Sunday 8 July 2018

வலிகளின் வரலாறு எழுதும் கலைகள்!

வலிகளின் வரலாறு எழுதும்கலைகள்! லதா அருணாச்சலம் மர உருவங்கள், பித்தளை மற்றும் யானைத் தந்தத்தாலான சிற்பங்கள், இசைக் கருவிகள், மணிகள், பவளங்கள், முத்துகள், அரிய வகை ஆபரணக் கற்கள், பாசி மணிகள், துணி வகைகளில் செய்யப்படும் கைப்பைகள் என நைஜீரியாவின் கைவினைக் கலைப் பொருட்களில் பல வகைமைகள் உண்டு. ஆரம்ப காலங்களில் இந்தக் கைவினைப் பொருட்கள் பெனின், அக்வா பகுதி மக்களாலேயே பெரிதும் உருவாக்கப்பட்டுவந்தன. காலப்போக்கில் கலைப் பொருட்களை உருவாக்கும் கலைஞர்களும் அதைப் போற்றும் ஆர்வலர்களும் நைஜீரியாவின் பல இடங்களிலிருந்தும், இனத்திலிருந்தும் தோன்றினர். இவர்கள் செய்யும் கைவினைக் கலைப் பொருட்களில் மனித முகங்கள்தான் பிரதானமானது. அனைத்து இன மக்களின் முகமூடி உருவங்களும் இங்கு கிடைக்கும். ஒவ்வொரு இனத்துக்கான தோன்றல், அவர்கள் பாரம்பரியம், பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை இவற்றோடு அவர்களின் வளமான மற்றும் வலி நிரம்பிய கடந்தகாலம் என்று மனித வாழ்க்கையின் பரிமாணங்களையே அனைத்து சித்திரங்களும், கைவினைப் பொருட்களும் பிரதிபலிக்கின்றன. பழங்குடி இனத்தவர்கள், அரசர்கள், அவர்களின் செல்வச் செழிப்பான வாழ்க்கை முதல் இன்றைய நவீன உலகின் மாற்றங்களையும் கைவினை அழகில் வடித்திருப்பார்கள். மாறுபட்ட கால இடைவெளியில் வெவ்வேறு நாட்டு மக்கள் இங்கு குடியேறியிருந்தாலும், இப்போதும் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி எந்தச் சிற்பத்தையும் உருவத்தையும் காண முடிவதில்லை. காலனி ஆதிக்கம் மற்றும் அடிமை வணிகத்தின்போது மக்களைத் தனது ஆதிக்கத்தின்கீழ் அடக்கி ஒடுக்கி கொடுமைப்படுத்திய சில வெள்ளையர் உருவங்கள் மட்டும், அந்தக் காட்சிகளைப் பிரதிபலிக்கும் சிற்பங்களில் ஆங்காங்கே காணக் கிடைக்கிறது. கலைப் பொருட்களை விற்பனைசெய்யும் ஒவ்வொருவரும் அதன் வரலாறைத் தெரிந்து வைத்திருப்பார்கள். “இது வெறும் கலையல்ல, எங்கள் நாட்டின் பாரம்பர்யம்!” என்று கம்பீரமாக அவர்கள் சொல்வதைக் கேட்க முடியும். அழகும், கலையுணர்வும், கலைஞர்களின் துல்லியமான கைவேலைப்பாட்டுத் திறமையும் தன்னுள் ஏந்தி நிற்கும் உருவங்கள் ஒரு வலி மிகுந்த வரலாறையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. நைஜீரியா நாட்டிலுள்ள பெனின் (பெனின் நாடு வேறு) நகரம் ஓபா எனும் மன்னரால் ஆட்சிசெய்யப்பட்டு வந்த நகரம். கலைகளும் செல்வங்களும் குவிந்துகிடந்த இடம். ஆனால், அந்தக் காலகட்டத்தில் அடிமைகளும், நரபலிகளும்கூட மலிந்திருந்தன. ஓபா சொன்னால் தலையைக் கொடுக்கக்கூட தயங்காத குடிமக்கள் இருந்தனர். அவ்வளவு செல்வங்களும், ஆபரணங்களும், கலைகளும் கொட்டிக்கிடக்கும் பெனின் நகரத்தின் மீது ஆங்கிலேயர் கண்வைத்துக்கொண்டே இருந்தனர். 1892-ல் ஆங்கிலேயப் பிரதிநிதிகள் வழக்கம்போல வியாபார ஒப்பந்தம்போட்டு நுழையப்பார்த்தனர். ஒப்பந்தம் பல வகையில் ஒருதலைபட்சமாகவும், அவர்களுக்கே சாதகமாகவும், அவர்களுக்கு அரசில் இடம் உண்டு என்ற வகையிலும் கடைசியில் மாற்றித் தயாரிக்கப்பட்டு மன்னரை ஏமாற்றி கையெழுத்து வாங்கினர். ஆனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மன்னர் ஆங்கிலேயர்களை நுழையவிடவில்லை. அதனால், 1896-ம் ஆண்டு நகரத்தில் மிகப் பெரும் கலவரமும், அதைத் தொடர்ந்து போரும் ஏற்பட்டது. இதில் பெனின் மக்கள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, ஆங்கிலேயர்களின் ஒரே ஆயுதமான கைத்துப்பாக்கிகள் இருக்கும் அறையைப் பூட்டி வைத்து, அவர்களை நிராயுதபாணியாக்கி வெற்றிகொண்டனர். ஃபிலிப்ஸ் என்ற ஒரு படைத்தளபதி தலைமையேற்று நடத்திய இந்தப் போரில் இரண்டே இரண்டு படை வீரர்கள் மட்டுமே உயிர் தப்பினர். இது பெனின் படுகொலை (Benin Masacre) என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டே, இந்தப் போரையும், படுகொலைகளையும் வஞ்சம் தீர்க்க ஹாரி ராசன் என்ற அட்மிரல் தலைமையில் ஆங்கிலேயரின் பெரும் படை நுழைந்து நகரைச் சின்னாபின்னாமாக்கியது. மக்கள், அனைத்தையும் இழந்து, உயிருக்குப் பயந்து ஓடிஒளிந்தனர். ஓபாவும் நகரிலிருந்து வேறு இடத்துக்குத் தப்பி ஓடினார். மிக எளிதாக ஆங்கிலேயர் பிடியில் வந்தது நகரம். ஆனால், நகரை ஆள்வதில் அவர்களுக்கு அதிக விருப்பமில்லை. குவிந்துகிடக்கும் வளங்களும், கலைப் பொக்கிஷங்களுமே அவர்கள் இலக்கு. ஓபாவும் பிடிபட்டார். அவரைப் பிடித்த மூர் என்ற படைவீரர், எந்தவித செல்வாக்குமின்றி கலாபார் என்ற சிறிய நகரில் அவரை வாழ அனுமதித்தார். ஆனால், தன் கடைசி காலத்தில் தவறை உணர்ந்த மூர், குற்றவுணர்வு தாளாமல் தற்கொலை செய்துகொண்டார். போர் முடிவுக்குவந்ததும், நகரைக் கொள்ளையடிக்கும் வேலை தொடங்கியது. அனைத்து கலைப் பொருட்களும் அபகரிக்கப்பட்டு இங்கிலாந்து எடுத்துச்செல்லப்பட்டன. பல பொருட்கள் ஜெர்மனி கலை அருட்காட்சியகத்துக்கு விற்கப்பட்டன. பல அரிய விலையுயர்ந்த கைவினைப் பொருட்கள் இன்றும் லண்டன் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. இப்போதுள்ள ஆட்சியாளர்களின் முயற்சியால் கலைப் பொருட்கள் சில திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், பல அரிய கலைச் சின்னங்களைத் திரும்பப் பெற அரசின் சார்பாக முயற்சிகள் நடைபெறுகின்றன. பொருட்கள் களவுபோய்விட்டாலும், அந்தக் கலையின் திறமை இன்றும் நைஜீரியர்கள் கைவினைப் பொருட்களில் அழகுடன் மிளிர்கிறது. மரம், பித்தளை, பல வகையான கற்களில் கலை வடிவைச் செதுக்குகிறார்கள். இடங்கள் வேறுபடலாம். ஆனால், நாட்டின் சுதந்திரத்தையும், கலைச் செல்வங்களையும் காக்கும் வீரர்களின் போராட்ட உணர்வுகள் என்றும் வேறுபடுவதில்லை. நைஜீரியாவில் ஒரு கைவினைப் பொருள் வாங்கச் செல்வதென்பது, அந்த நாட்டு மக்களின் கலை, பண்பாடு ஆகியவற்றை அறிந்துகொள்ளும் வரலாற்றுப் பாட அனுபவம்! - லதா அருணாச்சலம், எழுத்தாளர்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts