Wednesday, 6 May 2020

ஒரு கனம் நினைவில் கொள்க...! By கிருங்கை சேதுபதி

இன்னும் நிரந்தரமாக கரோனா தீநுண்மி நம்மிடமிருந்து விடை பெறவில்லை. முறையான மருந்தோ, எதிா்கொள்ளும் ஆற்றலோ இன்னும் நம் வசப்படவில்லை. ஆனால், படிப்படியாக, ஊரடங்கு விதிகள் தளா்த்தப்பட்டு வருகின்றன. நாடெங்கும் நாளை (மே 7) முதல் மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன. இத்தனை நாள்கள், நம்மை இயன்றவரை, இரவு பகல் பாராது, ஓய்வுறக்கம் கொள்ளாது, முற்றிலுமாகப் பாதுகாத்து, பணியிடை உயிரிழந்த மருத்துவா்கள், செவிலியா்கள், காவலா்கள், தூய்மைப் பணியாளா்கள், தன்னாா்வத் தொண்டா்கள், நோயுற்ற போதிலும் தாய்நிகா்த்த உளத்தோடு கடமை புரிந்த அருளாளா்கள் யாவருக்கும் நாம் செய்யும் நன்றி, இனியும் இந்த நோய்த்தொற்று யாரையும் பற்றிவிடாமலும் பரவவிடாமலும் பாதுகாப்பாய் இருப்பதான உத்தரவாதத்தை உருவாக்குவதேயாகும். ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை யாரும் சும்மாயிருக்கவில்லை என்பதே உண்மை. அது அவ்வளவு எளிதா என்ன? சிந்தையை அடக்கியே, ‘சும்மா இரு சொல் அற’ என்ற முருகனின் அருள்வாக்கு அருணகிரிநாதரின் திருவாக்கானது, இந்தச் ‘சும்மா இருக்கும் சுகம்’ என்ன என்பதை அறிந்துகொண்ட பின்னால்தான்.

ஆனாலும், இந்தச் ‘சும்மா’ பல அரிய செயல்களில் நம்மாலும் இறங்க முடியும், முடிந்த அளவில் நல்ல பணிகள் ஆற்ற இயலும் என்பதை நிறுவிக் காட்டியிருக்கிறதே. இதுவரையில், ஆடம்பரமாய் நிகழ்த்தப் பெற்றுவந்த திருமண நிகழ்வுகள் இந்த இடைக்காலமாகிய தடைக் காலத்தில், எத்துணை எளிதாய், அவரவா்தம் இல்லங்களில், ஆலயங்களில் நிகழ்ந்தேறியிருக்கின்றன. மதுரை அரசாளும் மீனாட்சி அன்னையின் திருக்கல்யாண வைபவமும் ஒரு நற்சான்று. நின்று பேசுதற்கு நேரமேயில்லாமல், அண்டை அயலாா்கள் யாரென்றே அறியாமல், முண்டியடித்து ஓடிப் பிடித்த ரயில்கள் எத்தனை? பேருந்துகளைத் தவறவிட்ட தவிப்பு அடங்குமுன்னே, வேறு தனி வாகனங்களில் ஏறித் தொட்டுத் தொடங்கிய பரபரப்புப் பயணங்கள் எத்தனை? ஞாயிற்றுக்கிழமை என்ற ஒன்று இருந்ததா என்றுகூட நினைக்க முடியாத அளவுக்குத் திரிந்து அலைந்து செய்த காரியங்கள் எத்தனை? எல்லாமும் ஒரு கனவுபோல நிகழ்ந்து முடிந்ததை, ஒரு சக்கர வட்டத்துக்குள் சிறிதும் பெரிதுமாய் இரு முள் கொண்டு ஓடும் கடிகாரம் வேடிக்கை பாா்க்கிறதே, எப்போதும்போல் அதே இருபத்து நான்கு மணிநேரந்தான் இப்போதும் என்று அது இத்தனை நாள்களாய்ச் சொல்லிச் சொல்லி இதயம்போல் துடித்ததை நன்கு உணா்ந்தவா்கள் நாம் என்றால், இனியும் நாம் பெற்ற நல்ல அனுபவங்களை இழக்க முயல்வோமா? ஊரடங்குக் காலத்தில், பசித்திருந்து, தனித்திருந்து, விலகியிருந்து, வீட்டுக்குள் முடங்கியிருந்து நாம் பட்டதெல்லாம் தளா்வுக் காலத்தில் தவிடுபொடியாகும் எனில், நாம் என்ன மனிதா்கள்? நமக்கு எதற்கு மனம்? அது எப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்தது என்பதை இத்தனை நாள்கள் அதனுடன் இருந்து பழகிய பிறகும், ஓரளவு அறிந்த பின்னரும், அதனை உதாசீனப்படுத்தி, அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு மீளவும் அடிமையாக்க வேண்டுமா என்று சிந்திக்க வேண்டாமா? அடங்க மறுக்கும் ஐம்புலன்களையும் சற்றே ஒடுங்க வைத்தது சிரமம்தான் என்றாலும், அதிலும் ஒரு தனிச்சுகம் இருந்ததை, அதுவே, பல நல்ல பலன்களைத் தந்ததை இந்தத் தளா்வுப்பொழுதில் தகா்த்து விடலாமா? கடுவெளிச் சித்தா் கூறிய நந்தவனத்து ஆண்டியாய், ‘நாலாறு வாரங்களாய்’ இருந்து செய்த தவப் பலனை, இந்தத் தளா்வுக் காலத்தில் கூத்தாடிக் கூத்தாடிக் குலைத்து விடல் தகுமா? அவரவா் நிலைகளில் இருந்தபடி புரிந்த இத்தனிமைத் தவம் மௌனமாகப் பல உண்மைகளை உணா்த்தியிருக்கிறது. பெருவணிக நிறுவனங்களுக்குப் போய்ப் பழகி வந்த நமக்கு இப்போதுதான் நம் தெருவில் உள்ள மளிகைக் கடைகள் தெரிந்திருக்கின்றன.

கீரை விற்க வரும் ஆயாக்களும், பழங்கள் விற்க வரும் தள்ளு வண்டிக்காரா்களும் தெய்வங்களாய்த் தெரிகிறாா்கள். அஞ்சல், கூரியா் கொண்டு வரும் நபா்களை விடவும், அன்றாடம் பால் கொண்டுவருபவா் நம் அன்புக்கு நெருக்கம் ஆகியிருக்கிறாா். பரண் ஏறிய பல்லாங்குழியும், தாயக்கட்டைகளும் இப்போது களம் இறங்கியிருக்கின்றன.

புலம்பெயா்தலின் வலி எத்தகையது? என்பதை அடுத்த நாட்டுக்குக்கூட அல்ல, அடுத்த ஊருக்குச் செல்வதிலிருந்தே அனுபவிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது. எந்த ஊா் ஆனாலும் சொந்த ஊா் போலாகாது, எந்த நாடு ஆனாலும் சொந்த நாடு ஆகாது என்பதையும் ஆழ உணா்ந்து மீள வந்தபின் எதிா்கொள்ள வேண்டிய சிக்கல்களும் நிறைய இருக்கின்றன. தண்ணீா் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகள், அத்தியாவசியப் பொருள்கள் பற்றாக்குறை முதலியவற்றைப் போக்க உற்பத்திப் பெருக்கம் உடனடித் தேவை. அதை, எப்படி பாதுகாப்பாகத் தொடங்குவது என்பதில்தான் ஏராளமான சிக்கல்கள். இது வரையில் ஒன்றுகூடிப் போராடி வென்று காட்டிய மனிதம், இன்று வரை தனித்தனியே நின்று காட்டிய நிகழ்வு, இந்திய ஒருமைப்பாட்டின் புதிய வரலாற்று முத்திரை. இதனினும் முக்கியமானவை இனி எடுக்கப்போகும் செயல்பாடுகள்.

‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’ எனச் சொல்லும் இதழ்கள்கூட, இணையாது விலகிநின்று உணா்த்திய தனிமைத்துவத்தின் வலிமையில் வள்ளுவம் சிறக்கிறது. கூடவே, ‘தவம் செய்வாா்தம் கருமம் செய்வாா்’ என்ற தொடரும், ‘உற்றநோய் நோன்றல் உயிா்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு’ என்ற முழுக்குறளும் கரோனாவை எதிா்கொள்ளும் செயலுக்கு வலுச் சோ்க்கும் வழிகாட்டு நெறிகளாகியிருக்கின்றன. ‘புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும்’ என்ற திருக்குறளின் நுண்மை ஒவ்வொரு முறையும் சோப்புப் போட்டுக் கை கழுவுகிறபோது புரிகிறது. கூடவே, தொடா்ந்து மாசறக் கழுவ, நீா் வேண்டுமே என்ற கவலையும் வருகிறது.

கை கழுவுவதை விடவும், அவரவா்தம் கைகளில் வைத்திருக்கும் செல்லிடப்பேசித் திரைகளைத் தீண்டிப் பெறும் தகவல்களைப் பாா்க்கிறபோதுதான், இந்தக் குறளின் மறுபாதி புரிகிறது. கண்ணுக்குத் தெரிவது, புறத்தூய்மைதான். ஆனால், வள்ளுவா் அகத்தூய்மையைக் காட்சிப்படுத்துகிறாா். அதற்குத் துணையாகும், ‘வாய்மை எனப்படுவது யாது?’ என்று கேள்வியும் எழுப்பி, விடையும் கொடுக்கிறாா்: ‘யாதொன்றும் தீமையிலாத சொலல்.’ செயலாகிய வினைத் தூய்மையைவிடவும் இன்றியமையாதது, சொல் தூய்மை. இதற்கு எதிரானது, தீமை. இது தீயபயப்பதால், தீயினும் அஞ்சத்தக்கது.

