Wednesday 8 August 2018

அரசியலில் ஓர் அதிசயம் இலக்கியத்தில் ஓர் இமயம்

அரசியலில் ஓர் அதிசயம் இலக்கியத்தில் ஓர் இமயம் தமிழக அரசியலில் சகாப்தம் படைத்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:- தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தவர். கடந்த அரை நூற்றாண்டு காலம், தமிழக அரசியலின் மையப்புள்ளியாக திகழ்ந்தவர். அரசியலிலும், திரைப்படத்துறையிலும் பல சாதனைகள் புரிந்தவர் கருணாநிதி. தமிழக சட்டசபைக்கு 13 முறை போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவர். திருவாரூரில் இருந்து 15 மைலில் உள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் 1924 ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்தார். பெற்றோர்: முத்துவேல்- அஞ்சுகம் அம்மையார். கருணாநிதிக்கு சண்முக சுந்தரத்தம்மாள், பெரிய நாயகி என்று இரு சகோதரிகள். குடும்பத்திற்கு ஒரே ஆண் பிள்ளை கருணாநிதி. பள்ளியில் படிக்கும்போதே அரசியலிலும், இலக்கியத்திலும் ஆர்வம் மிக்கவராக கருணாநிதி விளங்கினார். அப்போது “மாணவ நேசன்” என்ற கையெழுத்து பிரதியை நடத்தினார். “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” என்ற அமைப்பை தொடங்கி, அப்போது அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களாக விளங்கிய அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகியோரை அழைத்து மன்றத்தில் பேச செய்தார். அண்ணாவின் பாராட்டு 1942-ல் அண்ணா நடத்தி வந்த “திராவிட நாடு” ஏட்டின் மூன்றாவது இதழில், கருணாநிதி எழுதிய “இளமைப்பலி” என்ற எழுத்தோவியம் பிரசுரமாகியது. இக்கட்டுரை அண்ணாவை வெகுவாக கவர்ந்தது. ஒரு விழாவுக்காக திருவாரூர் வந்த அண்ணா, “இந்த ஊரில் கருணாநிதி என்பவர் யார்? அழைத்து வாருங்கள். நான் பார்க்க வேண்டும்” என்றார். சில நிமிடங்களில் கருணாநிதி அவர் முன் போய் நின்றார். “கருணாநிதி ஒரு பெரிய ஆளாக இருப்பார்” என்று நினைத்திருந்த அண்ணா, ஒரு சிறுவனை பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினார். 1944 செப்டம்பர் 13-ந் தேதி கருணாநிதிக்கு திருமணம் நடந்தது. மணமகள் பெயர் பத்மா. கருணாநிதியின் நாடகங்களில் ஒன்றை பார்த்து பாராட்டிய தந்தை பெரியார், அவர் நடத்தி வந்த “குடியரசு” வார இதழின் துணை ஆசிரியராக கருணாநிதியை நியமித்தார். திராவிட கழகத்தின் கொடி உருவாக்கப்பட்ட போது, நடுவில் உள்ள சிவப்பு வண்ணத்துக்கு, கருணாநிதி தன் ரத்தத்தை காணிக்கை ஆக்கினார். பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். திரை உலக பிரவேசம் இந்த சமயத்தில் கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த “ராஜகுமாரி” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கருணாநிதிக்கு கிடைத்தது. இந்த படத்தில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். கருணாநிதிக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத்தொடங்கின. மனைவி பத்மாவுடன் கோவையில் குடியேறி, “அபிமன்யு” படத்திற்கு வசனம் எழுதினார். ஆனால் படத்தில் அவர் பெயர் விளம்பரப்படுத்தப்படவில்லை. திராவிடர் கழகத்தில் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் கருணாநிதி வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில், அவர் மனைவி பத்மா, கணவரையும், கைக்குழந்தை முத்துவையும் கலங்க வைத்துவிட்டு இயற்கை எய்தினார். 1948 செப்டம்பர் 15-ந் தேதி தயாளு அம்மாளை கருணாநிதி மணந்து கொண்டார். திராவிடர் கழகத்தில் பிளவு 1949 ஜூலை 9-ந் தேதி தனக்கு வாரிசுரிமை வேண்டும் என்பதற்காக மணியம்மையை பெரியார் மணந்தார். இதனால் திராவிடர் கழகம் பிளவுபட்டு, செப்டம்பர் 17-ந் தேதி அண்ணா தலைமையில் தி.மு.கழகம் உதயமாயிற்று. தி.மு. கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராய் விளங்கிய கருணாநிதி, மாடர்ன் தியேட்டர் தயாரித்த “மந்திரி குமாரி” படத்துக்கு வசனம் எழுதி புகழ் பெற்றார். 1952-ல் “பராசக்தி” படத்திற்கு வசனம் எழுதி, புகழின் சிகரத்தை தொட்டார். இப்படத்தில்தான் சிவாஜிகணேசன் அறிமுகமானார். 1953 ஜூலை மாதத்தில் தி.மு.கழகம் “மும்முனை போராட்டம்” நடத்தியது. டால்மியாபுரத்தின் பெயரை “கல்லக்குடி” என்று மாற்றக்கோரி நடந்த போராட்டத்தில், தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார் கலைஞர். அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 1957 தேர்தலில் தி.மு.கழகம் முதன் முதலாக சட்டசபை தேர்தலில் களமிறங்கியது. குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்றார். கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் 1963 ஜனவரி 17-ல் இவ்வுலக வாழ்வை நீத்தார். 1965-ல் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். 1967 பொதுத்தேர்தல், தமிழக அரசியலில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வி அடைந்து, தி.மு.கழகம் ஆட்சி பீடம் ஏறியது. பேரறிஞர் அண்ணா முதல்வரானார். கருணாநிதி, பொதுப்பணித்துறை அமைச்சரானார். பின்னர் போக்குவரத்து துறைக்கும் பொறுப்பேற்றார். அப்போது, பஸ்களை அரசுடைமையாக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். முதல்-அமைச்சர் ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் கூட முடியாத நிலையில் 1969 பிப்ரவரி 2-ந் தேதி நள்ளிரவு அண்ணா மறைந்தார். அறிஞர் அண்ணாவின் அரசியல் வாரிசு என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருணாநிதி முதல்-அமைச்சரானார். 1969 பிப்ரவரி 10-ந் தேதி கருணாநிதியின் அமைச்சரவை பதவி ஏற்றது. மத்திய மாநில அதிகாரப் பங்கீடு பற்றி நிர்ணயிக்க “ராஜ மன்னார் குழு”வை அமைத்தார். 1971-ல் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க, பிரதமர் இந்திராகாந்தி முடிவு செய்தார். இந்திராகாந்தியுடன் கூட்டணி அமைத்த கலைஞர், தமிழக சட்டசபையையும் கலைத்து விட்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் நடத்த துணிச்சலாக முடிவு எடுத்தார். ராஜாஜியும், காமராஜரும் கூட்டணி அமைத்து எதிர்த்தும், கலைஞரை வீழ்த்த முடியவில்லை. தேர்தலில், தி.மு.கழகம் 184 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 1971 மார்ச் 15-ந் தேதி கருணாநிதி இரண்டாவது முறையாக முதல்-அமைச்சரானார். பின்னர் கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. தி.மு.கழகத்தில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். “அண்ணா தி.மு.க.” என்ற பெயரில் தனி கட்சி தொடங்கினார். நெருக்கடி நிலை 1975-ல் இந்திராகாந்தி “நெருக்கடி நிலை”யை பிரகடனம் செய்தார். இதை கருணாநிதி எதிர்த்தார். இதன் விளைவாக, 1976 ஜனவரி 31-ந் தேதி மாலை தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின், மருமகன் முரசொலிமாறன் மற்றும் கணக்கற்ற தி.மு.கழக பிரமுகர்கள், தொண்டர்கள் “மிசா” சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். நெருக்கடி நிலையின்போது, கருணாநிதி சந்தித்த சோதனைகள் ஏராளம். அவைகளையெல்லாம் பொறுமையுடனும், மன உறுதியுடனும் தாங்கிக்கொண்டார். 1977-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்தார். கருணாநிதி எதிர்க்கட்சி தலைவரானார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார். இந்திரா காந்திக்கு கறுப்பு கொடி காட்டப்போனபோது, கைது செய்யப்பட்டார். 14 நாட்கள் காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது, 28.11.1977 அன்று மு.க.ஸ்டாலினுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வந்தது. 8.12.1977-ல் ரிமாண்ட் காலம் முடிந்ததும் விடுதலை செய்யப்பட்டார். இந்திராவுடன் கூட்டணி டெல்லியில் மொரார்ஜி தலைமையில் அமைந்த ஜனதா அரசும், பின்னர் சரண்சிங் அரசும் கவிழ்ந்ததால் 1980 ஜனவரியில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. நெருக்கடி நிலை காரணமாக இந்திராகாந்தி-கருணாநிதி நட்புறவு பாதிக்கப்பட்டிருந்த போதிலும், 1980 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க இந்திரா விரும்பினார். பழைய சம்பவங்களை எல்லாம் மறந்து, இ.காங்கிரசுடன் கூட்டணி அமைக்க கருணாநிதி சம்மதித்தார். அந்த தேர்தலில், இந்திரா காந்தி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தார். தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில், 38 தொகுதிகளை தி.மு.க. இ.காங்கிரஸ் கூட்டணி பிடித்தது. எம்.ஜி.ஆர். ஆட்சி கலைப்பு இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு, சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த ஜானகி அம்மாள் மந்திரிசபை, அ.தி.மு.க. பிளவுபட்ட காரணத்தால் 24 நாட்களில் கவிழ்ந்தது. 1989-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, கருணாநிதி மீண்டும் (3-வது முறையாக) முதல்-அமைச்சரானார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவிடாமல் அவர் மந்திரிசபையை, 1991 ஜனவரி 30-ந் தேதி அன்று அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர் டிஸ்மிஸ் செய்தார். பிறகு 1991 மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.கழகம் தோல்வி அடைந்தது. அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனார். 1996 மே மாதம் நடந்த தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்றது. கருணாநிதி நான்காவது முறையாக முதல்-அமைச்சர் ஆனார். தமிழகத்தில் நான்காவது முறையாக முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருணாநிதி ஒருவர் தான். 2001-ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்தது. 196 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்-அமைச்சராக 2-வது முறையாக ஜெயலலிதா பொறுப்பேற்றார். தி.மு.க. கூட்டணி 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2006-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று, 5-வது முறையாக தமிழகத்தின் முதல்-அமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்றார். இந்த தேர்தலில், தி.மு.க. கூட்டணி 163 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 69 இடங்களிலும் வெற்றி பெற்றது. 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் 203 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 31 இடங்களில் மட்டுமே தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியாக கூட தி.மு.க.வால் வரமுடியவில்லை. தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக இருந்தது. 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. 134 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த முறை தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கருணாநிதி அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts