Tuesday 26 March 2019

முதல் இந்தியத் தேர்தலின் கதை!

இந்தியாவில் பதினேழாவது மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடைபெற உள்ளது. 1951 - 52-ம் ஆண்டில் இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 67 ஆண்டுகளில் 17-வது பொதுத் தேர்தலில் வந்து நிற்கிறோம். இந்தத் தருணத்தில் மக்களவைத் தேர்தலின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம். ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது நாட்டின் பிரதமராக ஜவாஹர்லால் நேரு பொறுப்பேற்றார். பிரதமராக நேரு பொறுப்பேற்றிருந்தாலும், இடைக்காலத்துக்கு நிறுவப்பட்ட அமைச்சரவைக்குத் தலைவராகவே இருந்தார். இந்தக் காலத்தில் பிரிட்டிஷ் சட்டங்களே இந்தியாவில் பின்பற்றப்பட்டன. 1950 ஜனவரி 26-ல் இந்தியா குடியரசு நாடாக மாறியது. இந்தியாவுக்கென உருவாக்கப் பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின்படி முதல் பொதுத் தேர்தல் அதன் பிறகே நடத்தப்பட்டது. 68 கட்டங்கள்; பல நாட்கள் நாடு விடுதலை அடைந்த பிறகு, முதல் மக்களவைத் தேர்தலை 1951-52-ல் நாடு எதிர்கொண்டது. மிகப் பெரும் சவால்கள் நிலவிய அந்தக் காலகட்டத்தில் 68 கட்டங்களாக இந்தியாவில் முதல் தேர்தல் நடைபெற்றது. 1951 அக்டோபர் 25-ல் இமாச்சலப் பிரதேசத்தில் தொடங்கிய முதல் கட்டத் தேர்தல், 1952 பிப்ரவரி 21-ல் உத்தரப் பிரதேசத்தில் இறுதிக்கட்டமாக நிறைவு பெற்றது. இந்தியாவில் மிக அதிக நாட்கள் நீண்ட தேர்தல் இதுதான். இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற சுகுமார் சென், முன்அனுபவம் ஏதுமின்றி வெற்றி கரமாகத் தேர்தலை நடத்திக் காட்டினார். முதல் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பு மிகப் பெரிய சவாலை இந்தியத் தேர்தல் ஆணையம் சந்திக்க வேண்டியிருந்தது. சுதந்திரத்துக்கு முன்பும் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு தேர்தலை நடத்தியிருந்தாலும், அப்போது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. மேலும், பிரிட்டிஷ் சட்டத்தின்படியே தேர்தல்கள் நடத்தப் பட்டன. இதுபோன்ற சூழ்நிலையில்தான் 1951-ல் முதல் தேர்தலை இந்தியா எதிர்கொண்டது. முதலில் தேர்தலில் வாக்குரிமை வயதை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி 21 வயது நிரம்பிய எல்லோருக்கும் வாக்குரிமை என 1950-ல் பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்கள், கிராமங்கள் எதுவும் வளர்ச்சியடையாமல் இருந்தன. எழுத்தறிவு சதவீதமும் குறைவாக இருந்தது. அப்போது 15 சதவீதத்தினர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்கிறது புள்ளிவிவரம். எனவே, தேர்தலைப் பற்றியும் வாக்குரிமை பற்றியும் பாமர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இருந்தது. இரட்டை உறுப்பினர் முறை இப்போது இருப்பதுபோல முதல் தேர்தலில் 543 நாடாளுமன்றத் தொகுதிகளும் இருந்திருக்கவில்லை. அப்போது 489 தொகுதிகள் மட்டுமே இருந்தன. முதல் மக்களவைத் தேர்தலில் தனித் தொகுதிகளுக்கு வேறொரு நடைமுறை பின்பற்றப்பட்டது. 489 தொகுதிகளில் தலித்துகள், பழங்குடிகளுக்கு 94 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் தலித் அல்லது பழங்குடி வேட்பாளர்கள் மட்டுமே நிற்கும் முறையும் சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறையும் பின்பற்றப்பட்டன. அதாவது, ஒரே தொகுதியில் பொது உறுப்பினர் ஒருவர், தலித் அல்லது பழங்குடி உறுப்பினர் ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகமானது. இவர்களுக்கான ஓட்டுகளை தலித்துகள், பழங்குடிகள், பொதுப் பிரிவினர் என்று எல்லோருமே அளிப்பார்கள். இப்படி சில தொகுதிகளில் இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 84 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 489 மக்களவைத் தொகுதிகளிலும் 1,849 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். நாடு முழுவதும் 17.3 கோடிப் பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தார்கள். ஆனால், தேர்தலில் 45 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாயின. முதல் மக்களவைத் தேர்தலில் ஜவாஹர்லால் நேரு தலைமையிலான இந்தியத் தேசிய காங்கிரஸ் 364 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. எஸ்.ஏ. டாங்கே தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற சுகுமார் சென், முன்அனுபவம் ஏதுமின்றி வெற்றிகரமாகத் தேர்தலை நடத்திக் காட்டினார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 25 March 2019

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணிகள் என்னென்ன?

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணிகள் என்னென்ன?
இந்தியாவில் 17-வது முறையாக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுப் பிரச்சாரங்களும் சூடுபிடித்துள்ளன. இந்தச் சூழலில் நம்மிடம் வாக்குகள் கேட்டு வரும் வேட்பாளர் வெற்றிபெற்று டெல்லி செல்லும்போது அவர் நமக்காக என்னென்ன பணிகளைச் செய்வார், அவரால் என்னென்ன செய்ய முடியும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.ஒரு எம்.பி.யின் பொறுப்புகள், பணிகள் குறித்து அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பாகச் சொல்லப்படவில்லை. எனினும், 105-வது கூறில் 3-வது உட்கூறில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அதிகாரங்களும் பணிகளும் பேசப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றக் கமிட்டிகளில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் பொறுப்புகளையும் பணிகளையும் நாடாளுமன்றமே அந்தந்தக் காலச்சூழல்களில் முடிவெடுக்கலாம் என்கிறது அரசமைப்புச் சட்டம். இது தவிர, பல்வேறு சட்டங்களின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு எம்.பி.க்குப் பல்வேறு பணிகள் உள்ளன.

அவையில் முன்வைக்கப்படும் மசோதா தொடர்பான விவாதங்களில் ஒரு எம்.பி., பங்கேற்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறார். அமைச்சர் அல்லாத ஒரு எம்.பி., தனிநபர் மசோதாக்களின் மூலம் சட்டரீதியான மாற்றங்களையும் பரிந்துரைக்கலாம்.அரசமைப்புச் சட்டத்தில் அவ்வப்போது சட்டத் திருத்தம் செய்யப்படும்போது ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்கும் உரிமையும் அவருக்கு உண்டு. மாநிலங்களின் எல்லைகளை மறுவரையறை செய்வது, சட்ட மேலவையை ஏற்படுத்துவது தொடங்கி உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் முதலிய அரசமைப்புச் சட்டத்தின் கீழான நிறுவனங்கள் தொடர்பாகச் சட்டமியற்றும்போதும் எம்.பி.க்கள், விவாதங்களில் பங்கேற்றுத் தங்களது கருத்துகளை முன்வைக்க முடியும்.

தேர்ந்தெடுக்கும் பொறுப்பு
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் வாக்களிக்கிறார். மக்களவை உறுப்பினர் சபாநாயகரையும் துணைச் சபாநாயகரையும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார். மாநிலங்களவை உறுப்பினரோ மாநிலங்களவையின் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்.