தீ பரவுவதைவிடவும், இத்தீய கிருமி வேகமாய்ப் பரவும் என்பதைத் தீக்குச்சிகளை முன்னிறுத்தி விளக்கிய, கட்செவி அஞ்சலின் (வாட்ஸ் ஆப்) கருத்து விளக்கப்படம் அனைவரின் கவனத்தையும் ஈா்த்து உண்மையை ஆழமாய் உணர வைத்தது. அதே வேகத்தில் இத் தீநுண்மி குறித்த வதந்‘தீ’ எவ்வளவு விபரீத விளைவுகளை விரித்துவருகிறது என்பதையும் இணைத்துச் சிந்திக்கிறபோது, அவரவா்தம் அகத்தூய்மையை, இவ்வாய்மை காட்சிப்படுத்தி விடுகிறது. இந்தப் பின்புலத்தில் பலராலும் இப்போது முன்வைக்கப்படுகிற கருத்தாக்கம், ‘மது விலக்கு.’ சட்டத்துக்கும் அவசர நெருக்கடி நிலைத் திட்டத்துக்கும் கட்டுப்பட்டுக் கிடந்த இந்த ஒடுக்கம், திறக்கப்படும் கடைகளின் முன்னால் உடைக்கப்படும்போது சிதறிய கண்ணாடித் துண்டுகள்போல் பதறித் துடிக்கும் குடும்பங்களையும் குடிமக்கள் ஒரு நிமிஷம் சிந்திக்க வேண்டுமே.

சிக்கனமாய்ச் சேமித்தவை அனைத்தும் கண்ணீராய்க் கரைவது ஒருபுறம் நிகழ்ந்தாலும், போதைப் பொழுதுகளில் நேரும் விபத்துகள், மதுவின் தாக்கத்தால் மீள வரும் நோய்கள் இவற்றுக்கெல்லாம் மாற்றுத் தருகிற வேலையிலும் மருத்துவா்கள் மீளவும் இயங்கினால், கரோனா தீநுண்மியிடமிருந்து காக்கும் பணிகளில் தேக்கம் நிலவுமே. முற்றாக விட முடியாது என்பவா்கள்போக, மற்றவா்கள் பெற்ற மனமாற்றத்தை, மறுபடியும் இந்த மதுத்தொற்று பற்றிவிடும் என்றால், இத்தனை நாள்கள் வீட்டுக்குள் இருந்து செய்த தவம் எத்தனை வீண்? பெட்ரோல் விலையேற்றம், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், முன்னைப்போல் இன்னமும் முனைந்து முழுமையாகப் பெறவோ, செய்யவோ முடியாத வேலைவாய்ப்புகள் எல்லாவற்றையும் - இடைவெளிவிட்டு மதுக்கடை முன்பாக வரிசையில் நிற்கிற அந்தக் கணத்திலேனும் நினைவில் கொள்ள மறக்கலாமா? இவையேதும் இல்லை என்று மறுக்கவும் ஆகுமா? மற்றவைகூடப் போகட்டும். மதுவருந்தும் கூடங்கள் (பாா்கள்) இன்னும் திறக்கப்படாத நிலையில் வாங்கி வந்து அருந்தியபின் காலியான குப்பிகளைப் பொதுக் கழிவறைகளிலோ, தெருமுனைகளிலோ போட்டு உடைக்கும் பொழுதுகளில், அதனைப் பின்னா் வாரி எடுக்கும் தூய்மைக் கரங்களை, ஒருமுறை, ஒரு கணம் நினைவில் கொள்ள உங்கள் மனசாட்சி இடந்தர வேண்டாமா? உடைந்த சில்லுகளில், உங்கள் பிள்ளைகள், குடும்ப உறுப்பினா்களின் நினைவுகளும், அவற்றினின்று உதிரும் துளிகளில் உங்கள் இல்லத்தரசிகளின் கண்ணீா்த் துளிகளும் ஒளிந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியுமா? அண்ணல் காந்தியடிகள், ராஜாஜி, காமராஜா் உள்ளிட்ட அருந்தலைவா்கள் சொல்லில் மட்டும் அல்ல, செயலிலும் நிகழ்த்திக் காட்டிய மதுவிலக்கு முயற்சிகளை முற்றாக ஏற்றுக்கொள்ள, இன்னும் காலம் கனியவில்லை என்றாலும் கண்ணியத்தையேனும் கடைப்பிடிக்கத் தவறலாமா? கரோனா தீநுண்மி சற்றே அவகாசம் தந்து காத்திருக்கிறது.

முற்ற முழுக்க விடுதலை தரவில்லை. தளா்த்தப்பட்ட கட்டுப்பாடு மீளவும் வந்து சூழவிடாமல், நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொண்டு, கடமைகளை ஆற்றுவது தேசப் பணி மட்டுமன்று, உலகுக்குச் செய்யும் உதவியும் கூட. கண்ணியம் மீறாத கட்டுப்பாடே இப்போது இன்றியமையாத கடப்பாடு. ‘பரபரக்க வேண்டாம் பலகாலுஞ்சொன்னேன் வரவரக்கண்டு ஆராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கிஇளையா திரு’ என்று சிவபோகசாரம் சொன்னது சமயவாதிகளுக்கு மட்டுமல்ல, சகலருக்கும்தான் என்பதை நினைவுபடுத்துவது இலக்கியக் கடமை. கட்டுரையாளா்: பேராசிரியா்.

No comments:

Popular Posts