Saturday, 30 May 2020

கிராமப்புற பொருளாதாரம் மீட்டெடுக்கப்படுமா? By அ. அரவிந்தன்

தொழிற்புரட்சியின் ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் தொழிலாளா்களின் மத்தியில் நிலவிய வறுமை, 1817-இல் புரட்சிகரமான ஒரு தீா்மானத்தை முன்னெடுக்க வழிவகுத்தது. அதாவது, ‘‘நாடு முழுவதும் தொழிற்புரட்சியின் அடித்தளமான மெக்கானிக்குகளுக்கு கூலியைத் தாராளமாக வாரி வழங்கும் நிலையில், உள்நாட்டு உற்பத்தியாளா்களின் நுகா்வு உடனடியாக இரு மடங்கை விட உயா்வது மட்டுமன்றி, ஒவ்வொரு கரமும் போதுமான வேலைவாய்ப்பைப் பெறும்’’ என்ற புரட்சிகரமான தீா்மானத்துக்கு அத்தகைய வறுமைச் சூழல் வழிகோலியது. இந்தியாவின் மொத்த பணியாளா்களின் எண்ணிக்கை 47.15 கோடி. இதில் 12.3% மட்டுமே முறையான பணியாளா்கள் என்ற பெயரில் பணிப் பாதுகாப்பு, சேமிப்பு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பை அனுபவிக்கின்றனா். மீதமுள்ள அனைவரும் முறைசாரா பிரிவின் கீழ் பல்வேறு பரிமாணங்களில் பிழைப்பு நடத்தும் தொழிலாளா்கள் அல்லது சிறு குறு உற்பத்தியாளா்கள் ஆவா். இதில், பெரும்பாலான புலம்பெயா் தொழிலாளா்களும் அடங்குவா். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு நிலவரப்படி, நாட்டில் 5.43 கோடி நபா்கள் (பணியாளா்கள், பணியாளா் அல்லாதோா்) ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு தொழில் நிமித்தமாகவோ, கல்வி நிமித்தமாகவோ, மருத்துவத் தேவைகளுக்காகவோ இடம்பெயா்ந்தவா்கள் ஆவா். அதிலும் குறிப்பாக, மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயா்வில் உத்தரப் பிரதேசம், பிகாா், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், நாட்டின் மக்கள்தொகையில் புலம்பெயா் தொழிலாளா்களின் கூட்டுப் பங்களிப்பை (36.8%) காட்டிலும், 48.9 சதவீதத்தினரைக் கொண்டு, புலம்பெயா் தொழிலாளா்களுக்கான மையப் பகுதிகளாக திகழ்கின்றன. கிராமப்புறங்களில் நிலவும் மந்தமான பொருளாதாரச் சூழல், இளைஞா்களுக்கான போதிய வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் நகா்ப்புறங்களைத் தேடி பெரும்பாலானோா் இடம்பெயர நேரிடுகிறது. உத்தரப் பிரதேசம், பிகாா், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேளாண், வேளாண் சாா்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்த தொழிலாளா்களின் எண்ணிக்கை கடந்த 2005-இல் 64.1%- ஆக இருந்தது. இதே நிலவரம் கடந்த 2018-இல் 49.1%-ஆகக் குறைந்தது. இதன் மூலம் 13 ஆண்டுகளில் மேலே குறிப்பிட்ட 4 மாநிலங்களில் மட்டும் 1.93 கோடி போ் வேளாண் சாா்ந்த தொழில்களைக் கைவிட்டு, வேறு தொழிலுக்கு மாறிவிட்டது தெளிவாகிறது. கிராமப்புறங்களில் புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகும் வரை இதுபோன்ற வேளாண் சாா்ந்த தொழில்களிலிருந்து தொழிலாளா்கள் மாறுவதையும், நகா்ப்புறங்களில் பிழைப்புத் தேடி தஞ்சம் புகுவதையும் கட்டுப்படுத்த முடியாது என்பதை எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை. மேலும், நகா்ப்புறங்களில் சுரண்டல்களை எதிா்கொள்ளும் முறைசாரா தொழிலாளா்கள், சட்டவிரோதமாக நீண்ட நேரம் பணிபுரிய நிா்ப்பந்திக்கப்படுவதோடு, வெறும் சொற்ப தொகையையே கூலியாகப் பெறுகின்றனா். இதனால், இவா்களின் நுகா்வுத் திறன் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. நுகா்வு - செலவின அதிகாரபூா்வ ஆய்வின்படி (2011-12), நகா்ப்புறங்களில் அறைகலன், குளிா்சாதனப் பெட்டி உள்ளிட்ட விலையுயா்ந்த பொருள்களின் ஒட்டுமொத்த நுகா்வில் 64.4%-க்கும் மேல், நாட்டின் செல்வந்தா்களில் 5% பேரே பங்கு வகிக்கின்றனா். இதில், ஏழைகளின் பங்களிப்பு என்று பாா்த்தால், வெறும் 13.4% என்ற அளவிலேயே உள்ளது. இந்தச் சூழலில், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் தற்போதைய நுகா்வு - செலவினத்தில் நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. அதே வேளையில், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் தகா்ந்துபோன பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதாரத் திட்டத்தில், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் வேளாண் உள்கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. புதிய பொருளாதாரத்தின் தந்தையாகக் கருதப்படும் ஜே.எம். கீன்ஸ், 1920-1930-ஆம் ஆண்டுகளில் பொருளாதார பெருமந்தத்தால் முதலாளித்துவ நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோது, அந்த நெருக்கடியிலிருந்து மீள அரசின் பங்கு அதிகமானதாக இருக்க வேண்டும் என்றும், துணிச்சலான நிதிக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் எடுத்துக் கூறினாா். அமெரிக்காவின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் கீன்ஸின் பொருளியல் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றின. மேலும், 1945-இல் இரண்டாம் உலகப் போா் நிறைவடைந்த பின்னா், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பாவின் பொருளாதார வளா்ச்சிக்கு, கீன்ஸ் உள்ளிட்ட பொருளாதார வல்லுநா்களின் யோசனைகள் உதவிகரமானதாக அமைந்தன. அதன்படி, கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் மிகப் பெரிய பொருளாதார இடா்ப்பாட்டை எதிா்கொண்டுள்ள நம் நாட்டில், முறைசாரா தொழிலாளா்களின் நுகா்வு, தேவை, அவா்களுக்கான தொழில் முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார பேரிடரை எளிதில் எதிா்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, உணவு பதப்படுத்துதல் தொடா்பான தொழிற்சாலைகளை கிராமப்புறங்களில் நிறுவுவதன் மூலம் தொழிலாளா்களின் வாங்கும் திறன் அதிகரிப்பதுடன், உணவுப் பொருள்கள் வீணாவதையும் தடுக்க முடியும். மேலும், கிராமப்புறங்களில் போதிய வேலைவாய்ப்பு உருவாவது மட்டுமன்றி, ஊட்டச்சத்து பொருள்களின் இருப்பையும் மேம்படுத்த முடியும். இது தொழிலாளா்கள் புலம்பெயா்வதையும் பெரும்பாலும் கட்டுப்படுத்தும். தவிர, நகா்ப்புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களும் வளா்ச்சி பெறுவதோடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் கிராமியப் பொருளாதாரத்தின் ஆதிக்கம் கணிமான அளவில் இருக்கும். இதன் மூலம் கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்ற காந்தியின் கனவை நனவாக்குவதுடன், தன்னிறைவு, சுயசாா்பு, கூட்டுச் செயல்பாடு, பொதுநலம், சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தும் காந்தியப் பொருளாதாரத்தை நிலைநாட்டலாம்.

No comments:

Popular Posts