டு வெற்றிபெறும் அவர்கள், தமிழக அளவிலான தேர்வுகளில் பெரும்பாலும் தோல்வியைத் தழுவுவதுதான் வழக்கமாக இருந்துவருகிறது. எனில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளையும்கூட உலக அளவில் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது. டிஎன்பிஎஸ்சி, சில தேர்வுகளை இணையவழித் தேர்வுகளாக நடத்தத் தயாராகிவருவது மாணவர்களிடம் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளிடமும் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசு, தேசிய அளவிலான தேர்வுகளை இணையவழியில் நடத்துவதற்கென்றே தேசியத் தேர்வுகள் முகமையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், டிஎன்பிஎஸ்சியும் அதே வழியில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. மத்திய அரசின் தேர்வுக் கொள்கையை மாநில அரசும் அடிபிறழாமல் பின்பற்றுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஏற்கெனவே இணையவழியாக நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகள், நம்பிக்கையைக் காட்டிலும் சந்தேகங்களையே அதிகம் உருவாக்கியிருக்கின்றன என்பதையும் மறந்துவிடக் கூடாது. சந்தேகம் வலுக்கிறது கடந்த 2016 நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள 35,117 மருத்துவ மேற்படிப்பு இடங்களுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஏறக்குறைய ஒரு லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினார்கள். தேசியத் தேர்வு வாரியம் (என்.பி.இ) இந்தத் தேர்வை இணைய வழியாக நடத்துவதற்காக ‘புரோமெட்ரிக் டெஸ்டிங்’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. அந் நிறுவனம் தேர்வு மையங்களில் கணினிகளை ரிமோட் மூலமாக இயக்கியதாகவும், சில மாணவர்கள் இணையம்வழி உதவி பெற அனுமதித்ததாகவும் டெல்லி குற்றப் பிரிவு காவல் துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. சில கணினிகளில், தேர்வு மையத்துக்கு வெளியே இருப்பவர்கள் வினாத்தாளைப் பார்த்து சரியான விடைகளைத் தேர்வு செய்வதற்கு வசதியாக சாப்ட்வேர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இதற்காக மாணவர்கள் ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையில் லஞ்சம் கொடுத்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 500 மாணவர்களின் பட்டியல் அடுத்த குற்றப் பத்திரிகைக்காகத் தயாராகிவருகிறது. ‘புரோமெட்ரிக் டெஸ்டிங்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த என்.பி.இ. அதிகாரிகளும் இப்போது விசாரணையின்கீழ் இருக்கிறார்கள். அமெரிக்க நிறுவனமான ‘புரோமெட்ரிக் டெஸ்டிங்’ இதுவரை வேறு எந்த நிறு வனத்துடனும் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொண்டதில்லை. எனவே, சந்தேகத்துக்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன. இணையவழித் தேர்வுகள் தேர்வுமுறையை எளிமைப்படுத்த உதவியாக இருக்குமேயொழிய, அது நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது என்பதற்கு மருத்துவ உயர்படிப்புகளுக்கான நீட் தேர்வே உதாரணம். யார் குற்றவாளி? 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய டிஎன்பிஎஸ்சியில் 4 பேர் மட்டுமே உறுப்பினர்களாகப் பதவி வகிக்கிறார்கள். வேளாண்மை, பொறியியல், சட்டம், பொருளாதாரம் என்று தொடங்கி பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்ற வேண்டிய வருங்கால அலுவலர்கள் டிஎன்பிஎஸ்சி வழியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களை நேர்காணல் செய்து திறமையானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களை உள்ளடக்கியதாக டிஎன்பிஎஸ்சி இருக்க வேண்டும். ஆனால், பெயரளவுக்கு நான்கு உறுப்பினர்களைக் கொண்டு செயல்படும் அமைப்பாகத்தான் அது இருக்கிறது. எழுத்துத் தேர்வுகளைப் பொறுத்தமட்டில், குரூப்-2 வினாத்தாள் கசிந்தது தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. அந்த சந்தேகம் இப்போது குரூப்-1 தேர்வுகளின் மீதும் குவிந்திருக் கிறது. விசாரணைகள் நீண்டுகொண்டிருக்கின்றனவேயொழிய, இந்த முறைகேடுகளைச் செய்தவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. பலன் அளித்ததா பரிசோதனை முயற்சி? டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை இணையவழியில் நடத்துவதால் தேர்வு முடிவுகளை எளிதில் வெளியிட முடியும் என்று காரணம் கூறப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறநிலையத் துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் நிலை -1 ஆகிய பணிகளுக்கான தேர்வுகள் இணையவழியாக நடத்தப்பட்டிருக்கின்றன. அந்தத் தேர்வுகளின் முடிவுகளும்கூட வழக்கமாக ஓராண்டுக்குப் பிறகுதான் வெளிவந்திருக்கின்றன. தேர்வெழுதியவர்கள் தங்களது மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இருந்ததேயொழிய, ஒவ்வொரு வினாவுக்கும் என்ன விடையளித்தோம் என்று சரிபார்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு அத்தேர்வில் அளிக்கப்படவில்லை. தேர்வெழுதுபவர், தனது விடைத்தாளை இணையத்தில் சரிபார்த்துக்கொள்ள வாய்ப்பில்லாத இணையவழித் தேர்வுகள், முழு நம்பிக்கை அளிக்கவில்லை என்பதே தேர்வெழுதும் மாணவர்களின் கருத்தாக இருக்கிறது. டிஎன்பிஎஸ்சி நேர்காணல் முடிவுகள் வெளிவரும்போதெல்லாம் மாணவர்கள் மீண்டும் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள். எழுத்துத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் நேர்காணல் தேர்வில் மதிப்பெண் குறைந்து தோல்வியடைகிறார்கள். எழுத்துத் தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியவர்கள் நேர்காணலில் அதிக மதிப்பெண்களைப் பெற்று வெற்றியடைகிறார்கள். மாணவர்களின் இந்த மனக் குமுறல்களையெல்லாம் புறந்தள்ளிவிட முடியாது. அவர்களின் ஒரே நம்பிக்கை, நேர்காணலில் போதிய மதிப்பெண்களைப் பெற முடியாமல் போனாலும் எழுத்துத் தேர்வில் மிக அதிகமான மதிப்பெண்களைப் பெற்று வெற்றிபெறலாம் என்பதுதான். இந்த இணையவழித் தேர்வு அந்த நம்பிக்கையையும் அசைத்துப்போட்டிருக்கிறது. அரசுப் பணியாளர் தேர்வாணைய நடைமுறைகள் என்பவை இளைஞர்களின் வேலைவாய்ப்போடு மட்டும் முடிந்துபோகிற விஷயங்கள் இல்லை. தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களே நாளை அரசின் உயர்பதவிகளில் அமரப்போகிறவர்கள். இரண்டாம் நிலை ஊழியர்களும் பதவி உயர்வு பெற்று முக்கியப் பொறுப்புகளை வகிக்கப்போகிறவர்கள். எனவே, நாளைய அரசு நிர்வாகம் முறையாக நடக்க வேண்டுமெனில், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வுமுறை சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts