Friday 16 December 2016

வெற்றிக்கு தேவை மகிழ்ச்சி

வெற்றிக்கு தேவை மகிழ்ச்சி | காலம் காலமாக மனிதர்கள் ஒரு கோட்பாட்டை கற்றும், கற்பித்தும் வருகிறார்கள், கடின உழைப்பு வெற்றிக்கு வழி வகுக்கும். வெற்றி மகிழ்ச்சியை தரும். மகிழ்ச்சியின் சாதகங்கள் என்ற இந்த நூலில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஷான் அசோர் (SHAWN ACHOR) என்ற போராசிரியர் மேலே சொன்ன கோட்பாட்டை ஏற்க மறுத்து ஆய்வுகள் பல மேற்கொண்டார். அதில் கடின உழைப்பு மட்டும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் தராது, மாறாக மகிழ்ச்சியான மனப்பாங்கு வெற்றியின் வீச்சை அதிகரிக்கும். அதே போல மகிழ்ச்சியில்லாமல் எந்த செயலையும் ஆரம்பிப்பவர்கள் தோல்வியில் துவண்டு போவார்கள். ஆக கடின உழைப்பு = வெற்றி = மகிழ்ச்சி என்ற சமன்பாட்டை மகிழ்ச்சி = கடின உழைப்பு = வெற்றி என்று மாற்றி நிரூபித்திருக்கிறார். 1600-க்கும் மேற்பட்ட வெற்றி யடைந்த மாணவர்களின் தரவுகளை இதில் நிறுவிக் காட்டுகிறார், சாதகமான மகிழ்ச்சிக்கு 7 படிக்கட்டுகளை அமைத்து தன்னுடைய ஆய்வையும் ஆலோசனைகளையும் அதை அடியொற்றி நிறுவிக்காட்டுகிறார், மகிழ்ச்சியின் சாதகம் முதல்படி மகிழ்ச்சியின் சாதகம் என்பது ஆகும். மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மகிழ்ச்சியற்று இருப்பவர்களைக் காட்டிலும் உளவியல் ரீதியாக சாதகமான நிலையில் பணிபுரிய இயலும். கல்லூரியில் பயிலும் மாணவர்களின் தரவுகளை 19 ஆண்டுகள் கழித்து அவர்களின் தற்கால நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியான மனப்பாங்கு உள்ள மாணவர்கள் மகிழ்ச்சியற்ற மாணவர்களின் வெற்றியைக் காட்டிலும் மேலதிக வெற்றி பெற்றவர்களாக இருந்தார்கள். மகிழ்ச்சி புத்தாக்கலுக்கும், புதுமை காண்பதற்கும் தொலை நோக்கு இலக்குகளை அடைவதற்கும் காரணி ஆகும். மகிழ்ச்சியாக இருப்பதும் மகிழ்ச்சியற்று இருப்பதும் அவரவர் எண்ணங்களை ஒட்டியே அமைகின்றது. மகிழ்ச்சியை நேரடியாக காண முடியாது, உணரத்தான் முடியும். அதே போல மகிழ்ச்சியற்ற தன்மையையும் சோகத்தையும் உணரத்தான் முடியும். ஆனால் அவ்வாறு உணரும்போது நம் நடை உடை பாவனைகள் மேல் அதிக வித்தியாசத்தைக் காண முடிகிறது. மகிழ்ச்சியே ஆதாரம் ஆர்கிமிடிஸ் என்ற கிரேக்க கணிதவியல் நிபுணர் கூறிய கூற்று நினைவு கூறத்தக்கது. மிகப்பெரிய நெம்புகோலையும் அதை வைப்பதற்கான ஒரு ஆதாரத்தையும் கொடுத்தால் உலகையே நகர்த்தி காட்டுவேன் என்று கூறியது இங்கு பொருத்தமானது. மகிழ்ச்சி என்ற சிறிய ஆதாரத்தைக் கொண்டு மிகப் பெரிய நெம்புகோலை முயற்சியாக மாற்றும் பொழுது சாதனைகள் கணக்கில் அடங்காது. ஆதாரத்தை சரியான இடத்தில் வைத்து சரியான திசையில் நகர்த்தினால் வெற்றி நிச்சயம். அந்த ஆதார புள்ளி அல்லது ஆதார கோடு என்பது நேர்மறை மனப்பாங்கு ஆகும். நெம்புகோலின் நீளம் அதிகமாக அதிகமாக நேர்மறை மனப்பாங்கினால் சரியான திசையில் அதை நெம்பும் பொழுது அதிக எடையை எளிதில் இடம் பெயர்க்கும். அதே போல மகிழ்ச்சி என்னும் ஆதாரம், உழைப்பு, கடினமான செயல்கள் ஆகிய நெம்புகோலைக் கொண்டு தூக்கும் பொழுது வெற்றியின் பரிமாணம் வியக்கத்தக்க வகையில் விரிகிறது. தோல்வியைத் தவிர் தோல்வியை கண்டு துவண்டுவிட்டால் வெற்றியின் மணத்தை நுகர முடியாது. நம்முடைய மூளையை வெற்றியின் அடிப்படையில் நிலை நிறுத்தினால் அது எப்பொழுதும் வெற்றியை பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும். மாறாக, தோல்வியை பற்றி நிலைநிறுத்தினால் தோற்று விடுவோமா என்ற அச்சம் செயல்களில் தாக்கத்தை குறைத்து தோல்வியை தந்து மகிழ்ச்சியைக் கொல்லும். ஆகவே மகிழ்ச்சியாக இருப்பது மூளையை சரியான திசையில் நிறுத்தி சிந்தனையை ஓட விடுவது ஆகும். இதுவே, வெற்றிக்கு வழிகாட்டும். விழுவது எழுவதற்குத்தான் மன ஓட்டத்தில் தோல்வியை தாங்கி பிடிக்காமல் தள்ளி விட பழகிக்கொள்ள வேண்டும் விழுந்ததை எண்ணிக்கொண்டிருந்தால் எழுவது போன்ற எண்ணம் தோன்றாது. எழுவது பற்றிய எண்ணம் இருந்தால் விழுந்த வலி தெரியாது. எனவே, விழுவது எழுவதற்குத்தான் என்ற ஆதாரக் கோட்டில் அடிமனதில் நம்பிக்கையை நிறுத்தும் பொழுது அடுத்து அடுத்து செய்யும் செயல்களில் மிகப்பெரிய நெம்புகோலாக நம்பிக்கை உருவெடுக்கிறது. எனவே மகிழ்ச்சிக்கு எண்ணங்களின் மாற்றம் இன்றியமையாதது. சின்ன சின்ன செயல்கள் விழும் பொழுது தோல்வி நம்மை துடைத்துப் போட்டதாக எண்ணம் தோன்றும். மெய்ப்பாடுகளாலும் உணர்வுகளாலும் அவை அதிக அளவில் தூண்டப்படும். ஆனால் அவைகளை வென்று வெளிவருவதற்கு சிறிய சிறிய செயல்களாக செய்து முடித்து மனதில் 'என்னால் முடியும்' என்ற எண்ணம் தோன்றும் வண்ணம் செயல்பட வேண்டும். பளு தூக்குபவர்கள் ஒரே நாளில் 50 கிலோ பளுவை தூக்க முடியாது. ஆனால் சின்ன அளவில் எடையை ஏற்றிக் கொண்டே செல்லும் பொழுது முதலில் முடியாமல் இருந்தது முயன்றதால் முடிந்துபோகிறது. வெற்றி வசப்படுகிறது. அடுத்து இன்னும் இன்னும் என்று எடையின் அளவை கூட்டிக் கொண்டே போகிறோம். எதிர்மறையை நேர்மறையாக்கு வலுவில்லா மன உறுதியை வலிமையான மன உறுதியாக மாற்ற ஆண்டுகள் தேவையில்லை. எண்ணமே சாதனையை தரும். மீண்டும் மீண்டும் வலுவற்ற தன்மையை எண்ணும் பொழுது மகிழ்ச்சி காணாமல் போய்விடுகிறது. மகிழ்ச்சி இல்லாத முயற்சி வெற்றியைத் தடுக்கிறது. அதிகமான நேரம் தோல்வி குறித்து சிந்தனை செய்தால் ஈவாக பெறுவது வேதனை மட்டுமே. மாறாக குறுகிய நேரத்தில் வலுவிழந்த நிலையில் இருந்து வெளியேறி மன உறுதியை கை கொள்ளும் பொழுது மகிழ்ச்சியும் பின் வெற்றியும் தானே, தேடி வரும். சமூதாய முதலீடு பலவகையான முதலீடுகளை அறிந்திருப்போம் ஆனால் சமூதாய முதலீடு மிக முக்கியமாகும். நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் இக்கட்டான நேரத்தில் தளர்ந்து சோர்ந்து கிடக்கும் மனதை உளவியல் ஆக்ஸிஜனாக மாற்ற கூடிய வலிமை பெற்றவர்கள். எனவே, மேற் கூறிய அனைத்து தரப்பினருடன் நம்முடைய நேர முதலீடு, எண்ண முதலீடு, மெய்ப்பாடுகளின் முதலீடு ஆகியவைகளை கூட்டி சமூதாய முதலீட்டை அதிகரிக்க வேண்டும். மகிழ்ச்சி என்பது தொற்றிக்கொள்வது. ஒருவரிடம் இருந்து அடுத்தவர் அறியாமல் அவர்களிடத்தில் சேருவது. சமூதாய முதலீடு கணக்கு வழக்கு சார்ந்து அல்ல மாறாக மனப்பாங்கு மற்றும் எண்ணம் ஆகியன சார்ந்தது. மகிழ்ச்சிக்கு கணக்கு கேட்க முடியாது. காட்டவும் முடியாது. உணரத்தான் முடியும். மகிழ்ச்சி வேண்டுமா படித்து பாருங்கள். மகிழ்ச்சி தொற்றிக் கொண்டால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Popular Posts