Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

மனிதனும் ஆட்சியதிகாரமும்


ஐந்தறிவு உயிரினங்கள் பிற உயிர்களைப் பார்க்கும்போது, ஒன்று அவற்றைத் தங்கள் 
இரையாகப் பார்க்கும், அல்லது இனப்பெருக்கத்திற்குத் துணையாகப் பார்க்கும். இவை இரண்டுக்கும் உதவாதென்றால், அந்த உயிரினத்தின் மீது அவற்றுக்கு எந்த அக்கறையும் இருக்காது. தன்னைவிட வலியது என்றால் விலகிச் செல்லும்; எளியது என்றால் ஒடுக்கும்.

இந்த உயிரினங்களை யாரும் வளர்ப்பதில்லை, அவற்றிற்குப் புதிதாக எதையும் கற்பிப்பதுமில்லை; அவற்றின் வாழ்வு இரை தேடல், இனப்பெருக்கம், உயிரச்சம் என்பவற்றுடன் முடிந்துவிடுகிறது.

மனிதன் பிற உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் வலிமை குறைந்தவனே. கைகளைப் பயன்படுத்துவதும், ஆறாவது அறிவைப் பெற்றிருப்பதுமே இவனுக்குள்ள கூடுதல் தகுதிகள். கைகளின் பயன்பாட்டால் கருவிகளைப் படைக்கவும் ஆளவும் முடிந்தது; இதனால் அளப்பரிய வலிமை பெற்றான். ஆறாவது அறிவு இயந்திர மனிதனைப் படைக்கும் அளவு வளர்ந்துள்ளது.

எந்த உயிரினமும் தன் சொந்த இனத்தோடு மோதுவதில்லை, அதை அழிப்பதுமில்லை. மனிதன் மட்டுமே தன் இனத்தையே அழிக்கின்றான். கையையும், ஆறாவது அறிவையும் பயன்படுத்தி அவன் செய்த நாசங்கள் எண்ணிலடங்காதவை.

"வலிமையே தருமம்" என்ற கொள்கை துரியோதனனிடமும் இராவணனிடமும் இருந்தது. அவர்களின் அழிவிலிருந்து பாடம் கற்கத் தெரியாத இவன், எவ்வளவு வளர்ச்சியிலும் போதாமை உடையவனாகவே இருக்கிறான். அழிவே இவன் வாழ்க்கை முறை.

வல்லரசுகளின் வழிமுறைகள்:
  • ரஷியா: சிறிய நாட்டில் இவ்வளவு கனிம வளங்களா? அடித்துப் பிடுங்குவேன் என்று போர் தொடுக்கிறது.
  • அமெரிக்கா: வெனிசுலாவில் இவ்வளவு எண்ணெய் வளமா? அதன் அதிபர் மனைவியோடு கைது செய்யப்பட்டு அமெரிக்கச் சிறையில் வைக்கப்படுகிறார்.
  • சீனா: இவ்வளவு வளமான திபெத் தனி நாடா? ஒரு சாமியார் ஆள்வதா? மாவோ திபெத்தைச் சீனாவில் இணைக்கிறார்; சாமியார் இந்தியாவுக்கு ஓடி வருகிறார்.
அடித்துப் பிடுங்குதல், வழிப்பறி செய்தல் ஆகியவை தனிமனிதக் குற்றங்கள் என்ற நிலையிலிருந்து, இப்போது வல்லரசுகளின் வழிமுறைகளாக மாறிவிட்டன. வல்லரசுகளின் தலைவர்கள் ஆறலைக் கள்வர்களாகவும், வழிப்பறி செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள்.

ஒருவன் பட்டப்பகலில் கத்தியைக் காட்டித் தாலிச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடும்போது, தெருக்காரர்கள் திகைத்துப் பார்வையாளர்களாகி விடுகின்றனர். இது நம்முடைய ஐ.நா. சபை போல இருக்கிறது.

"வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்பதே தனிமனிதனிலிருந்து ஆட்சியாளர்கள் வரை உலகின் நெறிமுறையாகி விட்டது. இராவணன் காலம் முதல் டிரம்ப் காலம் வரை எந்த மாற்றமும் இல்லை.

விலங்குகள் மந்தைகளாக வாழ்வதுபோல, மனிதனும் கூட்டமாக வாழ்கிறான். 'மந்தை' என்பது அசிங்கமாகத் தோன்றவே, அதை சமூகம் என்று இவன் சொல்லிக் கொண்டான். விலங்குகளின் மந்தைக்குள் சிக்கலில்லை; ஆனால் மனித மந்தை உட்சிக்கல் உடையது.

எனவே, சட்டங்கள் தேவைப்பட்டன; அவற்றை வரையறுக்க ஆட்சிகள் தேவைப்பட்டன; இவற்றை நிர்வகிக்க நிர்வாக எந்திரம் தேவைப்பட்டது; அதிகார வர்க்கம் உருவானது. அரசைப் பராமரிக்க வரி விதித்தல் தேவையானது.

அரசும் வரிப் பணமும்:

அரசனை உருவாக்கினோம்; அவன் முதலில் அரண்மனையைக் கட்டினான். பிறகு, தன் காதலி இறந்த துயரம் தாங்காமல், மக்களின் வரிப் பணத்திலிருந்து பளிங்குக் கற்களால் தாஜ்மஹால் என்ற சமாதிக் கட்டினான். ஆக்ராவில் ஆற்றோட்டப் பின்புலத்தில் நிலவொளியில் மின்னுமாறு கட்டப்பட்ட இது, உலக வியப்புகளில் ஒன்றாகிவிட்டது.

இதை வெளிநாட்டு அதிபர்களுக்கெல்லாம் காட்டுகிறோம். அதைப் பராமரிக்க நம்முடைய வரிப் பணத்தில் கோடிக்கணக்கில் செலவழிக்கிறோம். இதைக் கேட்டால் தொல்பெருஞ்சின்னம் என்கிறார்கள்.

உண்மையில் தொல்பெருஞ்சின்னம் கல்லணை அல்லவா? ஒரு கரிகாலன் பிறக்கவில்லையென்றால், தமிழ்நாடு கஞ்சிக்கில்லாமல் செத்திருக்குமே.

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களின் வரிப் பணத்தில் கூலி கொடுத்து, தன் காதலிக்குப் பளிங்கு மாளிகை எழுப்புவது பெருமையின் சின்னமா? நம்முடைய அடிமைப் புத்தியின் சின்னமா?

நாம் எதைப் போற்றுகிறோம் என்பதைப் பொறுத்தே நம்முடைய இலட்சணங்கள் அமைகின்றன. ஒரு நடிகை அல்லது நடிகன் இறந்தால் அரசு மரியாதை அளிக்கப்படுகிறது. காவல்துறையினர் துப்பாக்கியைத் தலைகீழாய்ப் பிடித்து, பிறகு வானத்தை நோக்கி இருபத்தியொரு முறை சுடுகிறார்கள். இந்த மரியாதை, சங்கிலியை அறுப்பவனைக் கண்டுபிடிப்பதற்கு நாம் கொடுத்த வரிப் பணத்தில், முதலமைச்சர்களுக்கு வேண்டியவர்கள் செத்ததற்குச் செய்யப்படுகிறது.

வரிச்சுமை:

நாம் ஒவ்வொரு தோசை தின்பதற்கும் முன்பெல்லாம் பன்னிரண்டு விழுக்காடு வரி கொடுத்தோம்; இப்போது ஐந்து விழுக்காடு. தோசை தின்பதற்கெல்லாம் எதற்கு வரி கொடுக்க வேண்டும்? தேநீர் குடித்தால் வரி, பீடி குடித்தால் வரி, அதைப் பற்ற வைக்கத் தீக்குச்சியை உரசினால் கூட வரி.

"எங்கள் வாழ்வே! வரலாறே!" என்று கூவுகிறோமே! ஒரு முதலமைச்சரின் காருக்கு முன்னும் பின்னும் இருபத்தெட்டுக் கார்கள் போவதற்கு இவ்வளவு வரி கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஒரு தோசைக்கு ஐந்து, பத்தென்று வரி போடுகிறானே என்று நாம் வயிறெரிந்தால், நடிகர் விஜய்க்கும் பா.ஜ.க. அண்ணாமலைக்கும் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு ஒரு நாளைக்கு மூன்று வேளையும் எப்படி அளிப்பது?

நாம் அதனால் ஒரு தோசையோடு நிறுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. நமக்கு இன்னொரு தோசைக்கு வழியில்லாத அரைப் பசியில்தான் அவர்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. அவர்களின் தனி விமானப் பயண எளிமை எல்லாம், ஆட்சிக்கு வந்து நம்மை இரண்டாவது தோசை தின்ன வைப்பதற்குத்தான் என்கிறார்கள்.

தியாக சீலர் - ராஜாஜி:

சுதந்திரத் தொடக்கத்தில் நம் நாட்டில் ஒரு முதிர்ந்த முதலமைச்சர் இருந்தார். அவர் அரசுப் பயணியர் மாளிகையில் கொசுக்கடி தாங்க முடியாமல், தன் உதவியாளரை அழைத்துத் தன் சொந்தப் பணத்தில் கொசுவலை வாங்கி வரச் சொன்னார்.

அலுவலர், அரசுப் பணத்தில் வாங்க அனுமதி உள்ளது என்றபோது, "நாம் இதைச் செய்தால், அடுத்து வருகிறவர்கள் பயணியர் மாளிகையை அரண்மனையாக்கி விடுவார்கள்" என்று மறுத்துவிட்டார்.

அந்த மனிதன் (ராஜாஜி) வேதாரணியத்தில் உப்பெடுக்க நெடுந்தொலைவு நடந்தவன்; சிறையையே வாழிடமாக்கி வாழ்ந்தவன்; நுகர்ச்சியன்று வாழ்வின் நோக்கம் எனப் புரிந்தவன். அவன் தேறாத நூலும் இல்லை; தெளியாத பொருளும் இல்லை. நூல் நூற்றான்; குடியை வெறுத்து, அதற்காக "திக்கற்ற பார்வதி" என்ற கதை எழுதினான். ஐ.நா. சபையில் பாடுவதற்காக ஒரு பாட்டு எழுதினான்.

பெருந்தியாகங்கள் புரிந்தவன்; பெரும் பதவிகளில் பற்றற்று இருந்தவன். அவனைச் சிலர் "குடிகேடி", "குல்லூகப் பட்டர்", "ஆச்சாரியார்" என்று கேலி செய்தனர்; பதவி விலகுமாறு கலகம் செய்தனர்.

வசதியற்ற அரசின் கீழ், ஒரே செலவில், ஒரே கட்டமைப்பில் இரண்டு மடங்கு மாணவர்கள் படிப்பதற்குக் கொண்டு வந்த கல்வித் திட்டத்தை 'குலக் கல்வித் திட்டம்' என்றனர். அது கணிதத்தில் ஒருங்கமைச் சமன்பாடுகளுக்குப் பதிலாகவோ, அறிவியலில் நியூட்டனுக்குப் பதிலாகவோ, மனுநீதியைப் பாடத்திட்டமாக்கி விட்டதுபோல் கூக்குரலிட்டனர்.

அந்த மாமனிதன் பாறை போல் இருந்தான். அவனுக்குப் பதவி என்பது செருப்பு போல இருந்தது; கழற்றி எறிந்துவிட்டுப் போய்விட்டான். நீண்ட வாழ்வில், "குறையொன்றுமில்லை கோவிந்தா" என்று கடவுளுக்குச் செய்தி சொல்கிறான். கடவுள் அதிர்ந்துவிட்டார்; இப்படி ஒரு வார்த்தையை அவர் கேட்டதே இல்லை.

கணியன் பூங்குன்றன் போல் இந்த மாமனிதன் எழுதியது ஒரே பாட்டு; அது இன்னும் இரண்டாயிரம் ஆண்டு நிற்கும்.

தருமன் பிழை செய்யவில்லையா? இராமன் பிழை செய்யவில்லையா? தன் பங்குக்கு அந்த மாமனிதனும் ஒரு பிழை செய்ய வேண்டாமா? செய்தான்! முன்னின்று செய்தான்! முனைப்போடு செய்தான்!

இப்போது நம் காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் பாம்பை (திராவிட மாடல் கூட்டம்) ஆசீர்வாதம் செய்து அரியணை ஏற்றியவன் அந்த மாமனிதன்தான்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement