அச்சம் தவிர்த்தால் அகிலத்தை வெல்லலாம்
முனைவர் மு.கலைவேந்தன்
இன்றைய உலகில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏதோ ஓர் அச்சத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அச்சமின்றி வாழும்போது தான் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள நேரும். பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை எட்ட முடியும். இயலாமை என்பதை இல்லாமல் ஆக்க முடியும்.
‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே’ என்றார் பாரதி; ‘அச்சம் என்பது மடமையடா’ என்றார் கண்ணதாசன். அச்சத்தின் விளைவு நம்மை பயத்தில் ஆட்டுவிக்கத் தொடங்கும். எதற்கெடுத்தாலும் பயப்படும் சூழல் உருவாகும்.
பய உணர்வு பதற்றத்தை அதிகப்படுத்தும். கால்களை நடுங்கச் செய்யும். கைகளை உதறல் எடுக்கச் செய்யும். வார்த்தை உளறலாகக் கொட்டத் தொடங்கும். முகம் சிவந்து போகும். எதை செய்யவேண்டும், எதைச் செய்யக் கூடாது? என்பதில் தடுமாற்றம் ஏற்பட்டுவிடும். எனவே பயத்தை தவிர்த்து வாழ்வதே சிறந்த வாழ்வியல் நெறியாகும்.
ஆற்றில் இறங்குவதற்கே பயந்தால், எப்படி நீச்சல் கற்றுக்கொள்ள முடியும்? கீழே விழுந்து காயப்பட்டு விடுவோம் என்று பயந்தால், எப்படி மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொள்ள முடியும்?
விபத்தைக் கண்டு பயந்தால் எப்படி பேருந்தை ஓட்ட முடியும்? கடலைப் பார்த்து நடுங்கினால் எப்படி கப்பலில் பயணம் செய்ய முடியும்? வானைப்பார்த்து அச்சப்பட்டால் எப்படி வானூர்தியில் பயணம் செல்ல முடியும்? எதையும் பார்த்து பயப்படுவதும், இடையூறுகளைக் கண்டு அச்சப்படுவதும் அறியாமையாகும்.
இன்றைக்கும் சில குழந்தைகள் கரப்பான் பூச்சிக்கு பயப்படுவார்கள், சிலர் எறும்பைக் கண்டு அச்சப்படுவார்கள், மரவட்டைகளைப் பார்த்து சிலர் அறுவறுப்பார்கள், எட்டுக்கால் பூச்சிகளைப் பார்த்து சிலர் அலறுவார்கள், இவையெல்லாம் தேவையற்ற அச்சங்களாகும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் பக்குவமாகச் சொல்லி அவர்களின் பயத்தைப் போக்கி வாழ வழிகாட்ட வேண்டும்.
சில முதியவர்கள் இயற்கை இடர்பாடுகளைக் கண்டு அச்சத்துடன் வாழ்கிறார்கள். சிலர் வெயிலை பார்த்து பயப்படுகிறார்கள், சிலர் மழையைக் கண்டு அஞ்சுகிறார்கள், சிலர் குளிரைக் கண்டு நடுங்குகிறார்கள், சிலர் பனியைப் பார்த்து புலம்புகிறார்கள், சிலர் காற்றைப் பார்த்து வருத்தமடைகிறார்கள். இவையெல்லாம் நிலையானவை அல்ல. ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு சூழல் என்பது இயற்கையின் நியதி என்பதை உணர்ந்து பயத்தைப் போக்கி வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.
வேலை கிடைக்காததால் எதிர்காலம் இருளாகப் போய்விடுமோ? என்ற பய உணர்வு இன்றைய பெரும்பாலான இளைஞர்களிடம் காணப்படுவது வருத்தமளிப்பதாக உள்ளது. துணிவே துணை, துணிந்தவனுக்கு தூக்குமேடையும் பஞ்சுமெத்தை என்பதை உணர்ந்து இன்றைய இளைஞர்கள் சுயதொழிலில் முன்னேற்றமும் ஆர்வமும் கொள்ளுதல் வேண்டும்.
சில இளம்பெண்கள் கூட வாழ்வியல் இன்பத்தைப்பற்றி கவலைப்படாது தனிமையில் வாழ்வதே சிறந்த வாழ்வாகக்கருதி வாழ்கின்றனர். அவர்களுக்கு ஆண்களை கண்டாலே அச்சத்தை வரவழைத்துக்கொள்கின்றனர். திருமணம் ஆனால் குழந்தைப்பெற வேண்டுமே என்ற அச்சத்திலேயே மண வாழ்க்கையை தள்ளிப் போட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் குழந்தைப் பெற்றுக்கொண்டால் தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டு விடும் என்ற அறியாமை பயத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகளைப் பெற்றால் நம்மால் முறையாக வளர்க்க முடியுமா? என்ற பயவுணர்வோடு வாழ்க்கையை நடத்தி வருவதும் வேதனை அளிப்பதாக உள்ளது. அச்சத்தைப் போக்கி இல்லற வாழ்வில் ஈடுபடுவதே இளம்பெண்களின் இன்றைய முக்கியத் தேவையாகக் கருதப்படுகிறது.
அச்சமும் பயமுமின்றி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சங்கடங்கள் வரும் போது சமாளிக்கும் ஆற்றலைப் பழகிக்கொள்ள வேண்டும். பகைவர்களையும் நண்பர்களாக கருதும் எண்ணத்தை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.
மற்ற மனிதர்கள் நம்மைக் காயப்படுத்த முயன்றாலும் பொறுத்துக்கொள்ளும் உயரிய சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்வியைக் கண்டு பயப்படக் கூடாது. தோல்வியே வெற்றியின் முதல்படி என்பதை இதயத்தில் எப்போதும் ஆழமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
தோல்வியைக் கண்டு தற்கொலை போன்ற முடிவுகளை எடுப்பது கோழைத்தனம் என்பது மட்டுமல்ல; முயற்சியற்றவர்களின் கையாலாகாத் தனம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சரியாகச் சொல்லுதல், சரியாக செய்தல், சரியாக நடத்தல், சரியாகப் பழகுதல், சரியாகத் திட்டமிடுதல், சரியாகப் பயணித்தல் போன்றவை மட்டுமே அச்சத்தை அகற்றும், பயத்தைப் போக்கும், பதற்றத்தை விலக்கும், பகுத்தறிவை வளர்க்கும், பண்பாட்டை காக்கும், வாழ்வியல் நெறிகளாகும்.
Thursday, 28 June 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment