Sunday 18 December 2016

நா.பார்த்தசாரதி | பிரபல எழுத்தாளர், இலக்கியவாதி

நா.பார்த்தசாரதி | பிரபல எழுத்தாளர், இலக்கியவாதி | பிரபல எழுத்தாளரும், தலைசிறந்த இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி (Na.Parthasarathy) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: வில்லிபுத்தூர் அடுத்த நதிக்குடி கிராமத்தில் (1932) பிறந்தவர். பள்ளிப் படிப்புக்குப் பிறகு மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம் பெற்றார். மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்தாற்றல்மிக்க இவர், பல இதழ்களில் எழுதிவந்தார். 'கல்கி' இதழின் ஆசிரியர் சதாசிவம் அழைப்பின்பேரில், அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். தீரன், அரவிந்தன், பொன்முடி, வளவன், மணிவண்ணன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவந்தார். சாகித்ய அகாடமியின் உறுப்பினராகச் செயல்பட்டு, தமிழ்ப் படைப்புகளை தேசிய அளவில் பிரபலப்படுத்த முழு முயற்சி மேற்கொண்டார். சிறுகதை, நெடுங்கதை, நாவல், கட்டுரை, கவிதை, விமர்சனங்கள் என இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தார். 'தீபம்' என்ற இலக்கிய மாத இதழை 1965-ல் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். இதனால், 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றே குறிப்பிடப்பட்டார். தினமணிக் கதிர், வார இதழ், கதைக்கதிர் உள்ளிட்ட இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 'மணிவண்ணன் பதில்கள்' என்ற இவரது கேள்வி-பதில் பகுதி, 2 தொகுப்புகளாக வெளிவந்தன. பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். கல்கியில் இவர் எழுதி தொடர்களாக வெளிவந்த பல பயணக் கட்டுரைகள், 'புது உலகம் கண்டேன்', 'ஏழு நாடுகளில் எட்டு வாரங்கள்' என்ற பெயரில் நூல்களாக வந்தன. சிறுகதைகள், குறுநாவல்கள் அடங்கிய தொகுதிகள் உட்பட மொத்தம் 93 நூல்களை எழுதியுள்ளார். 'பொய் முகங்கள்', 'முள்வேலிகள்', 'சுதந்திரக் கனவுகள்', 'குறிஞ்சி மலர்', 'பொன்விலங்கு', 'துளசி மாடம்', 'மணிபல்லவம்', 'நித்திலவல்லி', 'பாண்டிமாதேவி', 'ராணி மங்கம்மாள்' உள்ளிட்ட இவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. 'குறிஞ்சிமலர்' நாவலில் வரும் அரவிந்தன், பூரணி கதாபாத்திரங்களின் பெயர்களை வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் அளவுக்கு இப்பாத்திரங்கள் புகழ்பெற்றன. தனக்கு கடிதம் எழுதும் வாசகர்களுக்கு தன் கைப்பட உடனடியாக கடிதம் எழுதும் வழக்கம் கொண்டவர். இவரது படைப்புகளில் சுயமுன்னேற்றச் சிந்தனைகள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் மிகுந்திருக்கும். இவரது பல நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இவரது குறிஞ்சி மலர், பொன் விலங்கு ஆகிய கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்தன. காமராஜர் தலைமையிலான 'ஸ்தாபன காங்கிரஸ்' கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் சிறந்த பேச்சாளரும்கூட. இலக்கியம், அரசியல் என்ற இரு துறைகளிலும் தன் பேச்சாற்றலால் முத்திரை பதித்தார். சாகித்ய அகாடமி விருது, தமிழ் வளர்ச்சித் துறையின் 1983-ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பரிசு, கம்பராமாயணத் தத்துவக் கடல் விருது உட்பட பல பரிசுகள், விருதுகளைப் பெற்றவர். 45 வயதுக்குப் பிறகு, பச்சையப்பன் கல்லூரியில் மாலை வகுப்பில் சேர்ந்து தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். 'பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். முனைவர் பட்ட நேர்காணலில் கலந்துகொள்வதற்கு முன்பாக, 55-வது வயதில் (1987) மறைந்தார். - ராஜலட்சுமி சிவலிங்கம்

No comments:

Popular Posts