Sunday, 2 February 2020

சங்கடம் தரும் சாலைப்பயணம்

சங்கடம் தரும் சாலைப்பயணம் | பேராசிரியர் மா.ராமச்சந்திரன் | ஊர்ப்புள்ளிகளை இணைப்பதற்கு மனிதனின் கால்கள் வரைந்த கோடுகளே பாதைகள். ஒற்றையடித் தடமாக இருந்து, வண்டித்தடமாக மாறிய பாதைகள், இப்போது பரந்துவிரிந்த பெருஞ்சாலைகளாகி, பயணங்கள் இனிமையாகிவிட்டன. எனினும் சந்தோஷிக்க வேண்டிய பயணங்கள் சில சமயங்களில் சங்கடத்தைத் தந்துவிடுகின்றன. ஆம் சாலைகளில் நடக்கும் விபத்துக்களால் ஏற்படும் சாவும், இழப்பும் சங்கடங்களைத்தானே தரும்?

‘மாநில நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துக்களில் தமிழகம் முதலிடத்திலுள்ளது’ என்பது அதிகாரிகள் தரும் அதிர்ச்சித் தகவலாகும். நெடுஞ்சாலைகளில் மட்டுமின்றிக் கிராமச்சாலைகளிலும் கூட ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன என்பதை அறிக்கைகளால் அறிய முடிகிறது. ‘பேருந்துகள் நேருக்குநேர் மோதல்’, ‘பள்ளிவாகனம் கவிழ்ந்தது’, ‘சாலையோரக் கிணற்றுள் வேன் பாய்ந்தது’, ‘தடுப்புச் சுவர்மீது இரு சக்கர வாகனம் மோதியது’ என்று நாள்தோறும் விபத்துகள் பற்றிய செய்திகளைப் படிக்கவும் செய்கிறோம். இப்படி நடக்கும் விபத்துக்களால் உயிர்ச்சேதமும் உறுப்புச்சேதமும் உண்டாகி, பல குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. சாலை வசதியும் வாகனங்களின் பெருக்கமும் அதிகமாக அதிகமாக இத்தகு விபத்துக்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகின்றன. விபத்தில்லாச் சாலைப் பயணம் சந்தோசத்தைக் கொடுக்கும். விபத்துள்ள சாலைப்பயணம் சங்கடத்தை உண்டாக்கி மனக்கவலையை அளிக்கும்... இதனை உணர்ந்து விபத்தில்லாப் பயணம் மேற்கொண்டு வீடு திரும்பி வருவது நமக்கும் நம் குடும்பத்திற்கும் மட்டுமல்லாது மற்றொரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும்.

வாகனங்களின் பெருக்கம், சாலை விதிகளை மீறல், அதி வேகம், மதுமயக்கம், கவனமின்மை, செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுதல், வணிக வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்வது, பழுதான சாலைகள், பராமரிப்பு இல்லாத வாகனங்கள் என்று சாலை விபத்துக்களுக்குப் பல காரணங்களைக் கூறிக்கொண்டே போகலாம். ஆயினும் வாகன ஓட்டிகள் விழிப்புடன் இருந்து, சாலை விதிகளைப் பின்பற்றினால் விபத்துக்களைத் தவிர்க்க முடியும். இதற்காகத்தான் காவல்துறையினர் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

வாகனங்களின் பெருக்கத்தால் ஏற்படும் நெரிசல் சுமுகமான போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது. இதனால், பல நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகனங்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும் அவலத்தை ஆங்காங்கே காணமுடிகிறது. நெரிசலைப் பொருட்படுத்தாது செல்ல முனையும் வாகனங்கள் பள்ளங்களில் கவிழ்ந்தோ நடைபாதைவாசிகள் மீது மோதியோ விபத்தை உண்டாக்கிவிடுகின்றன. சென்னையைப் பொருத்தவரை கடந்த பதினைந்து ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை 300 சதவீதம் உயர்ந்திருப்பதாக போக்குவரத்துத்துறை குறிப்பிடுகிறது.

‘மிதவேகம் மிகநன்று, ‘இருசக்கரவாகனம் இருவருக்கு மட்டுமே’, ‘தலைக்கவசம் உயிர்க்கவசம்’, என்று போக்குவரத்து காவல்துறை எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அவற்றை மதிக்காத மனப்போக்கு வாகன ஓட்டிகளிடம் வளர்ந்து கொண்டே போகிறது. கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்ட பாதையில்தான் அவை செல்கின்றன. ஒரு வழிப்பாதை என்று தெரிந்தும் அதை இருவழிப்பாதையாக்கும் போக்கு இங்கே சர்வ சாதாரணம். ‘சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 23.5 சதவீதம் அதிகரித்துள்ளது’ என்பது சாலைவிதிகளைப் பின்பற்றாத மனநிலையைக் காட்டும்.

வேகத்தைக் குறைத்து விவேகத்தோடு வாகனங்களை ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் குறைந்து கொண்டே வருவது கவலைக்குரியது. குறிப்பாக இளைஞர்கள் அதிவேகத்தைத்தான் விரும்புகின்றனர். வேகம் விபத்தை உண்டாக்குமே என்பதை அவர்கள் உணர்வதில்லை. அதிலும் முன்னால் செல்லும் வாகனத்தை முந்துவதற்காக வேகத்தைக் கூட்டுவது ஆபத்து என்பதை அவர்கள் உணர்வதில்லை. முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்ல நினைப்பதாலே பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்லவேண்டும் என்பதிலே இருக்கும் குறி, விபரீதமில்லாமல் முந்திச் செல்ல வேண்டும் என்பதில் இல்லாமையே இத்தகு விபத்துகளுக்கு காரணம்.

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயது வராத சிறுவர்கள் கூட, இன்று சர்வ சாதாரணமாக இருசக்கர வாகனத்தைச் சாலைகளில் இயக்கக் காண்கிறோம். இரு சக்கர வாகனம் மட்டுமின்றி நான்கு சக்கர வாகனத்தையும் கூட ஓட்டுநர் உரிமம் இல்லாத பலர் இயக்குகின்றனர். இதுவும் சாலை விபத்துக்களுக்கு காரணமாகிவிடுகிறது. ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களாவது சாலைவிதிகளைச் சரியாகத் தெரிந்திருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை.

வாகனப் போக்குவரத்தை சீர்படுத்தும் வகையில் முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள் பல இருக்கின்றன. ஆயினும் அவை பல இடங்களில் சரிவர வேலை செய்வதில்லை. அவை சரியாக வேலை செய்தாலும் அந்த விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் பொறுமை பலருக்கு இருப்பதில்லை. கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் தாம் முந்திச் சென்றுவிடவேண்டும் என்ற நினைப்பில் சிக்னலை பொருட்படுத்தாமல் வாகனத்தை இயக்குவோர் பலர் இருக்கின்றனர். இந்த அவசரகதி எதிர்பாராத விபத்துகளை உண்டாக்கிவிடுகின்றன.

அனுமதியில்லாது இளைஞர்கள் சாலையில் மேற்கொள்ளும் இரு சக்கர வாகனப் போட்டிகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகமாகி வருகின்றன. காவலர்கள் எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும் இந்தப் போட்டிகளைத் தவிர்க்க முடியவில்லை. தங்கள் பிள்ளைகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதையும் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபடுவதையும் பெற்றோர்கள் கண்டு கொள்வதில்லை. இது சாலையில் நடக்கும் பல விபத்துகளுக்கு சாதகமாகிவிடுகிறது.

மதுமயக்கத்தில் வண்டியோட்டுவோர் மலிந்துவிட்டனர். இதனால் போதையினால் விளையும் சாலை விபத்துகளும் பெருகிவிட்டன. போதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பது பெருஞ்சவாலாக உள்ளது. ஓட்டுனரில் பலர் மதுவுக்கு அடிமையாகி, குடியை விட முடியாதவர்களாகி, குடித்தால்தான் வண்டியோட்ட முடியும் என்ற மனநிலைக்கு ஆளாகிவிடுகின்றனர். இந்த மனநிலையைப் போக்கி, ‘குடித்தால் வண்டி ஓட்டுவதில்லை’ என்ற உறுதிப்பாட்டை எடுத்தால்தான் போதையினால் உண்டாகும் விபத்துக்களைத் தடுக்க முடியும்.

ஓட்டுனர்களுக்குப் போதிய தூக்கமும் ஓய்வுமில்லாததால் பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. தொடர்ச்சியாக வண்டி ஓட்டும்போது உடலும் உள்ளமும் சோர்வது இயல்புதான். அத்தகைய நேரங்களில் தேவையான அளவு ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. அதிகாலை மூன்று மணிக்கும் ஐந்து மணிக்கும் இடையில்தான் நெடுஞ்சாலைகளில் பெரும்பாலான விபத்துக்கள் நடந்துள்ளன. எல்லோருடைய கண்களும் அயரும் நேரம் அது. அந்த நேரத்தில் ஓட்டுனர்கள் விவேகத்துடன் செயல்பட்டால் விபத்திலிருந்து தப்பிக்க முடியும். காலதாமதமாகக் கிளம்பி, குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேரவேண்டும் என்று பதறி, அவசர வேகத்தில் வண்டியை ஓட்டும் பழக்கம் நல்லது அல்ல. சரியான நேரத்திலோ, அல்லது அதற்குக் கொஞ்சம் முன்னதாகவோ புறப்பட்டுச் சீரான வேகத்தில் செல்வது நல்லது. அப்படிச் சென்றால் விபத்து என்னும் சங்கடம் நம்மை அண்டவே அண்டாது. எந்த இக்கட்டான சூழலிலும் தம்மால் கட்டுப்படுத்தக் கூடிய வேகத்தில் செல்வதே ஓட்டுனருக்கு அழகு. செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டுவதும் வணிக வாகனங்களில் அதிகச் சுமை, ஆட்களை ஏற்றிச் செல்லுதலும் விபத்தை உண்டாக்குகின்றன. முறையான பராமரிப்பு இல்லாத வாகனங்களும் விபத்துக்களுக்குக் காரணமாகும். பழுதடைந்த சாலைகளும் விபத்துகளுக்கு காரணமாகி, உயிர்ப்பலி வாங்கும் கொலைக்களம் ஆகிவிடலாம். இப்படிப்பட்ட நேரங்களில் ஓட்டுனர்கள் கவனமாக இருந்தால் விபத்தைத் தடுக்க முடியும். விபத்து என்பது எதிர்பாராமல் நடப்பது. ஆனாலும் நாம் விழிப்புடன் செயல்பட்டால் அதனைத் தடுக்க முடியும். சாலைவிதிகளை மதித்து, மிதமான வேகத்தில், கவனமுடன் வாகனங்களை இயக்கினால் சங்கடமில்லாத சந்தோஷமான பயணங்கள் அமையும்.

No comments:

Popular Posts