Sunday 25 February 2018

உலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில்.

உலகில் ஒளிவீசும் உன்னதங்கள் தஞ்சை பெரிய கோவில். எழுத்தாளர் பாரதிபாலன் உலகின் தலைசிறந்த பாரம்பரியக் களங் களை அடையாளம் கண்டு, அங்கீகரிக்கும் பொறுப்பினை ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார நிறுவனம் (யுனெஸ்கோ) ஏற்றுள்ளது. உலகில் உள்ள 195 நாடுகளில், 167 நாடுகளை சார்ந்த 1,073 உலகப் பாரம்பரிய களங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவிலான பாரம்பரிய களங்களை கொண்ட நாடு என்ற பெருமையை இத்தாலி பெறுகிறது. அங்கு 53 களங்கள் உள்ளன. இரண்டாவது இடத்தில் சீனா (52 களங்கள்), மூன்றாவது இடம் ஸ்பெயின் (46 களங்கள்) ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியா ஏழாவது இடத்தில் இருக்கிறது. இந்த களங்களை உலகின் தலை சிறந்த சொத்துகளாக கருதி, உலக அளவில் தனிகவனப்படுத்தி, போற்றிப் பாதுகாப்பது என்றும், போர்க் காலங்களிலும் கூட இவற்றிற்கு எந்த சேதமும் ஏற்படுத்தக் கூடாது என்றும் உலக நாடுகள் உடன்படிக்கை செய்து கையொப்பமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் உள்ள 3,44,400 சதுர மீட்டர் தூரம் 900 தீவுகளில் விரிந்து பரவியிருக்கும் வியக்க வைக்கும் 'பெரும் பவளத் திரட்டு', புகழ் பெற்ற கடா தேசிய பூங்கா, சீனாவின் சீனப் பெருஞ்சுவர், பழைய கற்காலத்தை சார்ந்த டாய் மலை, மனித வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை சார்ந்த ஆனை குகை, வியக்கவைக்கும் எகிப்தின் பிரமிடுகள், இத்தாலியின் தொன்மையான, அழகிய ரோம் நகரம், அங்கு புகழ்பெற்ற பிளாரென்சின் வரலாற்று மையம், பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், நாபொலி துறைமுகம், ரஷியாவின் செஞ்சதுக்கம், இங்கிலாந்தில் உள்ள லண்டன் டவர் என்று எத்தனையோ அதிசயங்களை, ஆக்கங்களை, உன்னதங்களை இத்திட்டத்தில் அங்கீகரித்து இணைத்து உலகப் பொதுச் சொத்தாகப் போற்றப்படுகின்றன. இந்தியாவில், பாபர், உமாயூன், அக்பர், ஷாஜகான், ஜகாங்கீர், அவுரங்கசீப் போன்ற பேரரசர்கள் வாழ்ந்த ஆக்ராகோட்டை, இந்திய குடைவரை கட்டிடக் கலையின் முன்னோடியாக திகழும் எல்லோரா குகைகள், கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சார்ந்த அஜந்தா குகைகள், மத்தியப் பிரதேசம் சாஞ்சியில் கி.மு. 3-ம் நூற்றாண்டில் அசோகரால் உருவாக்கப் பெற்ற பெரியதூபி, பவுத்த நினைவுச் சின்னங்கள், இந்து-முஸ்லிம் கட்டிடக்கலைக்கு எடுத்துக் காட்டாகத் திகழும் குஜராத் சம்பனேர் பாவாகேத் தொல்லியல் பூங்கா. மும்பையின் பரபரப்பான ரெயில் நிலையமான சத்ரபதி சிவாஜி முனையம், சாளுக்கியர் கால எலிபண்டா குகைகள், அழியும் நிலையில் உள்ள சைபீரியக் கொக்குகள் உள்பட 300-க்கும் மேற்பட்ட அரியவகை பறவைகளின் சரணாலயமாகத் திகழும் பரத்பூர் தேசியப் பூங்கா, இந்திய அதிசயங்கள் என்று குறிப்பிடப்படும் கஜுராஹோ, இந்தியாவின் முதல் முஸ்லிம் அரசனான குத்புதின்ஐபக்கால் 1193-ல் கட்டப்பட்ட உலகிலேயே உயர்ந்த (237.8 அடி) தூபியான குதுப்பினார், உலக மக்கள் காதல் சின்னமாகப் போற்றும் தாஜ்மஹால். மத்தியப் பிரதேசத்தில் உள்ள பீம்பேட்கா பாறை. இது வரலாற்றுக்கு முந்தைய மனித தடயங்களை அறிய உதவியது. இங்கு 30 ஆயிரம் ஆண்டு தொன்மைவாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒடிசா மாநிலத்தில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோவில். இது கருப்பு கிரானைட் கற்களாலும், சிவப்புப் பாறைகளாலும் கட்டப்பட்டது. முகலாயப் பேரரசர் அக்பரால் கி.பி. 