Tuesday, 7 January 2020

ரசிகர்களைக் கவர்ந்த அபிநய சரஸ்வதி

ரசிகர்களைக் கவர்ந்த அபிநய சரஸ்வதி | சரோஜாதேவி | ஆரூர்தாஸ், திரைப்பட வசன கர்த்தா | இன்று (ஜனவரி 7-ந்தேதி) நடிகை சரோஜாதேவி பிறந்தநாள். | கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவல் துறையில் பணிபுரிந்த பைரப்பா- ருத்ரம்மா தம்பதியின் மூன்றாவது மகள் பி. சரோஜாதேவி.

1938-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி பிறந்தார். குழந்தை பருவத்திலேயே அழகாக இருந்தார். 1955-ல் தனது 17-வது வயதில் ஸி.ஹொன்னப்பா பாகவதர் தான் சொந்தமாகத் தயாரித்த படத்தில் சரோஜாவுடன் ‘தேவி’ என்று சேர்த்து கதாநாயகியாக அறிமுகம் செய்தார். சரோஜாதேவியின் முதல் படமே அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.

1958-ல் எம்.ஜி.ஆர். தனது சொந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ‘நாடோடி மன்னன்’ படத்தை முதன் முதலாகத் தயாரித்து அவரே அதை இயக்கினார். அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த பி.பானுமதிக்கும், அவருக்கும் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு பானுமதி அந்த படத்தில் நடித்ததிலிருந்து விலகினார். பாதிப்படம் வரையில்தான் அவர் நடித்திருந்தார். மீதிப் பாதிப் படத்திற்கு எந்த நடிகையை அமர்த்தலாம் என்று எம்.ஜி.ஆர். தனது ஆசானாகக் கருதிய கே.சுப்பிரமணியத்திடம் ஆலோசனை கேட்கவே, அவர் தனது கன்னட கச்சதேவயானி படத்தில் கதாநாயகியாக நடித்த பி.சரோஜாதேவியைக் குறிப்பிட்டு அவரையே அமர்த்தும்படி பரிந்துரைத்தார். அதன்படி, எம்.ஜி.ஆர். சரோஜாதேவியை இரண்டாவது கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து ‘நாடோடி மன்னன்’ படப்பிடிப்பைத் தொடர்ந்தார்.

22.8.1958-ல் வெளிவந்த ‘நாடோடி மன்னன்’ மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்களைக் கடந்தும் ஓடி சாதனை படைத்ததுடன் கூட சரோஜாதேவிக்கு புகழை வாரி வழங்கியது. அதைக் கண்ட கதை வசன கர்த்தா ஸ்ரீதர் கதை வசனம் எழுதி அவர் பங்குதாரரான வீனஸ் பிக்சர்ஸுக்காக ‘கல்யாண பரிசு’ படத்தை முதன் முதலாக அவரே இயக்கி தயாரித்தார். அந்த படத்தில் ஜெமினி கணேசனுடன் சரோஜாதேவி கதாநாயகியாக நடித்துத் தன் திறமையைக் காட்டினார். 9.4.1959-ல் வெளிவந்த ‘கல்யாண பரிசு’ மாபெரும் வெற்றி பெற்று 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டு தேசிய விருது பெற்று சரோஜாதேவிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும்படிச் செய்தது.

இதே 1959-ம் ஆண்டில்தான் ‘சாண்டோ’ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர் என்னை அறிமுகம் செய்து அவருடைய தேவர் பிலிம்சுக்காக முதன் முதலில் ‘வாழ வைத்த தெய்வம்’ படத்திற்கு கதை வசனம் எழுதினேன். அதில் ஜெமினிகணேசனுடன் சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தார்.

சரோஜாதேவி ‘பாகப்பிரிவினை’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் கதாநாயகியாக நடித்து அந்தப் படம் 100 நாள் ஓடி வெற்றி பெற்றது. ‘நாடோடி மன்னன்’ படத்திற்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.எல்.எஸ். புரோடக்‌ஷன்ஸ் தயாரித்த ‘திருடாதே’ படத்தில் எம்.ஜி.ஆருடன் மீண்டும் கதாநாயகியாக சரோஜாதேவி நடித்தார். 23.3.1961-ல் வெளிவந்த அந்த படம் நன்றாக ஓடியது.

