Wednesday 5 February 2020

தமிழுக்கு மெய்க்கீர்த்தியைத் தந்தவன்!

தமிழுக்கு மெய்க்கீர்த்தியைத் தந்தவன்! முனைவர் ம. இராசேந்திரன் By DIN  |  அருள்மொழித் தேவர் பட்டம் ஏற்றதும் இராசராசன் ஆகியிருக்கிறார். அவர் இப்போது ஆட்சியில் இல்லை. அவர் எழுப்பிய கோயில்  உலகத்தின் காட்சியில் இருக்கிறது.  தஞ்சாவூரில் இராசராசன் எழுப்பிய அந்தக் கோயிலுக்கு   அப்போது பெரிய கோயில் என்றோ பிரகதீஸ்வரர் கோயில் என்றோ பெயர் இல்லை. இராசராசன் சூட்டிய பெயர், "நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி  ஸ்ரீ ராஜ ராஜீஸ்வரமுடையார்' என்பதுதான்.

அங்கிருக்கும் லிங்கம் பெருவுடையார்; அம்மன் பெரிய நாயகி.  அதனால் அது பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.  அது பின்னர் பெரிய கோயிலாக வழக்கில் வந்திருக்கலாம்.

தோற்றத்தால்,  கோபுரத்தின் உயரத்தால் மட்டும் பெரிய கோயில் என்று இல்லை. அது பெருமை மிக்க கோயில்; பெரிய என்பதற்கு வடிவம் சார்ந்து மட்டும் இல்லாமல் பண்பு சார்ந்தும் பொருள் உண்டு. பெரியோர், சிறியோர் - உருவம் சார்ந்து இல்லாமல் செயலும் பண்பும் சார்ந்தவர்கள் தாமே. பெரியோர் பெருமை உடையவர்கள் மட்டுமின்றி வரும் காலத்திற்கும் பெருமை சேர்ப்பவர்கள். அப்படித்தான் பெரிய கோயில்.

ஆங்கிலத்தில் Great Temple- என்று பெருமை சார்ந்துதான் முதலில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பிறகு அது Big Temple- என்று வடிவம் சார்ந்ததாக மாறிவிட்டது. அதன் பெருமையை உணராமல் வடிவம் பார்த்து வியந்தவர்கள் அப்படி அழைக்கத் தொடங்கியிருக்கலாம். ஆனால் தமிழில் பெரிய கோயில் என்பதை இப்போதும் பெருமையோடு பார்க்கலாம்.

தமிழர் கட்டடக் கலைக்குப் பெருமிதம் சேர்க்கும் கோயில்.  இசை, நடனம், நாடகம், இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, பண்பாடு,  வாழ்க்கைமுறை ஆகியவற்றுக்கான தமிழர் கலைக்களஞ்சியமாகப் பெரிய கோயில்  திகழ்கிறது. சுருக்கமாகச் சொன்னால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே இராசராசன் எழுப்பிய தமிழ்ப் பல்கலைக்கழகம் அது.
இராசராசன் தமிழிலும் பக்தி மிக்கவனாக இருந்திருக்கிறான். கடவுள் பக்தியையும் தமிழ்ப் பக்தியையும் இணைத்து வைத்த பெருமை இராசராசனுக்கு உரியது.

அதற்கு முன்பே கோயில் கோயிலாகச் சென்று அப்பர், சுந்தரர், சம்பந்தர் பாடியிருக்கிறார்கள். அவர்கள் மறைந்த பின்பு தேவாரத் திருமுறைகளும்  காணாமல் போயிருக்கின்றன. தில்லையிலிருந்து கண்டு எடுத்து, பக்தித் தமிழைக் காப்பாற்றிய இராசராசனின் தமிழ்ப் பக்தியைப் பாராட்டித்  "திருமுறைகண்ட தேவர்' என்று போற்றப்படுகிறார்.
மூவர் தேவாரத் திருமுறைகளைத்  தேடி எடுத்ததோடு, தான் எழுப்பிய பெரிய கோயிலில் தேவாரம் ஓத ஏற்பாடு செய்திருக்கிறான். தேவாரம் ஓதிட 48 ஓதுவார்களையும், மத்தளம் வாசிக்க இருவரையும், உடுக்கை வாசிக்க ஒருவரையும்  பெரிய கோயிலில் நியமித்து அவர்களுக்கான நிவந்தங்களையும் அளித்துள்ளான். அவர்களில் தலைமை ஓதுவார் "தேவார நாயகம்' என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் தன் ஆட்சிக்கு உட்பட்ட கோயில்களிலும் தேவாரம்  ஓத வைத்துத் தமிழ் வழிபாட்டுக்கும் வழி அமைத்தது இராசராசனின் தமிழ்ப் பக்தி. 
தேவாரத் திருமுறைகளைக் கோயில்களில் குடியமர்த்தியது மட்டுமின்றி அவற்றைப் பாடிய  அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆகியோருக்குச் சிலைகளை வைத்து வழிபட்டிருக்கிறான். மக்களையும் வழிபட வைத்திருக்கிறது இராசராசனின் தமிழ்ப் பக்தி. 

பெரிய கோயிலில் திருவிழாக் காலங்களில் பறை கொட்டுவோருக்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. முதல் நாள் கொடியேற்ற நாளன்று பறை கொட்டும் ஐவர்க்கு ஊதியமாக ஒருவர்க்கு அரைக்காசு வீதம் ஐவர்க்கு இரண்டரை காசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கல்வெட்டு வரிகள்:  "ராஜராஜீஸ்வர உடையார் ஆட்டை பெரியதிருவிழாக்கு திருக்கொடியேற்ற நாளன்று திருப்பறையறிவு கொட்டாங் கடிகையர் ஐவர்க்குப் பெயரால் காசு அரைக்காசு இரண்டரையும்..' மூன்றாம் நாளான ஆடவல்லான் எழுந்தருளும்போதும் பறைக் கொட்டப்பட்டிருக்கிறது.
கல்வெட்டு வரிகள்: "ஆடவல்லான் எழுந்தருளின்றுள்ளட்டு மூன்று நாளன்று திருப்பறையறிவு கொட்டாங் கடிகையர் ஐவர்க்கு பெயரால் அரைக்காசு இரண்டரையும்..'

பறை கொட்டியவர்களுக்கு  நிவந்தம் வழங்கியவர் அதே சமூகத்தைச் சேர்ந்த கடிகை மராயன் என்பவர். இவர் இராசராசனின் உயர் அதிகாரி. சாதி பார்க்காது தகுதி பார்த்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்தியிருக்கிறார் இராசராசன்.
பெரிய கோயிலை உருவாக்கிய கட்டடக் கலைஞர், "இராசராசப் பெரும்தச்சன்' என்று தன் பெயரைச் சேர்த்துத் தமிழில் கொண்டாடியிருக்கிறான்.
இராசராசன் காலத்தில் நிலம் அளக்கப் பயன்பட்டதற்கு "உலகளந்த கோல்' என்று பெயர். இராசராசனின் மனைவியர் உலகமாதேவி, வானவன் மாதேவி, சோழமகாதேவி.

பல்லவர்களும் பாண்டியர்களும் வழங்கிய தானங்களைச் செப்பேடுகளில் பொறித்து உரியவர்களுக்கு அளித்து வந்தனர். அந்தச் செப்பேடுகளில் தங்கள் முன்னோர் வரலாற்றையும் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், தம் காலத்து நிகழ்வுகளை அதிகாரபூர்வமாக அறிவித்து அவற்றைக் கல்வெட்டில் இடம்பெறச் செய்தவன் இராசராசன். அதைத் தமிழில் ஆசிரியப் பாவில் மெய்க்கீர்த்தியாகச் சொல்லியிருப்பவன் இராசராசன்.  இராசராசனுக்குப் பின் வந்தவர்கள் பின்பற்றும் வகையில் தமிழில் வரலாற்றைப் பதிவு செய்யும் முறையை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறான்.  இராசராசன் வரலாற்றைச் சொல்லும் கல்வெட்டுகளின் முதல் பகுதியே "திருமகள் போல இருநிலச் செல்வியும்' என்று தமிழில்தான்  தொடங்குகிறது.

"ஸ்வஸ்தி ஸ்ரீ
திருமகள் போல பெருநிலச் செல்வியுந்
தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி
வேங்கை நாடும் கங்கபாடியும்
நுளம்பபாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும்
திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன்
பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும்
கெழுதகை விளங்கும் யாண்டே செழியரை
தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேசரி
பந்மரான ஸ்ரீ ராஜராஜ தேவர்.'


இப்படி,  இராசராசன்,  தனது வரலாற்றில் தமிழை இணைத்துக் கொண்டிருக்
கிறான்.
எனவே, தமிழுக்கு மெய்க்கீர்த்தியைத்  தந்தவர்களின் வரலாற்றுப் பட்டியலில் இராசராசன்  எப்போதும் வாழ்வார்.

கட்டுரையாளர்:
மேனாள் துணைவேந்தர்
(தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்)

No comments:

Popular Posts