Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

வாசிப்பு, படைப்பாற்றல்: ஏ.ஐ.யின் ஆக்கபூர்வமான பக்கம்


மனித வாழ்வு இன்று செயற்கை நுண்ணறிவு (AI) என்னும் புதிய அறிவியல் யுகத்தில் பயணிக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதால், வாசிப்பு மற்றும் படைப்பாற்றல் பாதிக்கப்படுகிறதோ என்ற கேள்வியும் அச்சமும் பலரிடமிருந்தும் எழுகிறது.


வாசிப்பும் ஏ.ஐ.யும்:

புத்தகங்களைப் படித்து அதன் சாராம்சங்களை அறிந்துகொள்ள ஆர்வம் இருந்தாலும், நேரமின்மை, வசதியின்மை, உடல்நலக் குறைபாடுகள், சோர்வு போன்ற காரணங்களால் பலர் புத்தகம் வாசிப்பதில்லை. கைப்பேசி வந்தபோது வாசிப்பு குறைந்தாலும், மக்கள் செய்திகளை வாசித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், தற்போது 'ஷார்ட்ஸ்', 'ரீல்ஸ்' மோகம் கைப்பேசி வாசிப்பையும் வெகுவாகக் குறைத்துள்ளது. இருப்பினும், ஏ.ஐ.யின் வருகையால் அறிவுத்தளம் விரிவடைந்துள்ளதாகச் சொல்பவர்களும் உள்ளனர்.

பாரதியாரும் செயற்கை நுண்ணறிவும்:

ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் இருக்கும் சூழலில், மகாகவி பாரதியார் இன்று இருந்திருந்தால் ஏ.ஐ. குறித்து என்ன சொல்லியிருப்பார் என்ற கேள்வி எழுகிறது. இதைக் 'காட் ஜிபிடி' மற்றும் 'ஜெமினி ஏஐ'யிடம் கேட்டபோது சுவாரஸ்யமான பதில்கள் கிடைத்தன. புதுமையையும் அறிவியலையும் நேசித்த பாரதி, இந்த அறிவியல் அதிசயத்தை அச்சத்துடன் அல்லாமல், ஆழ்ந்த ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் வரவேற்று இருப்பார் எனக் கருவிகள் கூறின.
  • 'சாட் ஜிபிடி'யின் கவிதை:மனிதன் சிந்தித்தான்

    இயந்திரமும் சிந்திக்கக் கற்றது

    இது மனிதன் அடைந்த அறிவின் வெற்றி
  • 'ஜெமினி ஏஐ' ஒரு படி மேலே சென்று, பாரதியின் நடையில் கவிதைகளுடன் புதிய ஆத்திசூடியையும் வழங்கியது:அறிவை செயற்கையில் ஏற்று

    கணினி தமிழால் கவிதை தீட்டு

    எந்திரம் போற்றுதல் இனிமை

    சிந்தனை என்றும் மனிதற்கு உரிமை
இந்த பதில்கள், ஏ.ஐ.யை மனிதனின் அறிவால் உருவான ஒரு மந்திரக் கருவியாகப் பாரதி அழைத்திருப்பார் என்ற சிந்தனையைத் தூண்டியது. இன்று பலர் ஏ.ஐ.யை அச்சத்துடன் பார்க்கும் நிலையில், பாரதி நம்பிக்கையுடனும் ஆர்வத்துடனும் வரவேற்று இருப்பார் என்ற கருத்து நல்வாக்கியமாகத் தோன்றுகிறது.

வாசிப்பில் ஏ.ஐ.யின் ஆக்கபூர்வமான பக்கம்:

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதாகப் பரவலாகச் சொல்லப்பட்டாலும், ஏ.ஐ.யின் ஆக்கபூர்வமான மறுபக்கத்தை கவனிக்க வேண்டும். 'சரஸ்வதி சபதம்' திரைப்படத்தில் வருவது போல சொடக்கு போடும் நேரத்தில் பண்டிதனாக மாறும் வரம் கிடைக்காவிட்டாலும், அதுபோன்ற வசதியை ஏ.ஐ. இன்று சாமானியருக்கும் வழங்குகிறது.
  • புத்தகப் பரிந்துரைகள்: நெட்பிளிக்ஸ், யூடியூப் போன்றே, மின் புத்தகத் தளங்களும் ஏ.ஐ. உதவியுடன் வாசகரின் ரசனைக்கேற்ப புத்தகங்களைப் பரிந்துரைக்கின்றன.
  • சுருக்கங்கள்: நீண்ட கட்டுரைகள் அல்லது நூல்களை வாசிக்க நேரமில்லாதவர்களுக்கு, ஏ.ஐ. அதன் முக்கியக் கருத்துகளைச் சுருக்கமாக வழங்கி, தகவல்களை விரைவாகப் பெற உதவுகிறது.
  • செவிவழி வாசிப்பு: எழுத்து வடிவ நூல்களை மனிதக் குரலுக்கு நெருக்கமான உணர்ச்சிகரமான குரல் மூலம் கேட்கும் வசதி பரவலாகியுள்ளது. இது வாசிப்பில் ஆர்வம் குறைந்தவர்களுக்கும், இயலாமை நிலையில் இருப்பவர்களுக்கும் அறிவுலகில் நுழைய உதவுகிறது.
படைப்பாற்றலில் ஏ.ஐ.யின் பங்கு:

படைப்பாற்றல் மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்ற நிலை மாறி, இன்று ஏ.ஐ. ஒரு சிறந்த சக படைப்பாளியாக உருவெடுத்துள்ளது.
  • உள்ளடக்கச் செம்மை: இலக்கணப் பிழைகளைத் திருத்துவதுடன், ஒரு வாக்கியத்தை இன்னும் அழகாக எழுதுவதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது.
  • படைப்புக் கருக்கள்: புதிதாக எழுத வருபவர்களுக்கு, கதை அல்லது கவிதை தொடங்குவதில் உள்ள தடைகளை உடைக்க புதிய கருப்பொருள்களை வழங்குகிறது.
  • மொழிபெயர்ப்புப் புரட்சி: 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியங்களை நவீன தமிழுக்கு ஏற்ப எளிமைப்படுத்தவும், உலக மொழிகளுக்கு மொழிபெயர்க்கவும் ஏ.ஐ. உதவுகிறது. ஒரு நாவலை மொழிபெயர்க்க ஆறு மாதங்கள் எடுத்த நிலை மாறி, ஏ.ஐ.யின் உதவியால் மூன்று மாதங்களிலேயே முடிக்க முடிகிறது.
எழுத்தாளரும் ஏ.ஐ.யும்:

இத்தனை வசதிகள் இருந்தாலும், ஏ.ஐ. ஒரு எழுத்தாளரை முழுமையாகப் புறந்தள்ளிவிட வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில், ஏ.ஐ. கருவிகள் நாம் உள்ளீடு செய்த தரவுகளின் பிரதிபலிப்பையே பெரும்பாலும் வழங்குகின்றன. பல ஏ.ஐ. கருவிகளிடம் பாரதி குறித்துக் கேட்டபோது, பதில்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால், மூன்று மனிதர்களிடம் கேட்டால் அவரவர் அனுபவம், அறிவு, கற்பனைக்கேற்ப வெவ்வேறு கோணங்களில் கட்டுரைகள் கிடைக்கும்.
  • மனிதப் படைப்பாற்றலின் தனித்துவம்: எழுத்தாளர் தன் சொந்த அனுபவம், அறிவு, கற்பனையின் மூலம் படைப்புகளில் தனித்தன்மையை வழங்குகிறார். அவருடைய கற்பனைத் திறனுக்கு அளவுகோலே இல்லை. கணினி சொல்லும் வார்த்தை ஜாலங்கள் எழுத்தாளருக்கு முன் ஒரு கைக்குழந்தை போலத் தோன்றுகிறது. இதை மடை திறந்த வெள்ளத்துக்கும் குழாயில் வரும் நீருக்குமான வித்தியாசமாக உணரலாம்.
  • ஏ.ஐ. ஒரு துணைக்கருவி: ஏ.ஐ.யை நம்முடைய உதவிக்கு வைத்துக் கொள்ளலாம். கேட்டதைக் கொடுக்கும் அட்சய பாத்திரம் போல வருங்காலத்தில் இது துணை நிற்கும். ஆனால், மனிதனுடைய நுண்ணறிவு என்பது கற்பனைக்கு எட்டாதபடிக்கு, முன் முடிவுகள் எடுக்க முடியாத வகையில் கட்டமைக்கப்பட்ட ஆகச் சிறந்த செயல்முறை.
வாசிப்பின் உண்மையான அனுபவம்:

ஏ.ஐ. உதவியுடன் ஒரு புத்தகத்தின் சுருக்கத்தை அறிய முடிந்தாலும், வாசிப்பு அனுபவத்தில் திளைக்க முடியாது. வாசிப்பின் ருசியே அந்த அனுபவம்தான்; சுயமான வாசிப்பின்றி அதை உணர முடியாது, கற்பனைக் கடலில் நீந்த முடியாது.

நேரடியாக ஒரு சுற்றுலாத் தலத்தைக் கண்டு மகிழ்வதற்கும், காணொலிக் காட்சியைப் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு போன்றது இது. ஓர் ஆணுக்கு தன் காதலியைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுக்கும், இயந்திரப் பெண்ணை நோக்கும்போது எழும் உணர்வுக்குமான வித்தியாசம்தான்.

வாசிப்புப் பழக்கம் ஏற்கெனவே ஒருவருக்கு அறிமுகமாகியிருந்தால்தான், பின்னாளில் ஏ.ஐ.யின் வெவ்வேறு வடிவங்களைப் பயன்படுத்தி வாசிப்பின் சுவையை அறிய முடியும். எனவே, அடுத்த தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கத்தை விதைப்பது அவசியம்.

ஏ.ஐ.யின் வசதியைச் சரியான முறையில் பயன்படுத்தினால், அது மனிதனை அறிவிலும் சிந்தனையிலும் உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். இருப்பினும், இறுதியில் உணர்வும், அனுபவமும், மதிப்பீடும் மனிதனிடமே நிலைத்து நிற்கின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement