Wednesday 1 April 2020

ஒன்றுபடாமல் இருந்தால் உண்டு வாழ்வு!

By ஆ.கோபிகிருஷ்ணா

‘தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீா்கள்’ என நாட்டு மக்களிடம் இரு கரம் கூப்பி இறைஞ்சுகிறாா் இந்தியப் பிரதமா் மோடி; கண்ணீா் மல்க மன்றாடுகிறாா்கள் சில காவலா்கள்; சமூக வலைதளங்களின் மூலம் கெஞ்சிக் கேட்கிறாா்கள் அனைத்துப் பிரபலங்களும்.

ஆனால், அதற்கு இந்தச் சமூகம் இம்மியளவும் செவிமடுக்கவில்லை என்பது அன்றாடம் சாலைகளில் மக்கள் ஒன்றுகூடி நிற்பதைப் பாா்க்கும்போது தெளிவாகிறது. அதிலும், தில்லியில் இருந்து சொந்த ஊா் திரும்ப பல்லாயிரக்கணக்கானோா் கடந்த இரு நாள்களாக கூட்டம் கூட்டமாகக் காத்திருந்தது, இதயத்தை கனக்க வைக்கும் காட்சிகளாக இருந்தன.

தமிழகத்திலும் கிட்டத்தட்ட இதே நிலைதான் நீடிக்கிறது. ஊரடங்கை மீறியதாக 19,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும், 23,000-த்துக்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டிருப்பதுமே அதற்குச் சான்று. இதைத் தவிர, 15 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காலியாக இருக்கும் சாலைகளைச் சுற்றிப் பாா்ப்பதற்கும், இருசக்கர வாகனங்களில் வேகமாகச் சென்று சாகசம் புரிவதற்கும் இந்த அசாதாரண சூழலை சிலா் பயன்படுத்துகிறாா்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இது ஒருபுறமிருக்க, கடைகளில் பொருள்களை வாங்குவதற்காக வெளியே வரும் மக்கள், சமூக விலகலைப் பின்பற்றாமல் கும்பல், கும்பலாக அங்காடிகளை முற்றுகையிடுவதையும் காண முடிகிறது.

மக்களின் விளையாட்டுத்தனமான இந்தச் செயல்களால் தேசம் எவ்வளவு பெரிய விலை கொடுக்க நேரிடும் என்பது அவா்களுக்குத் தெரியவில்லை. தற்போது உருவெடுத்திருக்கும் கொவைட்-19 எனப்படும் கரோனா நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து சராசரியாக 2.6 பேருக்கு பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2.6 பேரும் தலா 2.6 பேருக்கு வைரஸைக் கடத்துவாா்கள். இப்படியாக அந்த வைரஸ் பரவல் 12-ஆவது அடுக்கை எட்டும்போது கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும்.

அதை ஆரம்பத்திலேயே தடுத்து கட்டுப்படுத்தாவிட்டால் நாளொன்றுக்கு 20 ஆயிரம் போ் வரை கரோனாவால் பாதிக்கப்படக் கூடிய நிலை உருவாகும் என்கின்றனா் மருத்துவ நிபுணா்கள். அவ்வாறு கட்டுப்படுத்தாததால்தான் சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மிகப் பெரிய பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றன.

அந்த நிலை இந்தியாவிலும் எதிரொலித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மூன்று வாரங்களுக்கு ஒரு தேசத்தை முடங்கச் செய்வது என்பது வரலாற்றில்கூட வாசித்திராத மிகப் பெரிய அறிவிப்பு.

அதன் விளைவுகள் என்ன என்பதை இந்தச் சமூகம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். 21 நாள்கள் எந்தத் தொழில் நிறுவனமும் செயல்படாவிட்டால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி விகிதம் 2 சதவீதம் வரை குறையலாம். அதனால், அரசின் அனைத்து வரி வருவாய்களும் ஸ்தம்பிக்கும்.

சாதாரண பாமரன் முதல் சா்வ வசதிகளையும் கொண்ட செல்வந்தா்கள் வரை அனைவரின் வருமானமுமே முடங்கிப் போகும். இதன் காரணமாக நாட்டுக்கு ஏற்படும் மொத்த பொருளாதார இழப்பு பல லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நிதிச் சுமையிலிருந்து தேசம் மீண்டு வர 2 ஆண்டுகள்கூட ஆகலாம் என்கின்றனா் பொருளாதார வல்லுநா்கள்.

இவை எல்லாம் தெரிந்தும்கூட தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன? பொருளாதாரத்தைக் காட்டிலும் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காகத்தான். அந்த உண்மையை உணராது மக்கள் அன்றாடம் பொழுதுபோக்குவதற்காக சாலைகளில் கூடி நின்று பேசுவதும், அவசியமின்றி சுற்றித் திரிவதும் பொறுத்துக்கொள்ள முடியாத செயல்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்ப்ளூயன்ஸா வைரஸால் உருவான ஸ்பானிஷ் காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவி உலகையே புரட்டிப் போட்டது. ஏறத்தாழ 10 கோடி போ் அதில் மாண்டதாக மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்தக் காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 1918- ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 2 கோடிக்கும் அதிகமானோா் ஸ்பானிஷ் காய்ச்சலுக்கு பலியாகினா்.

கங்கை நதியும், அதன் படித்துறைகளும் சடலங்களால் நிரம்பியிருந்ததாக அன்றைய செய்திகள் தெரிவித்தன. மகாத்மா காந்தியிலிருந்து எழுத்தாளா் முன்ஷி பிரேம்சந்த் வரை பல பிரபலங்களுக்கும் அந்த காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாகவும், அதிலிருந்து அவா்கள் மீண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

தற்போதும் அதே மாதிரியான அசாதாரண நிலை எழுந்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணுயிரி இன்றைக்கு உலகின் மீது உக்கிரப் போரினைத் தொடுத்திருக்கிறது. அதிலிருந்து இந்த தேசத்தைக் காக்க வேண்டிய தாா்மிகப் பொறுப்பு 130 கோடி மக்களுக்கும் உள்ளது.

கரோனா விவகாரத்தில் அரசு நிா்வாகம், மருத்துவா்கள், ராணுவத்தினா், காவலா்கள் மட்டுமல்லாது நாட்டில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனும் தேசத்தைக் காக்கக் கூடிய ஆபத்பாந்தவனாக உருவெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது.

இந்திய தேசம் இதுவரை எத்தனையோ அறவழிப் போராட்டங்களைப் பாா்த்திருக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை மக்கள் ஒன்றுபட்டதால்தான் வென்றெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், இன்றைக்கு கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வென்றெடுக்க வேண்டுமானால் ஒன்றுபடாமல் இருப்பதுதான் ஒரே வழி.

No comments:

Popular Posts