Sunday 25 February 2018

மாணவர்கள் வெற்றிப்பயணத்தில் பெற்றோரின் பங்கு

 
மாணவர்கள் வெற்றிப்பயணத்தில் பெற்றோரின் பங்கு |தமிழகத்தில் அடுத்த மாதம் (மார்ச்) எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வுகள் நடக்க இருக்கின்றன. இந்த தேர்வுகளை எதிர்கொள்ள மாணவ, மாணவிகள் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை ஆசிரியர்களும், பெற்றோரும் தயார்படுத்தி வருகிறார்கள். இதே போல பள்ளிக்கல்வித் துறையும், தேர்வுத்துறையும் இணைந்து தேர்வு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக செய்து வருகின்றன. மார்ச், ஏப்ரல் மாதம் என்றாலே மாணவ, மாணவிகளுக்கு ஒருவித தேர்வு பயம், தேர்வு காய்ச்சல் வருவதுண்டு. இந்த தேர்வு பயம், காய்ச்சல், அச்சம், மனக்குழப்பம், மனஉளைச்சலை போக்க மனநல வல்லுனர்கள், கல்வி ஆலோசகர்கள் அடங்கிய குழு மாவட்டந்தோறும் பள்ளிகளுக்கு சென்று பயத்தை போக்க தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வை எழுதி முடிப்பதில், பெற்றோரின் பங்கு முக்கியமானது. பெற்றோர் தங்களது வீட்டில் படித்துவரும் பிள்ளைகளுக்கு போதிய வசதிகள் செய்து தரவேண்டும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தொலைக்காட்சிகள் பார்ப்பதை யும், விருந்தினர் வந்துபோவதையும் தவிர்க்க வேண்டும். வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடக் கூடாது. காபி, டீ, உணவு தயாரிப்பதை குறித்த நேரத்தில் செய்து, தேர்வு எழுதப்போகும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். பிள்ளைகளை தேர்வு மையத்துக்கும், தேர்வு முடிந்ததும் வீட்டுக்கும் அழைத்து வர வேண்டும். இதே போல ஆசிரியர்கள் ஏறக்குறைய பத்து மாதங்களாக மாணவ, மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுத்திருப்பீர்கள். எந்த கேள்விக்கு எப்படி பதில் எழுத வேண்டும்? விரிவாக எழுத வேண்டுமா? அல்லது சுருக்கமாக எழுதினால் போதுமா? என்பது போன்ற விவரங்களை மாணவர்களுக்கு சொல்லி கொடுத்து இருப்பீர்கள். 100 சதவீத தேர்ச்சிக்கு பாடுபட வேண்டும். மிகவும் பின் தங்கியவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற வழிகாட்ட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களை உத்வேகப்படுத்த வேண்டும். இறுதி நேரத்தில் தேர்வுக்கு எப்படி தயார் செய்ய வேண்டும்? தேர்வு அறையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது பற்றி மாணவர்களுக்கு கனிவோடு சொல்லிக்கொடுக்க வேண்டும். மாணவர்களும் தங்களின் பத்து மாத உழைப்புக்கு பலன் கிடைக்க தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும். தேர்வு சமயங்களில் மாணவர்கள் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை சாப்பிடக்கூடாது. நோய், நொடி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேர்வுக்கு முந்தையை நாள் புதிதாக எதுவும் படிக்காமல் தாங்கள் படித்ததை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டும். தேர்வு மையத்துக்கு 15 நிமிடம் முன்னதாகவே சென்றுவிட வேண்டும். தேர்வு அறையில் கண்காணிப்பாளர் கூறும் அறிவுரைபடி நடந்துகொள்ள வேண்டும். எவ்வித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடாமல், தாங்கள் படித்ததை வைத்து திறமையாக தேர்வை எதிர்கொள்ள வேண்டும். கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலை மட்டும் எழுத வேண்டும். விடுபடாமல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். அப்போதுதான் மதிப்பெண் குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். தேவை இல்லாத வண்ண மை பேனாக்களை பயன்படுத்தக் கூடாது. குறித்த நேரத்தில் தேர்வு எழுத தொடங்கி, குறித்த நேரத்தில் தேர்வை எழுதி முடித்துவிட வேண்டும். தேர்வு எழுதி முடித்தபிறகு தாங்கள் எழுதிய விடை சரியானதா? தவறானதா? என்ற ஆராய்ச்சிக்குள் செல்லவே கூடாது. மாறாக, அடுத்த தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்வதே சாலச்சிறந்தது. இதே போல தேர்வறை கண்காணிப்பாளர்கள் மாணவர்களுக்கு தேவையில்லாத அச்சத்தை, இடையூறை உண்டு பண்ணக்கூடாது. சந்தேகப்படும் மாணவர்களை மட்டும் தனியாக அழைத்து பேச வேண்டும். மாணவர்கள் அமைதியாக தேர்வு எழுதி முடிக்க வேண்டும். இது தேர்வறை கண்காணிப்பாளர்கள் கையில் தான் உள்ளது. எனவே, அரசு பொதுத்தேர்வு என்பது அரசு அதிகாரிகள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களின் கூட்டு முயற்சியில், பொறுப்பில் தான் அமைந்துள்ளது. தேர்வு சிறப்பாக அமைந்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். மாணவர்கள் புத்துணர்ச்சியோடு பொதுத்தேர்வை எதிர்கொள்ளட்டும். கல்வியாளர் ஆர்.லட்சுமிநாராயணன் |

No comments:

Popular Posts