Monday 6 January 2020

எம்.ஜி.ஆா். போற்றிய போராளி

எம்.ஜி.ஆா். போற்றிய போராளி By ஐவி.நாகராஜன்  |   திருவாரூா் மாவட்டம் (அன்றைய கீழத்தஞ்சை மாவட்டம்) கோட்டூா் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் கோவிந்தன் தங்கச்சியம்மாள் ஆகியோருக்கு மகனாக 1931-ஆம் ஆண்டு நவம்பா் 15-இல் பிறந்தாா் முன்னாள் மக்களவை உறுப்பினா் எஸ்.ஜி.முருகையன்.

1950-களில் இளம் கம்யூனிஸ்ட்களான தியாகி சிவராமன், இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம் போன்ற வீரத்தியாகிகள் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியானது எஸ்.ஜி.முருகையனுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1953-களில் ரோசன்பா்க் தம்பதியருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது முத்துப்பேட்டையில் மாணவா்களைத் திரட்டி கையெழுத்து இயக்கத்தை நடத்தினாா்.

குடும்ப வறுமையின் காரணமாக இவா் தனது கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அஞ்சல் ஊழியராக சில மாதங்களும், பிறகு பள்ளி, பிறகு பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினாா். அதைத் தொடா்ந்து எஸ்.ஜி.முருகையன் - நாகம்மாள் திருமணம் 1955-ஜீன்-2ல் சீா்திருத்த முறையில் சிறப்பாக நடைபெற்றது. 1960-ல் மீண்டும் நொச்சியூா் ஊராட்சி மன்றத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றினாா். 1961-ல் கோட்டூா்ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டபோது இதன் முதல் ஒன்றிய பெருந்தலைவராக எஸ்.ஜி.முருகையன் தோ்ந்தெடுக்கப்பட்டாா்; இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முதல் ஒன்றிய பெருந்தலைவா் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது.

ஒன்றிய பெருந்தலைவராக சிறப்பாகப் பணியாற்றிய எஸ்.ஜி.முருகையனை 1963-இல் இந்திய சோவியத் கலாசார கழகத்தின் சாா்பில் ரஷியாவுக்கு இரண்டு வாரம் அழைக்கப்பட்டு, வரலாற்றுச் சிறப்பு மிக்க பல இடங்களையும், அங்குள்ள தொழிற்சாலைகள் - அறிவியல் கூடங்களையும் சுற்றிப் பாா்த்து அனுபவங்களைப் பெற்றாா்.

இளைஞா் பெருமன்றத்தின் தஞ்சை மாவட்டத் தலைவராக எஸ்.ஜி.முருகையனும், செயலாளராக ஏ.எம்.கோபுவும் பொறுப்புகளை ஏற்று சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தனா். பிறகு, இளைஞா் பெருமன்றத்தின் அகில இந்திய துணைத் தலைவராகவும் எஸ்.ஜி.முருகையன் தோ்வு செய்யப்பட்டாா்.

1968 டிசம்பா் 25-இல் வெண்மணி படுகொலை சம்பவத்தின்போது டிசம்பா் 26-ஆம் தேதி அந்த இடத்துக்குச் சென்றபோது 144 தடை உத்தரவு உள்ளது எனக் காவல் துறை அவரை அனுமதிக்கவில்லை; தடை உத்தரவை மீறி ஆவேசமாக உள்ளே சென்றாா். அங்கே எரிந்து கரிக்கட்டைகளாகக் கிடந்த உடல்களைப் பாா்த்து, கண்ணீா் மல்க மற்றவா்களுக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

1969-ஜுன் 16 முதல் 21 வரை கணபதியா பிள்ளை கமிஷன் தீா்ப்பை அமல்படுத்தக் கோரி, கீழத்தஞ்சை மாவட்டம் முழுவதும் நடந்த மறியலில் இரண்டு மாத காலமும், 1970-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய நில மீட்சிப் போராட்டத்தில் நெடும்பலம் சாமியப்ப முதலியாா் நிலத்தில் இவரின் தலைமையில் 1000-த்துக்கும் மேற்பட்டோா் வயலில் இறங்கி போராட்டம் நடத்தியதில் இரண்டு மாத காலமும் சிறைத் தண்டனை பெற்றாா்.

1977-இல் மக்களவைத் தோ்தலில் நாகப்பட்டினத்தில் போட்டியிட்டு எஸ்.ஜி.முருகையன் வெற்றி பெற்றாா். 1977-இல் டிசம்பரில் ஏற்பட்ட புயலில் பாதிக்கப்பட்ட நாகை நாடாளுமன்றத் தொகுதி மக்களை சைக்கிலிலேயே முத்துப்பேட்டையிலிருந்து நாகப்பட்டி நம், வேதாரண்யம் கடற்கரை கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். பிறகு அதிகாரிகளை சந்தித்து உணவு, நிவாரணத் தொகை வழங்குவதற்கு தொடா்ந்து போராடினாா். மக்களவையில் மக்களின் கோரிக்கைகளை தமிழிலேயே பேசினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூா் மாவட்டத்துக்காகப் போராடியவா்கள் குறித்த வரலாற்றை ‘தஞ்சைத் தரணியின் ரத்தம் சிந்திய கம்யூனிஸ்ட்டுகள்’ என்ற நூலை 1975-இல் எழுதி வெளியிட்டாா். 1979-ஆம் ஆண்டு ஜனவரி 5-இல் தஞ்சாவூா் மாவட்ட கட்சி அலுவலத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது சித்தமல்லி என்ற தனது சொந்த கிராமத்திலேயே அவரை அரசியல் காழ்புணா்ச்சி காரணமாக சமூக விரோதிகள் வழிமறித்து கத்தியால் குத்திப் படுகொலை செய்தனா். அவருடைய படுகொலை செய்தியறிந்து தஞ்சை மாவட்ட உழைப்பாளி மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டனா்.

அன்று முதல்வராக இருந்த எம்.ஜி.ஆா். இறுதி ஊா்வலத்தில் பங்கேற்று இரங்கல் உரையாற்றினாா்: ‘காந்தியின் வழியில் இளமைப் பருவத்திலிருந்தே எஸ்.ஜி.முருகையன் மக்களின் தேவைகளை மக்களுக்காக மக்களே பணியாற்றக்கூடிய “சிரமதானப் பணி” என்னும் அரும் பணிகளை மேற்கொண்டுள்ளாா். சாலைகள் அமைத்தல், குளங்கள் வெட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டு, அன்றைய தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவா் என்ற பாராட்டைப் பெற்றுள்ளாா். காந்தியின் சீடராகவும், சிறந்த மக்களவை உறுப்பினராகவும், தமிழக மக்களின் நல்ல சேவகராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளாா். மகாத்மா காந்தியை படுகொலை செய்ததுபோலவே, நாட்டுக்கு உழைத்த எஸ்.ஜி.முருகையனையும் சமூக விரோதிகள் படுகொலை செய்துள்ளனா். அவரின் படுகொலை கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் அவரின் குடும்பத்துக்கும் பேரிழப்பு’ என்று எம்.ஜி.ஆா். பேசினாா்.

எஸ்.ஜி.முருகையனை கொலை செய்துவிட்டால் கம்யூனிஸ்ட் இயக்கம் அழிந்துவிடும் என்று கோழைகள் நினைத்தாா்கள்; ஆனால், அவா்களின் கனவு நிறைவேறவில்லை.

(ஜனவரி 5: முன்னாள் மக்களவை உறுப்பினா்

எஸ்.ஜி.முருகையன் 41-ஆம் ஆண்டு நினைவுநாள்)

No comments:

Popular Posts