டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை வரும் ஜூன் 12-ம் தேதி
திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர்,
குறைபாடுகள் இல்லாமல் கடைமடைப் பகுதிகள் வரை முழுமையாகச் செல்லும்
வகையில் பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது முடக்கம் காரணமாக விவசாயிகளிடம் பணப் புழக்கம் இல்லாத
நிலையில், கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்கி அரசு
உதவ வேண்டும்.
அதேபோல விதை, உரம் உள்ளிட்ட விவசாய இடுபொருள்கள் தட்டுப்பாடின்றி
கிடைக்கவும், குறைந்தபட்சம் சிறு - குறு விவசாயிகளுக்கு அவற்றை
இலவசமாக வழங்க அரசு முன்வர வேண்டும்.
மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில்
கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை மாதாந்திர
அடிப்படையில் பெறுவதற்கு தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தரத் தலைவரை நியமிப்பதையும்
தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக அது தொடர்ந்து செயல்படுவதையும்
உறுதிப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு காவிரி பாசனப் பகுதியில் முழு
வீச்சில் விவசாயப் பணிகள் நடைபெற வேண்டுமென்றால், அரசு ஏற்கெனவே
அறிவித்துள்ள குடிமராமத்து, தூர்வாரும் பணிகளை மிக வேகமாக
முறைகேடு இல்லாமல் நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக, கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பு ஒருபுறம்
இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழகம் முழுவதும்
ரூ.498.50 கோடியில் 1,327 குடிமராமத்துப் பணிகள் தொடங்கப்படும் என
தமிழக அரசு அறிவித்தது; ஆனால், இந்தப் பணிகள் மந்த கதியில் உள்ளன.
குறிப்பாக, தமிழகத்தில் ஏரி, குளங்கள், ஆறு, ஊருணி போன்ற
நீர்நிலைகளைத் தூர்வாரி மக்களின் குடிநீர்த் தேவை, சாகுபடி தேவை,
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடும் நோக்கத்தில், "குடிமராமத்து'
என்ற பழைய திட்டத்துக்கு 2016-17-ஆம் ஆண்டில் அரசு புத்துயிர்
கொடுத்தது.
விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் இந்தத் திட்டத்தை
அரசு அறிவித்தது. டெண்டர் முறைகேடுகளை எதிர்த்து விவசாயிகள்
அமைப்புகள் மூலம் போராட்டங்கள் நடத்திய பிறகு, அதில் மாற்றம்
செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் 1,519 பணிகள் ரூ.100 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டன.
இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதால் 2017-18-ஆம்
ஆண்டில் 1,523 பணிகள் ரூ.331.68 கோடியிலும், 2019-20-ஆம் ஆண்டில்
1,829 பணிகள் ரூ.499.28 கோடியிலும் செயல்படுத்தப்பட்டன.
நடப்பு நிதியாண்டில் (2020-21) ரூ.498.51 கோடியில் 1,387 பணிகளைச்
செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி திருச்சி
மண்டலத்துக்கு ரூ.140.64 கோடியில் 458 பணிகள், மதுரை
மண்டலத்துக்கு ரூ.156.37 கோடியில் 306 பணிகள், கோவை மண்டலத்துக்கு
ரூ.45.50 கோடியில் 246 பணிகள், சென்னை மண்டலத்துக்கு ரூ.155.95
கோடியில் 377 பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகளைத் தொடங்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் பிரச்னை என்னவென்றால் கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில்
நடைபெற்ற குடிமராமத்துப் பணிகளில் 50% பணிகள் ஒத்திவைக்கப்பட்டு
தற்போது நடைபெற வேண்டியுள்ள நிலையில், நடப்பாண்டில் ரூ.60 கோடி
மதிப்பிலான தூர்வாரும் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது
நடைபெறுகிறது.
வரும் ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் தூர்வாரும்
பணிகளுக்கான டெண்டர் இப்போதுதான் வைக்கப்படுகிறது. இந்தச் சூழலில்
பணிகள் எப்போது தொடங்கும், எப்போது முடிவடையும் என்பது போன்ற
கேள்விகள் டெல்டா விவசாயிகளிடையே எழுந்துள்ளன. தஞ்சாவூர்,
திருச்சி போன்ற மாவட்டங்களில் மட்டும் டெண்டர் வைக்கப்பட்டுள்ளது
என்று கூறப்படுகிறது. என்னென்ன பணிகள் என்ற விவரம் ஏதும் இதுவரை
அறிவிக்கப்படவில்லை என்கின்றனர் விவசாயிகள்.
அனைத்துப் பணிகளையும் ஒருவருக்கே அளிக்கக் கூடாது. அவ்வாறு
அளித்தால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று
மாவட்டங்களிலும் ஒருவரால் எப்படி விரைவாக முடிக்க முடியும் என்று
விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக்கு நல்ல வாய்ப்பு உள்ளதாக வானிலை
ஆய்வு மையம் தெரிவிக்கிறது. எனவே, அதற்குள் தூர்வாரும் பணிகளை
முடிப்பதற்கு மாவட்ட வருவாய்த் துறையும், பொதுப்பணித் துறையும்
நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று டெல்டா விவசாயிகள்
விரும்புகின்றனர்.
அத்துடன் தற்போது மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகளை
ஏற்கெனவே பதிவு செய்துள்ள விவசாய அமைப்பு மூலமாக செய்ய வேண்டும்.
ஆயக்கட்டுதாரர்கள், பாசனதாரர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டங்களை
நடத்தி தேர்வு செய்யப்படும் பணிகளை முறைகேடுகள் இல்லாமல்
செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில்நுட்பங்களின் விவரங்களை விவசாயிகளுக்குத் தெரிவிப்பது,
வங்கிக் கணக்குகள் தொடங்குதல், ஜிஎஸ்டி பதிவு செய்தல் போன்ற
முன்னேற்பாடுகளைத் தொடங்குவதற்கு உரிய வழிகாட்டுதல்களை மாவட்ட
நிர்வாகம் செய்ய வேண்டும்.
ஒப்புதல் வழங்கப்பட்ட குடிமராமத்துப் பணிகளை மாவட்டங்கள்
முழுவதும் வேகமாகத் தொடங்க வேண்டும். கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை
காரணம் காட்டியோ, மழை - மேட்டூர் அணை திறப்பு காரணமாக பணிகளை
வேகமாக முடிக்க வேண்டும் என்று கூறியோ அரைகுறை பணிகளாக மாற்றி
திட்டப் பணிகளுக்கான மொத்தத் தொகையில் முறைகேடு நடப்பதற்கு
இடமளிக்கக் கூடாது.
கரோனா தீநுண்மி நோய்த்தொற்று ஒரு பக்கம் இருந்தாலும் சமூக
இடைவெளியுடன் கூடிய கட்டுப்பாட்டோடு பணிகளை விரைவுபடுத்த
வேண்டும். நடைபெறப் போகும் குடிமராமத்து, தூர்வாருதல், கிராமப்புற
வேலைவாய்ப்புத் திட்டங்களை இப்போதே தொடங்கி விரைவாக முடிக்க
வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் விருப்பம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment