Saturday 4 January 2020

கழிப்பறை சுகாதாரம்

கழிப்பறை சுகாதாரம் | By பவித்ரா நந்தகுமார்  |   உணவை உண்பது, செரிப்பது, உறங்குவது, கழிவை முழுமையாக வெளியேற்றுவதில்தான் மனித உடலின் ஆரோக்கியம் சிறப்பு பெறுகிறது. இந்திய முறை,மேற்கத்திய முறை என இரண்டு விதமான கழிப்பறைகளை உலக மக்கள் பயன்படுத்துகிறார்கள். தொன்மைக் காலம் தொட்டு கழிவை வெளியேற்றக் குத்தவைத்து அமரும் நிலையையே நம் இனம் பின்பற்றிவந்தது.  மலாசனம் என்று இதைச் சொல்வர்.  இது ஒருவகை ஆசனமும்கூட. 

இந்த மலாசனம் மூலம் கழிவை வெளியேற்றினால் கழிவு முழுமையாக வெளியேறும்.  உடல் புத்துணர்ச்சி பெறும்.  மலச்சிக்கல், மூல நோய் பாதிப்புகளும் இருக்காது.  இதனால், உள்ளமும் சீராக இருக்கும். உள்ளுறுப்புகள் நன்கு வேலை செய்யும்.  இந்திய முறை போன்றே உலகின் பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படுகிறது.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில்தான் நாற்காலியில் உட்காருவது போன்ற கழிப்பறைகள் மேலை நாடுகளில் பரவலாகப் பெருகத் தொடங்கின.  வயதானவர்களுக்காகவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்காகவும் மாற்றுத்திறனாளிகள், வேறுசில உடல் உபாதைகள் கொண்டவர்களுக்காகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட இது, பின் ராஜ வம்சத்தினரும் உயர்தட்டு மக்களிடத்திலும் பரவத் தொடங்கியது. 

தோழி ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.  அவர்கள் வீட்டிலிருந்த மூன்று கழிப்பறைகளுமே மேலை நாட்டுப் பாணியில் வடிவமைத்திருந்தனர்.  ஒன்றுகூட இந்திய முறைப்படி இல்லை.  முதுமையில் உடல்நலக் குறைவு ஏற்படுபோது வசதியாகப்  பயன்படுத்துவதற்கு என மாற்றாக வந்தது, தற்போது அதுவே மாற்றமாகிப் போனது காலத்தின் கோலம்.  அதனால் அந்த வீட்டில் உள்ள இளையவர்கள் உள்பட அனைவரும் மேற்கத்திய பாணி கழிப்பறைகளையே பயன்படுத்தி பழக்கமாகி விட்டனர்.

நம் உடலில் கழிவு தங்கியிருந்தால் எண்ணற்ற பாதிப்புகளை  உடல் சந்திக்க நேர்கிறது.  பெருங்குடல் பகுதியில் முழுமையாக வெளியேற்றப்படாமல் கழிவு தேங்கினால் நோய்த்தொற்று ஏற்படக் காரணமாக அமைகிறது.  உடல் ஆரோக்கியத்தைத் தாண்டி இப்படிப்பட்ட மேற்கத்திய பாணி கழிப்பறைகளைப் பராமரிப்பதில் எண்ணிலடங்கா சிக்கல்கள் நிறைந்திருக்கின்றன. தற்போதெல்லாம் விற்பனை மையங்கள், பேரங்காடிகள் என திரும்பிய பக்கமெல்லாம் மேற்கத்திய முறை கழிப்பறைதான்.  அடிப்படை பராமரிப்பு இன்றி பயன்படுத்துவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமே முதலில் மனதை அச்சமடையச் செய்கிறது. 

இந்திய முறையிலான கழிப்பறைகளைக் குறைந்த அளவு இடப்பரப்பில் வடிவமைக்க முடியும்.  ஆனால், மேற்கத்திய பாணி கழிப்பறைக்கு சற்றே அகன்ற இட வசதி மிக மிக அவசியம்.  ஆனால், மேற்கத்திய கழிப்பறையை வடிவமைப்போர் அது குறித்தெல்லாம் அக்கறை கொண்டவர்களாகவே தெரியவில்லை. ஒரு பேரங்காடியின் கழிப்பறைக்கு அண்மையில் சென்றிருந்தேன். கதவைத் திறந்தால், அது நேராகப் போய் பீங்கானை முட்டி நின்றது.  பாதி திறக்கும் கழிவறைக்குள் எப்படி நுழைவது?முற்பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே நம் துணிமணிகள் எதுவும் எங்கும் ஈஷிக் கொள்ளாமல் உள்ளே புக முடியும்.  அதற்கு நம் உடலை குறுக்கி, நெளித்துச் செல்லும் வித்தையை அறிந்திருக்க வேண்டும்.  மூச்சை "தம்' கட்டும் பயிற்சியைப் பெற்றிருத்தல் அவசியம். 

இப்படி கடினப்பட்டு உள்ளே நுழைந்து கதவை அடைத்தால் அடுத்த சோதனை தயாராகக் காத்திருக்கும். தண்ணீரை கோப்பைக்குள் விழச் செய்யும் பொத்தான் எங்கிருக்கிறது என்று தேடிக் கண்டுபிடிக்க நாம் சில துப்பறியும் கதைகளைப் படித்து  ஞானம் பெற்றிருக்க வேண்டும்.  அப்படியே அது சரிவர இருந்துவிட்டாலும் ஒழுங்காக வேலை செய்ய வேண்டுமே?   சில இடங்களில் நீர் பீய்ச்சியடிக்கும் குழாய் இணைக்கப்பட்டிருக்கும்.  "அப்பாடா' என நாம் ஆசுவாசமாகி, அதை அழுத்திப் பார்த்தால் ஏற்கெனவே பாதி உப்பு பூத்து அடைந்து போயிருக்கும் அது நீர் வராமல் பலவீனமான மொழியில் நம்மை நலம் விசாரிக்கும்.

ஏற்கெனவே பெற்றிருக்கும் அனுபவ அறிவு கொண்டு சற்றே லாவகமாகப் பிடித்து அழுத்தினால் ஏதோ சின்னஞ்சிறு நீரூற்றாய் நீர் வரும்.  "இதுவாவது மிஞ்சியதே' என மகிழலாம் என்றால். சில இடங்களில் இந்த நீர் பீய்ச்சி அடிக்கும் குழாயும் இருக்காது.  துணிகர மனதுடன் பின் அடுத்தகட்ட தேடலுக்கு நாம் தயாராக வேண்டும்.  கதவுக்கு பின்புறம் பீங்கானின் அந்தப்புறம் வேறு ஏதேனும் குழாய் உள்ளதா எனத் தேடினால் அது நம் பார்வைக்குக் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்.  அது அவரவர் அதிர்ஷ்டம். அந்தக் குழாயை  நாம் தொட்டுத் திருப்பவே அடி வயிற்றை மடித்துக் குனிய வேண்டும். அப்படியே குழாய் இருந்தாலும் நீரைப் பிடித்து ஊற்ற வாளியோ, குவளையோ இருக்காது.  இது அடுத்த கொடுமை.

"திக்கற்றவர்க்கு தெய்வமே துணை' எனும் ரீதியில் மிக அதிக அடிவாங்கலால் ஏற்பட்ட சொட்டைகளுடன் கழுத்தறுபட்டு உயிரின்றி பரிதாபமாய் எங்கேனும் மூலையில் படுத்துக் கிடக்கும் நெகிழி புட்டி, பாதி வழியில் போய்கொண்டிருக்கும் நம் உயிரை மீட்டுக் கொண்டுவரும்.  அந்தப் புட்டியை வீசிவிட்டுச் சென்றவரை உண்மையில் நம் கண்ணுக்குத் தெரியாமல் போனாலும் கடவுளாகவே நினைத்து உருகிப் போற்றுவோம். "தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என்பார்களே. அப்படி ஆகிவிடும் சமயத்தில் கழிப்பறையை விட்டு வெளியே வருவது.

இன்னும் சில இடங்களில் அந்தக் குழாயோ நீர் சேமிக்கும் மேற்புற பெட்டியிலோ அல்லது கழிப்பறை பீங்கானின் உட்புறத்திலோகூட ஆங்காங்கே கசிவு ஏற்பட்டு நீர் வெளியேறிய வண்ணம் இருக்கும்.  இதனால், மேல்நீர்த்தேக்கத் தொட்டியின் மொத்த நீரும் வீணாவதால் அந்த நீர் இணைப்பையே சில இடங்களில் சுத்தமாக அடைத்து விட்டிருப்பர். 
இது ஒருபுறமெனில், மூடிவைக்கப்பட்டிருக்கும் மேற்கத்திய பாணி கழிப்பறை மேல் மூடியை கையால் தொட்டே திறக்க நேரிடும்.  நம் வீடுகளைத் தாண்டி பொது இடங்களில் வீற்றிருக்கும் அதை அந்த இடத்தின் அச்சுறுத்தும் சுத்தம், சுகாதாரத்தைப் பார்க்கும்போது சிங்கத்தின் வாய்க்குள்ளேயே தலையை நுழைத்து விட்டு வெளியே வந்துவிடலாம் போலத் தோன்றும்.

ஆக, மேற்கத்திய கழிப்பறைகளை பரந்த இடவசதி கொண்டதாக அமைக்க வேண்டும்.  கழிப்பறையின் மையத்திலிருந்து சுவர் வரை குறைந்தது 40 செ.மீ. தொலைவு இடைவெளி இருக்க வேண்டும்.  மடு குறைந்தது 30 செ.மீ. தொலைவில் இருக்க வேண்டும்.  கதவைத் திறந்து மூடி உள்ளேபோய் வெளியே வர எந்த பிரம்மப் பிரயத்தனமும் செய்ய வேண்டிய தேவையில்லாது  இருக்க வேண்டும். அதையும் தாண்டி அதைச் சிறப்பாகப் பராமரித்தல் முக்கியம்.

 சில நேரங்களில் சில மனிதர்கள் செய்யும் களேபரம் கலவரத்தை ஏற்படுத்தும்.  நோய்த்தொற்றுக்குப் பயந்து மேற்கத்திய பாணி பொது கழிப்பறையின் மேல் பாகத்தில் இந்திய முறைப்படி குத்த வைத்தபடி பயன்படுத்த முயன்ற சர்க்கஸ் வித்தையை என்னவென்று சொல்வது?
கால் வழுக்கி, தலை இடித்தபடி விழுந்தவர்களை நினைக்கும்போது இது எத்தனை சிந்திக்க வேண்டிய விஷயம் எனத் தெரியவரும். பத்து கழிப்பறைகள் கட்டும் இடத்தில், 3 கழிப்பறைகளை மேற்கத்திய பாணியிலும் 7 கழிப்பறைகளை நம் மரபு பாணியிலும் கட்டினால் சிறப்பாக இருக்கும்தானே?

சில இடங்களில் இன்னும் நவீனமாகத் தொங்கும் கழிப்பறைகள் உள்ளன.

ஆஜானுபாகுவான பலர் அதில் அமர்ந்து எழுந்ததில் பக்கத்திலிருந்த சுவரே விரிசல் கண்டிருக்கிறது.  அரை செங்கல் வைத்த சுவரில் இப்படி பொருத்தினால் என்னாவது?  பொது கழிப்பறைகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் வடிவமைப்பவர்களைப் பாராட்டலாம். 
என் பள்ளிப் பருவத்தில் படித்த கதை நினைவுக்கு வருகிறது.  ஒரு சமயம் கிருஷ்ணதேவ ராயருக்கு, எது மிக சுகானுபவ அனுபவம் என ஒரு கேள்வி எழுந்தது;  உடனே தெனாலிராமன், நம் கழிவுகளை உடலிலிருந்து வெளியேற்றும் நேரமே சுகானுபவம் என்றார்.  மன்னர் உள்பட யாரும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. "நாளை இதை நிரூபிக்கிறேன்' என்று சொன்ன தெனாலிராமன், அரண்மனையிலுள்ள மொத்த கழிப்பறைகளையும் பூட்டி சாவியை தன்னிடம் வைத்துக் கொண்டார். 

மறுநாள் காலை அரசர் முதல்  அனைவரும் கழிப்பறைக்கு ஓடினர்.  பூட்டியிருக்கும் கழிப்பறைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  அனைவரும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி தவித்தனர்.  சில மணித்துளிகள் அனைவரையும் ஆட்டங்காண வைத்த தெனாலிராமன், பின் சாவிகளைத் தருகிறார். " தப்பித்தோம், பிழைத்தோம்' என அனைவரும் கழிப்பறைகளை நோக்கி ஓடினர்.  ஒரு பெரிய போராட்டத்துக்குப் பிறகு தன் உடலிலிருந்து கழிவை வெளியேற்றியது ஒவ்வொருவருக்கும் சுகானுபவமாக இருந்தது.   

கழிப்பறைக்குச் செல்வதோ, அது குறித்துப் பேசுவதோ அருவருக்கத்தக்க விஷயம் அல்ல.  அதன் சுத்தம், சுகாதாரம் சார்ந்து, அளவு சார்ந்து, பயன்பாடு சார்ந்து விழிப்புணர்வு இல்லாதிருப்பதுதான் அவலட்சணம்.  அதைக் களைவோம்; ஆரோக்கியமாக வாழ்வோம்!

கட்டுரையாளர்:
எழுத்தாளர்

No comments:

Popular Posts