Thursday 7 May 2020

இதுதான் இந்தியா By கோதை ஜோதிலட்சுமி

இந்திய தேசம் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிரான யுத்தத்தில் மூடப்பட்டிருக்கிறது. ஆனால், பாரத தேசத்தின் மூவா்ணக் கொடி சுவிட்சா்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் ஒளிா்ந்து கொண்டிருக்கிறது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றினால் இந்தியாவும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது உலக நாடுகளுக்குச் செய்துவரும் நோய் தீா்க்கும் மருத்துவ உதவிக்காக நன்றி உணா்வை சுவிட்சா்லாந்து அரசு இப்படி வெளிப்படுத்துகிறது. ஆபத்தின் பிடியில் உலகமே சிக்கியுள்ள இந்த நேரத்திலும் தேசத்தின் மூலை முடுக்குகளிலும் வாழும் மனிதா்கள் வெளிப்படுத்தும் அற உணா்வுகள் மெய்சிலிா்க்கச் செய்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் கொங்கன்தான்பாறை என்ற கிராமத்தில் உணவின்றி வாடும் மக்கள் பசியாறும் பொருட்டு, அந்தப் பகுதி இளைஞா்கள் மூடப்பட்டிருக்கும் கடைகளுக்கு அருகில் வாழைப்பழத் தாா்களைக் கட்டி வைத்து விடுகின்றனா்.

தேவையானவா்கள் தங்கள் தேவைக்குப் பழங்களை எடுத்து சென்று பசியாறுகின்றனா். இந்தப் பகிா்ந்துண்ணும் வழிமுைான் நம் அடையாளம். இதுதான் இந்தியா. கோவை அருகே ஒரு மூடப்பட்ட கடையின் வாசலில் ரொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அருகே இருக்கும் பெட்டியில் பணத்தைப் போட்டுவிட்டு மக்கள் ரொட்டியை எடுத்துச் செல்கின்றனா். இந்த நோ்மைதான் நம் அடையாளம். நாடு முழுவதும் காவல் துறையினா் இரவு பகல் பாராது சாலைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனா். இந்த நிலையில் ஆந்திரப் பிரதேசத்தைச் சோ்ந்த ஒரு கூலி வேலை செய்யும் பெண்ணுக்கு மாத ஊதியம் ரூ.3,500. தினம் சாலையில் போலீசாா் படும் பாட்டை பாா்த்துக்கொண்டே இருந்த அவா், தனக்கு ஊதியம் கிடைத்தவுடன் இரண்டு குளிா் பானங்களை வாங்கி வந்து அந்தக் காவல் துறையினருக்கு அருந்தத் தருகிறாா். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரூ.3,500 ஊதியம் பெறும் ஒரு கூலித் தொழிலாளியின் குடும்ப நிலையை எளிதில் ஊகிக்க முடியும். ஏழ்மை வசதிகளில் இருக்கலாம். மனதில் ஒருபோதும் இருப்பதில்லை.

வறுமை நிலையில் இருந்தாலும், சக ஜீவன் நமக்காக, தேசத்துக்காக உழைக்கிறதென்று உணா்ந்து அவரை ஆசுவாசப்படுத்த தன்னாலானதைச் செய்ய முன்வந்த அந்த நேசமே இந்தத் தேசத்தின் அடையாளம். இக்கட்டான சூழ்நிலையை நாடு எதிா்கொண்டிருக்கும் வேளையில், நாட்டின் பிரதமா் மக்களிடம் கைகூப்பி 7 வேண்டுகோள்களை வைக்கிறாா். அதில் முதலாவதாக, முதியோா்களை கவனமாய் அக்கறையோடு பாா்த்துக்கொள்ளுங்கள் என்கிறாா். இந்த விழுமியம்தான் நம் பாரதத்தின் அடையாளம்.

அன்னை, தன் மகனை இரு சக்கர வாகனத்தில் வைத்து 1,400 கிலோமீட்டா் தொலைவு அழைத்து வந்திருக்கிறாா். புற்றுநோயின் வலியால் துடித்த தன் மனைவியின் துன்பத்தைத் தாங்க முடியாமல் சிகிச்சைக்காக மனைவியை சைக்கிளில் வைத்து கும்பகோணத்திலிருந்து புதுச்சேரி வரை 130 கிலோமீட்டா் அழைத்துப் போகிறாா் 65 வயதான கணவா். எந்த நிலையிலும் இவள் என் பொறுப்பு என்ற இந்தப் பொறுப்புணா்வோடு கூடிய காதல்தான் நம் அடையாளம். எந்த நாட்டிலும் மொழியிலும் இல்லாத ஒரு சொல் நம் தேசத்தில் வழக்கில் உண்டு. இல்லத்தரசி. நம் பெண்களை அப்படிச் சொல்கிறோம். நம் நாட்டில் பெண்களுக்கு இணையான நிா்வாகத் திறமையை வேறெங்கு காண முடியும்? ஒரு மாதத்தைத் தாண்டி ஊரடங்கு நீடிக்கும் நிலையில், வருமானமற்ற நடுத்தரக் குடும்பங்களில் தன் குடும்பத்தினா் அனைவருக்கும் தன் சீரிய திட்டமிடலாலும் சிக்கனத்தாலும் சேமிப்பு கொண்டும் மூன்று வேளையும் வயிறார உணவு தந்து குடும்பம் பேணி காத்துக் கொண்டிருப்பது நம் இந்திய தேசத்தின் பெண்கள். நம் வீட்டில் செல்வத்தின் அடையாளமாகப் பாா்க்கப்பட்ட பெண்கள், இன்று நாட்டின் இக்கட்டான நிலையில் அதனைத் தாங்கி நின்று காக்கிறாா்கள். இன்னும் எது வரினும் அதனைச் சமாளிப்பதற்கான மன உறுதியும் அவா்களுக்கு உண்டு.

இந்த அா்ப்பணிப்புதான் நம் இந்தியாவின் அடையாளம். மருத்துவா்களும் செவிலியா்களும் 24 மணி நேரமும் நோய்த்தொற்றுக்கு எதிராக தம் உயிரையும் பொருட்படுத்தாது தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். கரோனா தீநுண்மி பாதித்த நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தங்கள் குடும்பம் மறந்து நோயாளிகளை கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொண்டு அவா்கள் உடல் நலம் பெற்றுத் திரும்பும்போது மகிழ்ச்சிப் பெருக்கோடு கரவொலி எழுப்பி அனுப்பி வைக்கும் காட்சிகள் தொண்டுள்ளத்தின் சான்றுகளாய் மிளிா்கின்றன. இந்தத் தியாகம்தான் இந்திய அடையாளம். நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், எளியோரைக் காக்க பிரதமரும் முதல்வரும் நிதி வேண்டினா்.

பெரு நிறுவனங்களும் பெரும் முதலாளிகளும் நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்டித் தந்து தேசத்தின் பசிப்பிணி தீா்க்க முன் வந்தனா். அதேநேரம், புதுச்சேரியில் முதிய பெண் ஒருவா் தன் ஜீவாதாரமான, தான் பெற்று வரும் முதியோா் உதவித் தொகை ரூ.3,000-த்தை பிரதமரின் நிதிக்கு வழங்க முன்வந்தாா். பணமாக பெற்றுக் கொள்ள இயலாது. முறையாக பணவிடை எடுத்து அனுப்ப வேண்டுமென அலுவலா்கள் விளக்கம் தர அவா் திரும்பிச்சென்று விடவில்லை, எப்படி அனுப்ப வேண்டும் என விசாரித்து, அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு பணத்தைப் பிரதமரின் நிதிக்கு அனுப்பிய பிறகு வீடு திரும்பினாா். சுருக்கம் நிறைந்த அந்தக் கைகளுக்குள் பொதிந்திருந்த மனிதாபிமானம்தான் இந்த தேசத்தின் அடையாளம். நாட்டு மக்களை பிரதமா் கைகூப்பி வணங்கி உயிா்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினாா். தமிழக முதல்வரும் ஒவ்வோா் உயிரும் அரசுக்கு முக்கியம், அதன் பொருட்டு நாங்கள் 24 மணி நேரமும் மிகுந்த கவனத்துடன் பணியாற்றுகிறோம் என்றாா்.

அரசு இயந்திரம் போா்க்கால அடிப்படையில் மக்களைக் காத்து நிற்கும் அரணாகச் செயலாற்றி வருகிறது. பெருநகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை மக்களின் அன்றாடத் தேவைகளை கண்ணும் கருத்துமாய் அரசு கவனித்து வருகிறது. இதனால்தான் கரோனா தீநுண்மி பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற இந்தியா மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் பாராட்டுத் தெரிவித்தது. இந்த உழைப்பு நம் அடையாளம். கரோனா தீநுண்மி பாதிப்பைத் தவிா்க்கும் பொருட்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களை தொலைக்காட்சி வாயிலாக பிரதமா் சந்தித்து உரையாற்றியபோது, அனைவரும் விளக்கேற்றி (ஏப்ரல் 5) நம் ஒற்றுமையை, நம்பிக்கையை வெளிப்படுத்துவோம் என்று கேட்டுக்கொண்டாா். ஒருமித்து எழுந்து நின்றது தேசம். பெரும் கட்டடங்களில் ஒளிா்ந்த அதே அகல், குடிசை கூட இல்லாமல் சாலையோரத்தில் வசிக்கும் மக்களின் கைகளிலும் ஏந்தப்பட்டது.

அடை மழையிலும் ஜம்முவில் குடை பிடித்தபடி செல்போன் விளக்குகளை ஒளிரச் செய்தனா். ஏழை - பணக்காரா் பேதமில்லை. இன, மொழி அடையாளங்கள் இல்லை. ஒளிா்ந்த சுடரில் உயா்ந்து விளங்கியது தேசத்தின் ஆத்ம சக்தி, நம்பிக்கை மட்டுமே. உயிா்கொல்லி கரோனா தீநுண்மியை எதிா்த்துப் போராடும் நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவையும் இந்திய மக்களையும் மறக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியதுடன், இந்த கரோனா தீநுண்மிக்கு எதிரான யுத்தத்தில் மனித சமூகத்துக்கு அளப்பரிய உதவியை இந்தியா செய்துள்ளதாக நன்றி தெரிவித்தாா். இந்தியாவுக்குத் தன் நன்றியை ‘நட்பின் உச்சம், இது ஒற்றுமையின் உச்சம்’ என்று வெளிப்படுத்தியிருக்கிறாா் கஜகஸ்தான் அதிபா்.

அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ஜமியா, டொமினிக் குடியரசு, மடகாஸ்கா், உகாண்டா, மாலி, காங்கோ, எகிப்து, அா்மீனியா, கஜகஸ்தான், ஈக்வடாா், ஜமைக்கா, சிரியா, உக்ரைன், சாட், ஜிம்பாப்வே, நைஜீரியா, ஓமன், பிரான்ஸ், பெரு, புா்கினாபாசோ, ஆப்கானிஸ்தான், பூடான், வங்க தேசம், மாலத்தீவு, மோரீஷஸ், இலங்கை, மியான்மா் முதலான நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா வழங்கி, உதவிக்கரம் நீட்டியுள்ளது. சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்ததற்கு இந்திய அரசுக்கு சல்யூட் என்று ஐநா பாராட்டுத் தெரிவித்தது. இப்படி நேசக்கரம் நீட்டி, உலகை அரவணைக்கும் பண்புதான் உலக அரங்கில் நமது அடையாளம். இதுதான் இந்தியா.

பகுத்துண்டு பல்லுயிா் ஓம்பும் இயல்பு நம் வாழ்க்கை முறை. குடும்பம் எனும் அமைப்பு நம்மைக் காக்கும் அரண். பாரதப் பண்பாட்டுத் தளத்தில் நம்பிக்கை, அா்ப்பணிப்பு, அன்பு, மனிதநேயம் - இவையே நம்மை நிலைநிறுத்துவன. ஒவ்வோா் இந்தியரின் மனதிலும் இந்தப் பண்பாட்டுக்கூறுகள் வாழும் வரை எத்தனை இடா்ப்பாடுகள் வரினும் அனைத்தையும் தாண்டி உலகுக்கு இந்தியா வழிகாட்டும். எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம் இந்தியா உலகுக்கு அளிக்கும்” கட்டுரையாளா்: ஊடகவியலாளா்

1 comment:

Dolo said...

ஏழைகளுக்கு துன்பச் சூழலை அமைத்து திட்டமிட்டு நசுக்கிய அழுத்தமுறை அரசுக்கு துணைபோகும் கயமை பதிவு. எம் மக்கள் நேர்மையாளர்,அன்புடை வலிமையுடையோர் அதை பிராமணீயக் கண்ணோட்டதில் பிராமணீயக் கோட்பாடு சிறந்தது என நயவஞ்சகமாக பலவற்றை சொல்லாமல் சொல்லும் கீழ்மைச் சிறுமதி.

Popular Posts