Wednesday, 5 February 2020

அமைப்போம், ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம்.

அமைப்போம், ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் | அமுதன் | தமிழர்களின் புகழ்க் கொடி இன்று பார் புகழும் வண்ணம் பட்டொளி வீசிப் பறந்து கொண்டு இருப்பதற்கான காரணிகளில் ஒன்று, ஆதிச்சநல்லூர் அகழாய்வு என்று சொன்னால் அது மிகையல்ல.

பூமிப் பந்தில் மனிதகுலம் அவதரித்த புள்ளி ஆப்பிரிக்கா என்று உலக ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டு இருக்கும் நிலையில், நாடோடிகளாகத் திரிந்த மனிதன் வளமான வாழ்வைத் தேடி நாலா திசைகளிலும் பரவிய பிறகு நாகரிக வாழ்வில் காலடி எடுத்து வைத்த முதல் இடம் எது என்பது அடையாளம் காணப்பட முடியாமல் ஆய்வாளர்களை அலைக்கழித்துக் கொண்டு இருந்தது.

இன்றைக்கு சரியாக 144 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1876-ம் ஆண்டு, மனித நாகரிகத்தின் முதல் தொட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் என்பதாக இருக்கலாம் என்று அனுமானித்த ஜெர்மன் நாட்டு ஆய்வாளர் டாக்டர் ஜாகர் என்பவர் கடல் கடந்து வந்து ஆதிச்சநல்லூரில் ஆய்வு மேற்கொண்டார்.

அவர் கண்டறிந்த ஆச்சரியங்கள், 1899-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரியா, 1903-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் லூயிஸ் லாப்பிக், 1915-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் அதிகாரியாக இருந்த ஜே.ஆர்.ஹென்டர்சன் ஆகிய தொல்பொருள் ஆய்வாளர்களை ஆதிச்சநல்லூருக்கு இழுத்து வந்தது.

அவர்கள் நடத்திய பல்வேறுகட்ட ஆய்வுகளில், தமிழ்க்குடி என்பது உலகின் மூத்தகுடி மட்டும் அல்ல நாகரிகத்தில் முந்தியகுடியும் தமிழ்க்குடி தான் என்பதை மெய்ப்படுத்தும் ஆவணங்கள் கிடைத்தன.

அதன் பிறகு 100 ஆண்டுகள் கழித்து, 2004-ம் ஆண்டு தியாக.சத்தியமூர்த்தி தலைமையில் ஆதிச்சநல்லூரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது மேலும் பல ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்தன.

தமிழர்களின் நாகரிக காலத்தை 3,600 ஆண்டுகளுக்கும் முன்னதாகக் கொண்டு செல்லும் அவரது ஆய்வு அறிக்கை, சிந்துசமவெளி நாகரிக வரலாற்றை பின்னுக்குத் தள்ளிவிடுமோ என்ற அச்சம் காரணமாக அந்த தகவல்கள் இருட்டறையில் அடைக்கப்பட்டன.

இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் உள்பட சிலர் இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்துக்கு இழுத்துச் சென்றனர். விளைவு, அந்த மயான பூமியில் அகழாய்வு மீண்டும் உயிர் பெற்றது.

உலகில் எந்த மயானமும் ஈடு கொடுக்க முடியாத வகையில், ஆதிச்சநல்லூர் இடுகாடு 114 ஏக்கர் நிலத்தில் பரந்து காணப்படுகிறது. அதில் 5 சதவீதம் அளவிலேயே ஆய்வுகள் நடந்து இருக்கின்றன.

முழு அளவில் ஆய்வுகள் நடைபெற்று முடியும்போது, பல தலைமுறைகளுக்கு முந்தைய நமது முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக எவ்வாறு நாகரிகச் சிறப்புடன் வாழ்ந்தார்கள் என்பதற்கான தடயங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

ஆய்வுகளின்போது தோண்டி எடுக்கப்பட்ட ஆபரணங்கள், கலைப் பொருட்கள், ஆயுதங்கள், எழுத்துகளும் உருவங்களும் பதிக்கப்பட்ட மண்பாண்டங்கள், தொழிற்சாலைகள் இயங்கியதற்கான தடயங்கள் ஆகியவற்றில் ஒரு பகுதி சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

எந்தவித விரிவான விளக்கம் இன்றியும், அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பார் யாரும் இல்லாமலும் அவை எல்லாம் அருங்காட்சியக அறை ஒன்றில் வெறுமனே கண்ணாடிக் கூண்டுக்குள் அடைந்து கிடக்கின்றன.

பத்மனாப சாமிக்கே பயன்படாமல், தூசி படிந்து, திருவனந்தபுரம் பத்மனாப சாமி கோவில் நிலவறையில் தூங்கிக் கொண்டு இருக்கும் அபூர்வமான ஆபரணங்கள் போல, தமிழர்களின் தொன்மை கால நாகரிகச் சின்னங்கள் சென்னை அருங்காட்சியகத்தில் முடங்கிக் கிடக்கின்றன.

அப்படிப்பட்ட நிலை நீடிக்காமல், ஆதிச்சநல்லூர் ஆய்வில் கிடைத்த அனைத்துப் பொருட்களும், மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து பார்த்துச்செல்ல வழிவகை காண வேண்டும்.

அதே வேளையில் ஆதிச்சநல்லூர் மயானம் முழுவதும் புதைந்து கிடக்கும் தமிழர்களின் ஆதி கால நாகரிகச் சின்னங்கள் அனைத்தும் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டு, அனைவரும் கண்டு பெருமை கொள்ளும் வகையில் அவை சிறப்பான அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான முதல் அடியை எடுத்து வைக்கும் வண்ணம், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையின்போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருப்பது வரவேற்கக் கூடியதாகும்.

ஏற்கனவே எடுக்கப்பட்ட முயற்சிகள் காரணமாக ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடந்த இடம் அருகே அருங்காட்சியகத்துக்காக ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் அந்தக் கட்டிடம் புதுக் கருக்கு மாறாமல் பூட்டியபடியே கிடக்கிறது.

அதுபோன்ற கண்துடைப்பு நாடகம் மீண்டும் அரங்கேறிவிடக்கூடாது. அமெரிக்காவில் எல்லோஸ்டோன் என்ற இடத்தில் உள்ள தேசியப் பூங்கா பிரசித்தி பெற்றது. பனி படர்ந்த அந்தப் பகுதியில், 50 அடிக்கும் அதிகமான உயரத்திற்குக் கொதிநீரைப் பீய்ச்சி அடிக்கும் அதிசயமான ஊற்றுக்கள் உள்ளன. பழமையான வரலாற்றுச் சிறப்பும், ஆச்சரியமும் நிறைந்த அந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் கூடிய அருங்காட்சி வளாகம் அமைத்து இருப்பதால், அந்த இடம் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக்கொண்டு இருக்கிறது.

அதுபோல பல்வேறு மேலைநாடுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் அருங்காட்சியகங்களை மாதிரியாக எடுத்துக்கொண்டு பல்நோக்கு அருங்காட்சி வளாகம், ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட வேண்டும்.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் முக்கியமான வழித்தடத்தில் ஆதிச்சநல்லூர் அமைந்து இருப்பதால், தினமும் அந்த வழியாகப் பயணிக்கும் பெரும்பாலான மக்களைக் கவரும் வகையில் இந்த அருங்காட்சியகம் இருக்க வேண்டியது அவசியம்.

ஆதிச்சநல்லூர் ஆய்வில் கிடைத்த அரிய பொருட்கள் அனைத்தும் அங்கே விளக்கமான குறிப்புகளுடன் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

அவற்றின் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறுவதற்கும், ஆய்வு நடந்த இடங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று காண்பிப்பதற்கும் சுற்றுலா வழிகாட்டிகள் நியமிக்கப்படுவதும் அவசியம்.

வெறுமனே அருங்காட்சியகம் என்றால் ஆர்வம் மிக்க ஒருசிலர் மட்டுமே அங்கு வந்து செல்வதுபோல ஆகிவிடும். அந்த இடத்தை முக்கியமான சுற்றுலா இடம் போல உருவாக்கும் வகையில் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அங்கே செய்து தரப்பட வேண்டும்.

வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு இடம், ஆண்கள்-பெண்களுக்கு தனித்தனி ஓய்வறைகள், கருத்துப் பணிக்கு தீனி போடும் அதே சமயம் வயிற்றுக்கு உணவளிக்கும் சிற்றுண்டிச்சாலைகள், சிறுவர்-சிறுமிகளுக்கான விளையாட்டுப் பூங்கா, தமிழர்களின் பெருமை பேசும் நூல்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் போன்றவற்றை அமைத்தால், அந்த வழியாகச் செல்லும் பலரும் அங்கே இறங்கி சற்று ஓய்வு எடுப்பதுடன் நமது வரலாற்றை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

ஆதிச்சநல்லூரில் உலகத் தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டால், அது தமிழர்களின் தொன்மையை உலகம் அறியச் செய்யும் நல்ல வாய்ப்பாக அமையும் என்பதால், அனைத்து வசதிகளுடன் கூடிய ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் நாளை வெகு விரைவில் எதிர்பார்ப்போம்.

No comments:

Popular Posts