1959-ல் வெளிவந்த ஸ்ரீதரின் ‘கல்யாண பரிசு’ மற்றும் என்னுடைய ‘வாழ வைத்த தெய்வம்’ ஆகிய இரண்டு படங்களுக்கு பிறகு தொடர்ந்து 1960-61-களில் சரோஜாதேவி ‘பாகப்பிரிவினை’ - ‘இரும்புத்திரை’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ - ‘கைராசி’, ‘பார்த்திபன் கனவு’ -‘யானைப்பாகன்’, ‘விடிவெள்ளி’, ‘திருடாதே’, ‘பாலும் பழமும்’ ஆகிய பெரும்பான்மையான ஒன்பது படங்களில் நடித்து ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமாக திரைவானில் ஜொலித்தார்.

இந்நிலையில் தேவர் பிலிம்சின் ஏழாவது படமும் நான் கதை வசனம் எழுதியதுமான ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படத்தில் நடித்தார். வழக்கம்போல் தேவர் பிலிம்சின் எம்.ஜி.ஆருடன் நான்காவது படமாக கதாநாயகியாக நடித்தார். 7.11.1961 அன்று படம் வெளியானது. அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் ‘தாய் சொல்லைத் தட்டாதே’ வசூலில் முதல் இடம் பெற்று நூறு நாட்கள் கொட்டகை நிறைந்த காட்சிகளாக நடைபெற்று விழா கொண்டாடியது.

நான் கதை வசனம் எழுதி எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி நடித்து, கவியரசு கண்ணதாசன் - கே.வி.மகாதேவன் மற்றும் இயக்குனரும் தேவரின் உடன் பிறந்த தம்பியுமான எம்.ஏ. திருமுகம் இயக்கிய ‘தாயைக் காத்த தனயன்’ படம் 13.4.1962 தமிழ் வருடப் பிறப்பன்று வெளிவந்து வெற்றி வாகை சூடி, முந்தைய ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படத்தை விட சில வாரங்கள் கூடுதலாக ஓடியதைப் பார்த்துப் பரவசப்பட்ட எம்.ஜி.ஆர். தன் கம்பெனியின் நிர்வாகியான ஆர்.எம். வீரப்பனிடம் கூறி ஆர்டர் கொடுத்து தேவர், திருமுகம், சரோஜாதேவி மற்றும் எனக்குமாக சுற்றிலும் தங்கத் தகடு பதித்து நடுவில் ‘தாயைக் காத்த தனயன்’ என்ற எழுத்துக்களைப் பொருத்தி அலங்கார வேலைப்பாட்டுடன் கூடிய ஒரு பெரிய கனமான வெள்ளித்தாம்பாளம் அன்பளிப்பாக வழங்கினார். அதை ஓர் அரிய நினைவுச் சின்னமாக இன்றைக்கும் 57 ஆண்டுகளாக ஷோகேஸில் வைத்து என் எதிர்காலச் சந்ததியினருக்காக பத்திரமாகப் பாதுகாத்து வருகிறேன்.

தாயைக் காத்த தனயனைத் தொடர்ந்து தேவர் பிலிம்ஸ் மூன்றாவதாக நான் கதை, வசனம், எழுதி எம்.ஜி.ஆர்.- சரோஜாதேவி நடித்து வழக்கம்போல எம்.ஏ. திருமுகம் இயக்கிய ‘குடும்பத்தலைவன்’ படம் முந்தைய ‘தாயைக் காத்த தனயன்’ வெளிவந்து 100 நாட்கள் விழா கொண்டாடியதை அடுத்து, நான்காவது மாதத்தில் 15.8.1962-ல் வெளிவந்து வெற்றி பெற்றது.

சரோஜாதேவி தொடர்ந்து நான் வசனம் எழுதிய ஏவி.எம்.மின் ‘அன்பே வா’, ‘ஆசை முகம்’, ‘தாலி பாக்கியம்’ ‘பெற்றால்தான் பிள்ளையா’ ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருடன் சேர்ந்து நடித்தார். நான் திரைக்கதை வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். சரோஜாதேவி நடித்து பிரபல இயக்குனர்களான கிருஷ்ணன், பஞ்சு முதல் முறையாக எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ‘பெற்றால்தான் பிள்ளையா?’ எம்.ஜி.ஆருக்கு முழுக்க முழுக்க ஒரு மாறுபட்ட படமாகும். 9.12.1966-ல் வெளிவந்த ‘பெற்றால்தான் பிள்ளையா’ பெரும் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரின் புகழுக்கு புகழ் சேர்த்தது என்றால் அது சற்றும் மிகை அல்ல என்பேன். 1961 நவம்பர் மாதம் தீபாவளியில் தொடங்கி 1966 டிசம்பர் இறுதி மாதம் வரையிலான 6 ஆண்டுகளில் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய 21 படங்களில் எனக்குப் பிடித்ததும், எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அவருக்கு மிகவும் பிடித்ததுமான ‘பெற்றால்தான் பிள்ளையா’ சரோஜாதேவி எம்.ஜி.ஆருடன் நடித்த கடைசிப் படமாகும்.

1961-ல் நான் கதை வசனம் எழுதிய தேவர் பிலிம்சின் ‘தாய் சொல்லை தட்டாதே’ படத்தில் தொடங்கிய எம்.ஜி.ஆர். சரோஜாதேவி நடிப்பு தொடர்பு ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்துடன் எதிர்பாராத விதமாக நின்று போய் விட்டது. அதற்கு காரணம் 13.1.1967 பொங்கல் நாளில் எம்.ஜி.ஆருக்கு நான் எழுதி அவருடன் ஜெயலலிதா நடித்த ‘தாய்க்குத் தலை மகன்’ படம் வெளியான அன்று அவர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதை அடுத்து பிப்ரவரி ஒரு மாதத்திற்கு பிறகு மார்ச் முதல் தேதியன்று சரோஜாதேவி தன் தாயாரின் விருப்பத்திற்கு இணங்க பெங்களூரில் அவருடைய இனத்தைச் சேர்ந்த ஸ்ரீஹர்ஷா என்ற என்ஜினீயரை திருமணம் புரிந்து கொண்டார். பின்னர் நான் இயக்கிய பெண் என்றால் பெண் என்ற படத்தில் ஜெமினி கணேசனுடன் கதாநாயகியாக நடித்தார்.

1958-ல் ‘நாடோடி மன்னன்’ தொடங்கி 1966 பெற்றால்தான் பிள்ளையா’ வரையில் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் கதாநாயகியாக நடித்து சாதனை படைத்த சரோஜாதேவி சிவாஜி- ஜெமினிகணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 200 படங்களுக்கும் அதிகமாக நடித்து மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ - ‘பத்மபூஷண்’ மற்றும் ஆந்திர அரசின் ஐந்து லட்சம் ரூபாயுடன் கூடிய ‘நந்தி விருதும்’ பெற்று புகழடைந்தவர்.

கர்நாடக மண்ணில் பிறந்து கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தன்னை வளர்த்து ஆளாக்கிய தமிழ்நாடு- தமிழ் மொழி மீது தனிப்பட்ட பற்றும் பாசமும் கொண்ட சரோஜாதேவி ஒரு பத்திரிகை பேட்டியில் கூறியது இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது இதுதான்.

“நான் இறப்பதாக இருந்தால், என் உயிர் தமிழ் மண்ணில் தான் போக வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

என் அன்பிற்கினிய அருமை அபிநய சரஸ்வதி பி. சரோஜாதேவியின் இன்றைய 82-ஆவது பிறந்தநாளில் அவரை விட 7 வயது மூத்தவனான நான் அவரை வாழ்த்தி ஆசீர்வதித்து மகிழ்கிறேன்.

No comments:

Popular Posts