Saturday 4 April 2020

கொரோனா: சில நல்ல விளைவுகளும் உண்டு...

உலகையே மிரட்டி, முடக்கிப் போட்டிருக்கிறது கொரோனா வைரஸ். அதனால் வெள்ளமாய் வெளிவரும் எதிர்மறைச் செய்திகளுக்கு மத்தியில், சில நன்மைகளும் நடந்திருக்கின்றன.

அவை பற்றி...

முதலாவதாக, பல நாடுகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சீனா மற்றும் வடக்கு இத்தாலியில் காற்றில் நைட்ரஜன்- டையாக்சைடு அளவு குறைந்துள்ளது.

காற்றை மாசுபடுத்தி, புவி வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாக உள்ள நைட்ரஜன்- டையாக்சைடின் அளவு காற்றில் குறைந்து காணப்படுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் காரில் இருந்து வெளியேறும் புகை குறைந்துள்ளதால் காற்றில் நைட்ரஜன்- டையாக்சைடு அளவும் குறைந்துள்ளது.

விமானப் போக்குவரத்து சில நாடுகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் காற்றுமாசு அளவு குறைந்துள்ளது.

வெனிஸ் நகரவாசிகள் தங்கள் நகரத்தைச் சூழ்ந்திருக்கும் தண்ணீர் மாசு இல்லாமல் தூய்மையாக காணப்படுவதாகக் கூறுகின்றனர்.

வடக்கு இத்தாலியில் பிரபலமான சுற்றுலாத் தலமான வெனிஸ் நகர கால்வாய்த் தெருக்களில் படகுப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் நகரம் முழுவதும் தண்ணீர் மிகத் தெளிவாக இருக்கிறது. தற்போது அந்த தண்ணீரில் டால்பின்களைக் கூட காணமுடிகிறது.

பல இடங்களில் கடை அடைப்புக்கு முன்பு தேவையான உணவுப் பொருட்களை வாங்க மக்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது. ஆனால் அதேசமயம் மக்கள் மத்தியில் இரக்க குணமும் பரவலாக காணப்படுகிறது.

நியூயார்க்கைச் சேர்ந்த இருவர், ஆயிரத்து 300 தன்னார்வலர்களை ஒன்று திரட்டி 72 மணிநேரத்தில் அத்தியாவசியப் பொருள்களையும், மருந்துப் பொருட்களையும் முதியவர்களுக்கும், வெளியில் வர இயலாத மக்களுக்கும் வீட்டுக்கே கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் குழுக்களாக இணைந்து வைரசை கட்டுப் படுத்தத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர். கனடாவிலும் சில குழுக்கள் இவ்வாறு செயல்படுகின்றன.

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் பலர் நன்கொடைகள் அளித்து வருகின்றனர். உணவு தயாரிக்க செய்முறை விளக்கங்களைப் பகிர்கின்றனர், தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கான உடற்பயிற்சி அறிவுரைகளையும் பலர் பகிர்கின்றனர்.

அவரவர் பணி, அவரவர் வீடு என்று இருந்தவர்கள், கொரோனா பாதிப்புக்குப் பிறகு ஒரு சமூகமாக ஒன்று சேர்ந்துள்ளனர்.

இத்தாலியில் மக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்ட சூழலில், மக்கள் அனைவரும் வீட்டு பால்கனியில் நின்றபடி பாடல் பாடி, இசைக்கருவிகள் வாசித்துக் கூடி மகிழ்கின்றனர்.

தெற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு உடற் பயிற்சி நிபுணர், அடுக்குமாடிக் குடியிருப்பின் நடுவில் நின்று உடற்பயிற்சி மேற்கொள்கிறார். உடற்பயிற்சி நிபுணர் செய்யும் பயிற்சிகளை அந்தக் குடியிருப்பில் உள்ள மக்கள் தங்கள் பால்கனியில் இருந்தபடி கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்கின்றனர்.

மக்கள் பலர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதால் தொலைபேசி மூலம் பழைய நண்பர்களைத் தொடர்புகொண்டு பேச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரசால் மருத்துவத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். லண்டனில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் பலர் தாங்களாகவே முன்வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கின்றனர்.

கோடிக்கணக்கான மக்கள் தனிமைப் படுத்தப்பட்ட நிலையில், பலர் வீட்டில் இருந்தபடி திறமையை வளர்த்துக்கொள்கின்றனர். சமூக வலைத்தளப் பயன்பாட்டாளர்கள் தங்களின் பொழுதுபோக்கு குறித்து விளக்கமாகப் பதிவிடுகின்றனர். புத்தகம் படிப்பது, கேக் செய்வது, ஓவியம் வரைதல் என பல திறமைகளை மக்கள் வளர்த்துக்கொள்கின்றனர்.

இவற்றையெல்லாம் எண்ணி ஆறுதல்பட்டுக் கொண்டே, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர வேண்டியதுதான்!

No comments:

Popular Posts