Thursday 23 January 2020

தேசபக்தப் பட்டாளம்

தேசபக்தப் பட்டாளம் | By த. ஸ்டாலின் குணசேகரன்  |  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்றும் அதுவும் உடனடியாகக் கிடைக்க வேண்டுமென்றும் அதற்கான வழிமுறைகள் எதுவாயினும் ஆட்சேபனை இல்லையென்றும் தெரிவித்தவர்.அகிம்சைப் போராட்டத்தில் அறவே நம்பிக்கையில்லாதவர் நேதாஜி என்று சொல்லிவிட முடியாது. அகிம்சைப் போராட்டம் வெற்றியடையாத சூழலில் மாற்றுவழி குறித்துச் சிந்திப்பதில் தவறில்லை என்று கருதியவர்.ஆறு மாத காலத்தில் இரண்டாம் உலகப்போர் தொடங்கும் அரசியல் சூழல் நிலவுவதாக 1939-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தெரிவித்தார் நேதாஜி. அவர் கணிப்பு தப்பவில்லை. 1939 செப்டம்பரில் உலகப் போர் மூண்டது.

உலக அளவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை, இந்தியா சுதந்திரம் பெற முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நேதாஜி பெரிதும் விரும்பினார். இங்கிலாந்து போர் நெருக்கடியில் உழன்று கொண்டிருந்த நேரத்தில் ஆங்கிலேய ஆட்சியாளருக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துவிட வேண்டுமென்றும், அக்கெடுவுக்குள் சுதந்திரம் வழங்கப்படவில்லையெனில் ஆட்சியாளருக்கு எதிராகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்க வேண்டுமென்றும் நேதாஜி தெரிவித்தார்.

1940-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஒரு போராட்டத்தை நேதாஜி தொடங்கினார். பிரிட்டிஷ் அரசு அவரைக் கைது செய்தது. வங்காள மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஆனால் அன்றைய காங்கிரஸ் தலைமை, யுத்த காலத்தில் ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் பலவீனத்தையும் அச்சுறுத்தலையும் பயன்படுத்தி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வலுவான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற நேதாஜியின் அரசியல் நிலைப்பாட்டை ஏற்கவில்லை. ஆகவே, நேதாஜியின் கைது நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுகிற அரசியல் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

சிறைச்சாலைக்குள் சாகும்வரை உண்ணாவிரதத்தை அறிவித்தார் நேதாஜி. படிப்படியாக நேதாஜியின் உடல்நிலை மோசமாகி வருவதையறிந்த ஆட்சியினர் அவரை சிறைக் கொட்டடியிலிருந்து வெளியேற்றி அவரது இல்லத்திலேயே பலத்த கண்காணிப்புக்கிடையே காவல் வைத்தனர்.1941 ஜனவரி 16-ஆம் தேதி ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறி, இந்திய எல்லையையும் தாண்டி காபூலை அடைந்தார் நேதாஜி. பத்து நாள்களுக்குப் பிறகு ஜனவரி 26-ஆம் தேதிதான் அவர் தப்பித்த செய்தி அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தெரியவந்தது.

கெடுபிடிமிக்க ஆங்கிலேய ஆட்சியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் தப்பிச் செல்வது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத செயலாகும். உயிரைப் பொருட்படுத்தாது வழிநெடுக எத்தனையோ சவால்களையும் திகில் திருப்பங்களையும் எதிர்கொண்டு "ஆர்லண்டோ மொசா சாட்டா ' என்ற பெயரைத் தனக்குத் தானே சூட்டிக் கொண்டு, தன்னை  இத்தாலியக் குடிமகனென்று பிறரையும் நம்ப வைத்து ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரை அடைந்தார் நேதாஜி.எந்த ஓர் அரசியல் பெரும் பொறுப்பிலுமில்லாத தனி மனிதனாகச் சென்றிருந்த நேதாஜி பெர்லினிலுள்ள அதிகாரிகளிடம் ஒரு ராஜப் பிரதிநிதி போன்று அமர்ந்து அந்தப் பரபரப்பான உலகச் சூழலிலும் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்திய நிகழ்வு அவரது சாதுர்யத்தையும், ராஜதந்திரத்தையும், தனித்திறன்களையும் வெளிப்படுத்தியது. காண்போர் எவரையும் சந்தேகப்படுவதும் துளியளவு சந்தேகமேற்பட்டாலும் அவர்களை ஈவிரக்கமின்றி சுட்டு வீழ்த்துவதுமாக இருந்த ஹிட்லரை பலவிதமான முயற்சிகளுக்குப் பிறகு சந்தித்தார் நேதாஜி.

நேதாஜியைச் சந்தித்து கைகுலுக்கிய ஹிட்லர், "வருங்கால இந்தியாவின் சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமைப்படுகிறேன்' என்று கூறியவண்ணம் வரவேற்றார். அதற்குப் பதிலளித்துப் பேசிய நேதாஜி, "வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க உங்கள் உதவியைத் தேடி வந்திருக்கிறேன். இந்தியா ஜனநாயகக் கொள்கையில் தழைக்க வேண்டுமென்பதே எங்களது லட்சியக் கனவு' என்றார்.நேதாஜியின் இந்த பதில் முற்றிலும் வித்தியாசமான ஒரு மனிதனைச் சந்திக்கிற உணர்வை ஹிட்லருக்கு ஏற்படுத்தியது. உரையாடலின் இறுதியில், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நேதாஜி எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக ஹிட்லர் கூறினார்.

ரகசியங்களும் மர்மங்களும் நிறைந்த ஹிட்லரின் நாஜி அரசிடம் உதவியைப் பெற நினைத்ததும், அதற்காக பல இன்னல்களுக்கிடையே ரகசியப் பெரும் பயணத்தை மேற்கொண்டதும், பெர்லினில் உள்ள உயர்நிலை ராணுவத் தளபதிகளைச் சந்தித்து இந்தியச் சுதந்திரம் குறித்து உரையாடியதும் பதற்றமும் பீதியும் நிறைந்த போர்ச்சூழலில் எவராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிகழ்வுகளாகும். ஒரு சுதந்திர நாட்டின் தலைவருக்குரிய மரியாதை ஜெர்மனியில் நேதாஜிக்கு அளிக்கப்பட்டது.

1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை விளக்கி பம்பாயில் அழுத்தமும் ஆவேசமும் மிக்க உரையொன்றை நிகழ்த்தினார் மகாத்மா காந்தி. அவ்வுரையில்தான் "வெள்ளையனே வெளியேறு'  என்ற முழக்கத்தையும், "செய் அல்லது செத்து மடி' என்ற பிரகடனத்தையும் உணர்ச்சிப் பெருக்கோடு வெளியிட்டார். அடுத்தநாள் ஆகஸ்ட் 9-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மகாத்மா காந்தி, அவரின் மனைவி கஸ்தூர்பா, அவரின் தனிச் செயலாளர் மகாதேவ் தேசாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் பண்டித நேரு, வல்லபபாய் படேல், அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எவரும் எதிர்பாராத விதத்தில் ஒட்டுமொத்தமாக நாடு முழுவதிலுமுள்ள காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் தீர்மானத்திற்குப் பின்னர், மகாத்மா காந்தியின் தீர்க்கமான உரைக்குப் பிறகு நாடே போர்க்களமானது. ஆனால், போராட்டத்தை வழி நடத்தும் தலைவர்கள் எவரும் வெளியில் இல்லை. மக்கள் தமக்குத் தாமே தலைமையேற்று நடத்திய இந்தப் போராட்டத்தை "ஆகஸ்ட் புரட்சி'  என்று வரலாற்று ஆய்வாளர்கள் வரையறை செய்துள்ளனர்.அந்தக் காலகட்டத்தில் இந்தியாவுக்கான அரசியல் பணியை ஜெர்மனியிலிருந்தவாறு நிறைவேற்றிவந்த நேதாஜி, இந்திய விடுதலைக்காக ஒரு ராணுவ அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டார். நடைபெற்ற போரில் ஜெர்மன் படையிடம் சரணடைந்த இந்தியப் போர் வீரர்களின் முகாமிலிருந்த போராளிகளை நேதாஜி தேர்வு செய்தார். அவர்களுக்கு ஜெர்மன் ராணுவத் தளபதிகளின் ஒத்துழைப்புடன் சிறப்புப் பயிற்சி அளித்து ஒரு தேசபக்தப் பட்டாளத்தையே உருவாக்கினார்.

போர்க் களத்திலிருந்த இந்திய மக்களுக்கு திசைகாட்டும் விதத்தில் பெர்லினில் நேதாஜி "சுதந்திர இந்திய வானொலி, "சுதந்திர முஸ்லிம் வானொலி', "தேசியக் காங்கிரஸ் வானொலி' ஆகிய மூன்று வானொலி நிலையங்களைத் தொடங்கினார். இந்த வானொலிகள் நேதாஜியால் நேரடியாகவும் உயிரோட்டமாகவும் செயல்படுத்தப்பட்டன.காங்கிரஸ் கட்சி முடக்கப்பட்டிருந்த சூழலில், காங்கிரஸ் தலைவர்கள் அத்தனை பேரும் சிறையில் வாடிய காலகட்டத்தில் நேதாஜி பெர்லினில் இருந்தவாறே ஆகஸ்ட் புரட்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.ஆகஸ்ட் போராட்டத்துக்கு 12 அம்ச வேலைத் திட்டமொன்றைத் தயாரித்து சுதந்திர வானொலிகள் மூலம் வெளியிட்டார் நேதாஜி. காந்திய முறையில் தயாரிக்கப்பட்ட அந்தத் திட்டத்துக்கு "பலாத்காரமில்லாத கொரில்லா போர் முறை' என்று பெயரிட்டு மக்களுக்கு அறிமுகம் செய்தார்.நேதாஜி தயாரித்த வேலைத் திட்டம் இந்தியாவில் யுத்தத்திற்குத் தேவையான பொருள்களையும், ஆயுதத் தளவாடங்களையும் தயாரிக்க முடியாத நிலையை உருவாக்குவது, பிரிட்டிஷ் அரசின் நிர்வாக இயந்திரத்தைச் செயல்பட முடியாதபடி முடக்கிவிடுவது என்ற இரண்டு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

கைது செய்யப்படாத சில கிராமப்புற காங்கிரஸ் தலைவர்களும் தலைமறைவாக இருந்த பல்லாயிரம் காங்கிரஸ் ஊழியர்களும் நேதாஜியின் ரகசிய வானொலியை முழுமையாகப் பயன்படுத்தி ஆகஸ்ட் போராட்டத்தை மக்கள்மயப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.பெர்லினில் இருந்தவாறு ஓராண்டு காலம் ஆகஸ்ட் போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த நேதாஜி, 1943-இல் ஜெர்மானிய ராணுவ உதவியுடன் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் சென்றடைந்தார். அங்கிருந்து சிங்கப்பூர் சென்ற நேதாஜியை சிங்கப்பூரில் செயல்பட்டுவந்த "இந்திய சுதந்திர லீக்' என்ற அமைப்பின் தலைவராக, அந்த அமைப்பை வழிநடத்தி வந்தோர் தேர்வு செய்தனர்.

இந்த அமைப்பால் தோற்றுவிக்கப்பட்டதே "இந்திய தேசிய ராணுவம்' என்ற சேனை. நேதாஜியின் தலைமையிலான "இந்திய தேசிய ராணுவம்' இந்தியாவுக்கு வெளியிலிருந்து பிரிட்டிஷ் ராணுவத்துக்கு எதிராகப் போரை அறிவித்து முன்னோக்கிச் சென்றது. இந்த ராணுவம் இறுதியில் வெற்றிபெற முடியவில்லையாயினும், இதன் தாக்கம் பிரிட்டிஷ் இந்தியாவையே பெரும் அதிர்வுக்குள்ளாக்கியது.மகாத்மா காந்தி அறிவித்த ஆகஸ்ட் போராட்டம் இந்தியாவுக்குள்ளிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக மக்களைத் தட்டியெழுப்பியது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் உலகெங்குமிருந்த இந்தியர்களிடையே ஆங்கிலேய ஆட்சிக்கெதிரான பேரெழுச்சியை உருவாக்குவதில் வெற்றி கண்டது. காலப்போக்கில் நேதாஜியின் வீரமும், தியாகமும் மகாத்மா காந்தியை நெகிழச்  செய்தன.

கட்டுரையாளர்:
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை
(இன்று நேதாஜி பிறந்தநாள்)

No comments:

Popular Posts