போர்க்களத்தில் புறாக்கள்


போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம். ஆனால் அவை கடந்த நூற்றாண்டில், அதிலும் முதல், இரண்டாம் உலகப் போர் காலங்களில் செய்திகளைப் பரிமாற பெருமளவில் பயன்படுத்தப்பட்டன என்பது தெரியுமா? பார்க்க மிகவும் சாதுவாகத் தெரிந்தாலும், புறாக்கள் பறவை இனத்தில் மிகவும் வலுவானவை. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும் திறன் படைத்தவை. அத்துடன் மனிதர்களுடன் இணக்கமாகப் பழகி, அவர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்துகொண்டு செயல்படக்கூடியவை. அதனால்தான், முதலாம் உலகப் போர் காலகட்டத்தில் சுமார் 1 லட்சம் புறாக்கள் செய்திப் பரிமாற்றத்துக்காக பல்வேறு நாட்டு ராணுவப் படைகளால் பயன்படுத்தப்பட்டன. இவை, துப்பாக்கி, பீரங்கிகளின் முழக்கங்கள், விமானங்களின் குண்டுவீச்சுகள், கண்கொத்திப் பாம்பாய் கண்காணிக்கும் எதிரி நாட்டுப் படையினர் இவற்றுக்கு இடையே துணிச்சலோடு பறந்து சென்று செய்தியைச் சேர்த்தன. அதற்கு தமது அசாதாரண உள்ளுணர்வு, வானில் இருந்து இடங்களை அறியும் திறன், மோப்ப சக்தி எல்லாவற்றையும் பறவைகள் பயன்படுத்தின. புறாக்கள் மூலம் அனுப்பப்பட்ட செய்திகள் 95 சதவீதம் சரியாகச் சென்று சேர்ந்தன என்பது ஆச்சரியமூட்டும் விஷயம். இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து ராணுவம் போர்க்களத்தில் பயன்படுத்துவதற்காக சுமார் இரண்டரை லட்சம் புறாக்களை அந்நாட்டு புறா வளர்ப்போர் கொடுத்து உதவினர். ஒவ்வொரு இங்கிலாந்து போர் விமானத்திலும் குறைந்தபட்சம் இரண்டு புறாக்கள் இருந்தன. விமானங்கள் விபத்தில் சிக்கினாலோ, அவசரமாக எங்காவது தரை இறங்க நேரிட்டாலோ, வீரர்களை மீட்பது குறித்த செய்தியை அனுப்பத்தான் அவ்வாறு புறாக்கள் எடுத்துச் செல்லப்பட்டன. தரைப்படையினரும் புறாக்களை கொண்டு சென்றனர். விமானங்களில் இருந்து, தேவையான இடங்களுக்கு பாராசூட் மூலமும் புறாக்கள் போடப்பட்டன. அவசரச் செய்திகள், மீட்புச் செய்திகள் மட்டுமின்றி, ரகசியச் செய்திகளும் புறாக்கள் மூலம் அனுப்பப்பட்டன. சில இடங்கள் குறித்த முக்கிய வரைபடங்களையும் அவை கொண்டு சென்றன. ஹிட்லரின் நாஜிப் படைகளும் செய்திப் பரிமாற்றத்துக்கு புறாக்களைப் பயன்படுத்தின. அதேநேரம், நேச நாட்டுப் படைகளின் புறாக்கள் செய்திகளைச் சுமந்துசெல்வது குறித்து ஜெர்மானியர்கள் கவலைப்பட்டனர். நேச நாட்டு செய்திப் புறாக்களை வேட்டையாடுவதற்கு என்றே கழுகுகளையும் அவர்கள் பயன்படுத்தினர். பதிலுக்கு, நாஜிகளின் கழுகுகளை ஏமாற்றும் யுக்திகளை நேசப் படைகள் உபயோகித்தன. போர்க்காலத்தில் தங்களின் அபார துணிச்சலுக்காகவும், சாகசத்துக்காகவும் பல புறாக்களுக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நீண்ட நெடுங்காலமாகவே புறாக்கள் மனிதர்களுக்கு உதவி வந்திருக்கின்றன. பழங்கால எகிப்தில் நைல் நதியில் வெள்ளப் பெருக்கு குறித்து பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிப்பதற்காக புறாக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்சில் தபால் சேவைக்கு அதிகாரப்பூர்வமாகவே புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கும் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கும் இடையிலும் கூட அவை தபால்களை எடுத்துச் சென்றன. புறாக்கள் அன்பு, அமைதியின் அடையாளம் மட்டுமல்ல என்பது இப்போது புரிகிறது அல்லவா?

Comments