1570-ல் உருவாக்கப்பட்டு, அப்பேரரசின் தலைநகராகத் திகழ்ந்த பத்தேப்பூர் சிக்ரி, துங்கப்பத்திரை நதிக்கரையில் விஜயநகரப் பேரரசின் தலைநகரமான ஹம்மி, இந்தப் பேரரசிடம் சுமார் 2 மில்லியன் வீரர்களை கொண்ட மிகப் பெரிய படை இருந்துள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்பு அகமதுஷா என்பவரால் உருவாக்கப்பட்ட அகமதாபாத் நகரம். இந்த நகரில் 26 வகையான பழமையான கலை நயமிக்க கட்டிடங்கள், நூற்றுக்கணக்கான கலை அழகு கொண்ட கோட்டை நகரம் எனப் புகழப்படுகிறது. இந்த நகரங்கள் பாரீஸ், கெய்ரோ, எடின்பர் போன்ற உலகப் பாரம்பரிய நகரங்களின் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. இதே போன்று இந்தியாவில் உள்ள நான்கு மலை ரெயில் பாதைகளும் இந்தப் பாரம்பரியச் சிறப்பிடத்தில் இடம் பெற்றுள்ளன. வட இந்தியாவில் உள்ள டார்ஜிலிங், கால்கா, சிம்லா இவை மூன்றும் இமயமலைப் பகுதியில் உள்ளன. இவற்றோடு தமிழ்நாட்டில் உள்ள உதகைமேட்டுப்பாளையம் ஒரே பற்சட்ட இருப்புபாதையும் இணைகின்றது. முதலாம் குப்தப் பேரரசர் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட உலகின் முதல் பல்கலைக்கழகம் என்ற சிறப்பைப் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகமும் இந்த சிறப்பில் சேர்ந்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நான்கு களங்களை மட்டும் யுனெஸ்கோ தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் பல்லவர்களால் கட்டப்பட்ட மாமல்லபுரத்தின் மரபுக் கோவில்களும், சோழர்களால் கட்டப்பட்ட அழியாத சோழர் பெருங்கோவில்களும், நீலகிரி மலைப்பாதையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் உலகப் பாரம்பரியக் களங்களில் இணைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் மரபுக் கோவில்கள் அனைத்துமே பல்லவர்களால் உருவாக்கப்பட்டவை. இவை கோரமண்டல் கரையில் 7-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. அழியாச் சோழர் பெருங்கோவில்கள், இது தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவிலை உள்ளடக்கிய தொகுப்பாகும். இதில் பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டு பழமைமிக்கது. கங்கை கொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழன் 1,019-ல் கங்கை வரைப் படையெடுத்து சென்று வெற்றி கொண்டதின் நினைவாக உருவாக்கப்பட்டது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோவிலை சிற்பிகளின் கனவு என உலகமே கொண்டாடுகிறது. திராவிட பாணிக் கட்டிடக் கலையில் உருவாக்கப்பட்ட இக்கோவில் அழகியநுட்பம் கொண்ட சிற்பங்கள், தூண்கள், கலை வேலைப்பாடுகளால் ஆனது. இசை ஒலி எழுப்பும் படிகள் இங்கு புகழ்பெற்றவை. உலகில் பல்லுயிர் வளமிக்க எட்டு இடங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையும் ஒன்றாகும். இங்கு 5 ஆயிரம் வகைப்பூக்கள், 139 வகைத் தாவரங்கள், 508 பறவை வகைகள், 176 இருவாழ் உயிரினங்கள் உள்ளன. இத்துடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் தொன்மைச் சிறப்பு, சிறந்த கட்டுமான அமைப்பு, பழமை மாறாத புனரமைப்பு இவற்றிற்காக யுனெஸ்கோவின் சிறப்பு விருதினைப் பெற்றுள்ளது. இந்த உலகப் பாரம்பரியச் சிறப்புமிக்க களங்களைப் பற்றிய புரிதலும், உரிய விழிப்புணர்வும் தற்போதைய முதல் தேவை. குறிப்பாக மாணாக்கர்களுக்கும், இளம் தலைமுறையினருக்கும் இது குறித்த புரிதலையும், பெருமிதத்தினையும் ஏற்படுத்த வேண்டும். இரண்டாவதாக இவற்றை முறையாகப் பராமரித்துப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய களம் என்ற சிறப்பை இவைகள் இழக்க நேரிடும். உலகச் சிறப்பு என்ற உன்னதத்தினை நாம் இழந்துவிடாமல் காப்பது நம் அனைவரின் உரிமை. அதே சமயம் அடுத்த தலைமுறைக்கு இந்த மரபுரிமையை மீளத்தருவது நம் கடமை.

No comments:

Popular Posts