Wednesday 26 December 2018

வங்கி ஊழியர் போராட்டம் ஏன்?

வங்கி ஊழியர் போராட்டம் ஏன்? சி.எச்.வெங்கடாசலம் பொதுச்செயலாளர், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம். வ ங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வங்கிகளில் பணிபுரியும் 10 லட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இந்த வேலை நிறுத்தம் வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல. வங்கி துறையை பாதுகாக்க முக்கிய கோரிக்கைளை முன்வைத்து நடத்தப்படும் வேலை நிறுத்தம் ஆகும். வங்கிகளில் மத்திய அரசு சீர்திருத்தம் என்ற பெயரில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வங்கிகளில் அரசின் மூலதனத்தை குறைப்பது, வங்கிகளை இணைத்து பெரும் முதலாளிகள் வங்கிகளை தொடங்க உரிமம் வழங்குவது, வங்கிகளின் குறிக்கோள் லாபம் மட்டுமே என்று மாற்றுவது போன்ற கொள்கைகளை அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்தியாவில் வங்கிகள் பொதுமக்களுக்கு சேவை செய்வதில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. குறிப்பாக வங்கிகள் தேசியமயம் செய்த பிறகு வங்கி சேவைகள் மக்களை பெரிதும் சென்று அடைந்துள்ளன. 8 ஆயிரம் கிளைகளோடு செயல்பட்ட வங்கிகள் இன்று 88 ஆயிரம் கிளைகளாக வளர்ந்திருக்கின்றன. இதன் விளைவாக வங்கிகள் சேவை சாதாரண பொதுமக்களை சென்று அடைந்துள்ளது. 1969-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் கோடியாக இருந்த வைப்புத் தொகை இன்று ரூ.118 லட்சம் கோடியாக வளர்ந்துள்ளது. அதேபோன்று விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, வேலைவாய்ப்பு திட்டங்கள் வறுமை ஒழிப்பு திட்டங்கள் தொழில் வளர்ச்சி போன்ற அனைத்து பொருளாதார தேவைகளுக்கும் கடன் அளிக்கும் முன்னேற்றமும் ஏற்பட்டு உள்ளது. 60 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு வங்கி கிளை என்ற நிலைமை மாறி தற்போது 12 ஆயிரம் மக்கள் தொகைக்கு சராசரியாக ஒரு கிளை என்ற அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு வங்கி சேவை சென்றடைய வங்கித்துறையை மேலும் விரிவுபடுத்தும் அவசியம் உள்ளது. இதன் காரணமாகவே மோடி அரசு ஜன்தான் போஜனா போன்ற திட்டங்களை அறிவித்து உள்ளது. இன்றைக்கும் 20 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு இல்லாத நிலைமை உள்ளது. 40 ஆயிரம் கிராமங்களில் மட்டுமே வங்கி கிளைகள் உள்ளன. அதாவது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்றும் வங்கிகள் சென்று அடையவில்லை. எனவே மேலும் ஆயிரக்கணக்கில் வங்கி கிளைகளை தொடங்க வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பின்னணியில் மத்திய அரசு வங்கிகளை இணைக்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 5 பெரிய வங்கிகளாக மாற்றுவது அரசின் திட்டமாகும். இதன் தொடக்கமாக கடந்த ஆண்டு அரசுக்கு சொந்தமான 6 வங்கிகள் மூடப்பட்டு ஸ்டேட் வங்கியோடு இணைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த மாதத்தில் மேலும் 3 வங்கிகளை அதாவது பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய வங்கிகளை இணைத்து ஒரு புதிய வங்கியை தொடங்கும் முடிவை அறிவித்து உள்ளது. இந்த முடிவை எதிர்த்து இந்த வேலை நிறுத்தும் நடத்தப்படுகிறது. வங்கிகள் இணைப்பின் காரணமாக கிளைகள் மூடப்படும் நிலை ஏற்படும். உதாரணமாக சென்ற ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஸ்டேட் வங்கியில் இணைப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான கிளைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 21-ந் தேதி நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் மத்திய துணை நிதியமைச்சர் சிவ பிரபாத் சுக்லா ஸ்டேட் வங்கி இணைப்புக்கு பிறகு ஒரு ஆண்டில் 6 ஆயிரத்து 950 கிளைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளார். இதே நிலைதான் மற்ற வங்கி இணைப்புக்கு பிறகும் ஏற்படும். இந்த 3 வங்கிகளை இணைத்தால் 9 ஆயிரம் கிளைகள் அடங்கிய பெரும் வங்கியாக மாற்றப்படும் என்று அரசு கூறுகிறது. ஆனால் இந்த வங்கியிலும் ஆயிரக்கணக்கான கிளைகள் மூடும் ஆபத்து ஏற்படும். எனவே வங்கி இணைப்பை தவிர்க்க வேண்டும். அமெரிக்காவில் 32 கோடி மக்களே உள்ளனர். இந்தியாவில் 135 கோடி மக்கள் தொகை உள்ளது. ஆனால் நம் நாட்டில் உள்ள வங்கி கிளைகளை விட கூடுதலாக அமெரிக்காவில் வங்கி கிளைகள் உள்ளன. இதுபோன்று பல நாடுகளில் மக்கள் தேவைக்கேற்ப வங்கி சேவை அதிகரித்துள்ளன. பெரிய வங்கி என்று சொன்னாலே அது சிறந்த வங்கி அல்லது தரமான வங்கி என்று கூற முடியாது. பல நாடுகளில் பெரிய வங்கிகள் மூடப்பட்டுள்ள பின்னணியில் நமது நாட்டில் இந்த கொள்கையை தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது. எனவே அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியாவில் வங்கிகள் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வங்கிகளாகவே செயல்பட வேண்டும். இந்த வங்கிகளை இணைப்பதால் வங்கிகள் பெரு வங்கிகளாக மாற்றப்பட்டால் இப்பெரும் வங்கிகள் பெரும் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உதவும் நிலைமை ஏற்படும். இந்தியாவில் இன்றுள்ள 21 வங்கிகளை ஒன்றாக இணைத்தாலும் அதன் மொத்த மூலதனம் 20 ஆயிரம் கோடி அளவிலேயே இருக்கும். ஆனால் உலகத்தில் உள்ள பெரும் வங்கிகளில் மூலதனம் ரூ.4 லட்சம் கோடி என்று அதிகமாக உள்ளது. எனவே வங்கிகளை இணைப்பதன் மூலமாக உலகத்தில் உள்ள பெரும் வங்கிகளோடு போட்டி போட நமது வங்கிகளால் இயலாது. இப்போட்டியை இந்திய வங்கிகள் வெல்ல முடியாது என்று தெரிந்தும் இந்த முடிவை அரசு மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் கடந்த ஆண்டு மேற்கொண்ட ஸ்டேட் வங்கி இணைப்புக்கு பிறகு கிளைகள் மூடப்பட்டதன் விளைவாக ஊழியர்கள் உபரியாக்கப்பட்டு விட்டனர். இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரி 80 ஆயிரம் புதிய ஊழியர்கள் ஸ்டேட் வங்கியில் நியமிக்கப்பட்டு வந்தனர். இணைப்புக்கு பிறகு இந்த நிலை மாறி இந்த ஆண்டு 5 ஆயிரம் புதிய நியமனங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. எனவே வங்கி இணைப்பு வேலைவாய்ப்புகளையும் குறைத்து உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக உள்ள நம் நாட்டில் வேலைவாய்ப்பை பாதிக்கும் வங்கி இணைப்பை அரசு கைவிட வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் கூடுதலாக வங்கி கிளைகளை தொடங்க வேண்டியது தேவையாகும். வங்கிகளில் உள்ள வாராக்கடன்களை குறைக்கவே இந்த இணைப்பு திட்டம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் 2017-ம் ஆண்டு மார்ச் 31-ல், ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் கோடியாக இருந்த வாராக்கடன் தொகை மார்ச் 31, 2018-ல், ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. எனவே வங்கி இணைப்பு மூலமாக வாராக்கடன் தொகை குறையும் என்ற வாதமும் தவறு. 20 ஆண்டுகளுக்கு முன்பாக 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வாராக்கடன் இன்று 13 லட்சம் கோடி ரூபாயாக வளர்ந்துள்ளது. இதில் பெரும் முதலாளிகள் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததே காரணமாக உள்ளது. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து வாராக்கடனை வசூலிப்பதேஅவசர தேவையாக உள்ள பின்னனியில் வங்கிகளை இணைக்கும் வாராக்கடனை வசூலிக்கும் திட்டங்களை முடக்குவது வங்கித்துறைக்கு பாதகமானது. இந்தியாவுக்கு தேவை அனைத்து தரப்பு மக்களும் வங்கி சேவை சென்று அடைய வேண்டும். அனைத்து மக்களுக்கும் தேவையான வங்கி கடன் பெரும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் வங்கி சேவை சென்றடையும் வகையில் கூடுதலாக கிளைகளை தொடங்க வேண்டும். இந்த கொள்கைகளை விடுத்து வங்கிகளை இணைக்கும் திட்டத்தில் மத்திய அரசு இயங்குவாதல் அது நாட்டு மக்கள் கவனத்துக்கும், நாடாளுமன்ற கவனத்துக்கும் கொண்டு வரவே இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்குகின்றனர். இதை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம்.

No comments:

Popular Posts