நிதி தொடர்பான பொறுப்புகள்
மக்களுக்கு வரிவிதிப்பது தொடர்பான எந்த முடிவுகளும் மக்களவை உறுப்பினர்களின் அங்கீகாரமின்றி நிறைவேற்றப்படாது. நாட்டின் நிதிநிலை அறிக்கையும் மக்களவையின் அனுமதியைப் பெற வேண்டும். நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு நிதி கமிட்டிகளில் பங்குபெறுவதன் வாயிலாக, செலவிடப்படும் நிதி தொடர்பான முடிவுகளையும் கட்டுப்பாடுகளையும் செய்யும் வாய்ப்பும் மக்களவை உறுப்பினருக்கு உண்டு.

மேற்பார்வை செய்யும் பொறுப்பு
ஜனாதிபதி மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அது தொடர்பான விவாதத்திலும் எம்.பி.யின் பங்கேற்பு எதிர்பார்க்கப்படுகிறது. உதவி ஜனாதிபதி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீக்கத்தின்போதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் பங்குபெறுவார்கள்.ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அரசின் செயல்பாடுகளை விவாதிப்பதன் வாயிலாக அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் வைத்துள்ளார். கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம், கவன ஈர்ப்புத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், நம்பிக்கையில்லாத் தீர்மானம், வெட்டுத் தீர்மானம் போன்றவை மூலம் இரண்டு அவைகளிலும் விவாதங்கள் வழியாக அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்.பொதுக் கணக்குக் குழுக்கள், பொது மதிப்பீட்டுக் குழுக்கள், பொதுத் துறை நிறுவனங்கள் போன்றவை தொடர்பான கமிட்டிகளிலும் இடைக்காலக் கமிட்டிகளிலும் உறுப்பினராகப் பங்கேற்று அரசின் பணிகளை மேற்பார்வை செய்யலாம்.

தொகுதியின் குரல்
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர் தேர்ந்தெடுக்கப்படும் தொகுதியின் குரலாகச் செயல்படுகிறார். தனது தொகுதியின் பிரச்சினைகள் குறித்துக் கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்குகிறார். மாவட்ட ஆட்சியர் அளவில் செயல்படும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்பான பங்கேற்பைச் செய்ய முடியும். மத்திய, மாநில அரசு மட்டத்தில் செய்யப்படும் பணிகளிலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஊக்கத்துடன் ஈடுபடலாம்.

ஒரு தொகுதிக்கு ஐந்து கோடி
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் அடிப்படையில் 1993 முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்வதற்காக ஆண்டுதோறும் தொகுதி நிதி ஒதுக்கப்பட்டுவருகிறது. ரூ.5 லட்சத்தில் தொடங்கி தற்போது ரூ.5 கோடியாக இருக்கும் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி, மாவட்ட நிர்வாகத்துக்கு விநியோகம் செய்யப்படும். பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வாழும் பகுதிக்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனக்கு ஒதுக்கும் நிதியிலிருந்து முறையே 15% மற்றும் 7.5% ஒதுக்க வேண்டும். அவை கட்டிடங்கள் போன்ற நீடித்த தன்மையுள்ள உடைமைகளாக இருக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி நிதியை மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்துக்கான நிதியோடும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

தமிழக எம்.பி.க்களின் செயல்பாடு

16-வது நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் தொகுதி நிதியை சராசரியாக 80%-க்கு மேல் தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்குச் செலவிட்டிருக்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் நடந்த விவாதங்களில் பங்கேற்பு, வருகை ஆகியவற்றில் தமிழக எம்.பி-க்களின் செயல்பாடு தேசிய அளவில் சராசரிக்கும் கீழே இருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் பங்கேற்பு, தேசிய சராசரியாக 80% உள்ளது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களோ சராசரியாக 78% நாட்களே வருகை தந்துள்ளனர். விவாதங்களில் தேசியப் பங்கேற்பு சராசரி 63.6% ஆக உள்ளது. தமிழக உறுப்பினர்கள் 43.6% அளவிலேயே விவாதப் பங்கேற்பைச் செலுத்தியுள்ளனர் என்பது வருத்தமான விஷயம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Popular Posts