Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

போலியோ சொட்டு மருந்தும்.. கண்டுபிடித்தவரின் பரந்த மனதும்..

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வுகள் இந்தியாவில் பிரமாண்டமாக நடத்தப்படுகின்றன. அந்த நாட்களில் குக்கிராமங்கள் வரை போலியோ மருந்துகள் கொண்டு செல்லப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. அதற்கு காரணம் இருக்கிறது. போலியோ தாக்கி குழந்தைகளின் கால்கள் சூம்பிப்போனால் அவர்களில் பலரது வாழ்க்கையே சூம்பிப்போய்விடுகிறது. அப்படி நடப்பவர்களை பார்த்து அனுதாபப்பட்டிருப்பீர்கள். அதே நேரத்தில் போலியோ பாதிப்பு எதுவும் இன்றி, உலகம் முழுக்க தலை நிமிர்ந்து நடக்கும் பல நூறு கோடி மக்களைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பீர்கள்.

அப்படி நிம்மதி பெருமூச்சுவிட காரணமானவர் போலியோவுக்கு மருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க். அவர்தான் இந்த அரிய மருந்தை கண்டுபிடித்து, அதை இந்த மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவர். ‘போலியோ இல்லாத உலகைப்படைப்போம்’, ‘போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்று இன்று அறை கூவல் விடுத்துக்கொண்டிருக்க அவர்தான் காரணம்.

போலியோ சொட்டு மருந்தை தனது குழந்தைகளுக்கும், தனது பேரன் பேத்திகளுக்கும் வரிசையில் நின்று வாங்கிக் கொடுக்கும் நாம், அதற்கு காரணமான ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க்கை பற்றி தெரிந்துகொள்வது அவசியம். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 28.10.1914 அன்று பிறந்த ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க், நியூயார்க் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெற்று, சிலவகை மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய காலகட்டமான 1950-களில் உலகம் முழுவதும் ‘போலியோ’ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோயின் தாக்கமும், அதனால் விளைந்த பாதிப்புகளும் உச்சகட்டத்தை எட்டியது.

1952-ம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 58 ஆயிரம் பேர் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 3 ஆயிரத்து 145 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 ஆயிரத்து 269 பேர் கை, கால்கள் செயலிழந்த நிலையில் முடக்குவாத தாக்கத்திற்கு ஆளாகி, மாற்றுத் திறனாளி களாக மாறிப்போயினர். இந்த அவலநிலையை கண்டு மனம் நொந்த டாக்டர் ஜோனாஸ் ஸல்க், போலியோவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இரவும், பகலும் மூழ்கினார். 10 ஆண்டுகால கடும் உழைப்பின் பலனாக, இந்த மருந்தை கண்டு பிடித்து உலகிற்கு அளித்தார்.

இதற்காக பிரமாண்டமான முறையில் சோதனை முயற்சி நடந்தது. 20 ஆயிரம் டாக்டர்கள், 64 ஆயிரம் ஊழியர்கள், 2 லட்சம் தன்னார்வ தொண்டர்கள் கொண்ட போலியோவிற்கு எதிரான தற்காப்பு படையினர், அமெரிக்காவில் உள்ள 18 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ஜோனாஸ் ஸல்க்கின் புதிய கண்டு பிடிப்பான ‘போலியோ சொட்டு மருந்து’ வழங்கினார்கள். இந்த மருந்தின் செயலாற்றலின் விளைவாகத்தான் இன்றைய உலகில் போலியோ இல்லாத இளைய சமுதாயத்தை பார்க்க முடிகிறது.

இந்த அற்புதமான மருந்தின் கண்டுபிடிப்புக்கான காப்புரிமை (பேட்டண்ட்ரைட்ஸ்) தனக்கு தேவை இல்லை என்று கூறிவிட்ட டாக்டர் ஜோனாஸ் ஸல்க், அதனை மனித சமுதாயத்துக்கு பரிசாக வழங்குவதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். அவர் மட்டும் இந்த சொட்டு மருந்துக்கான காப்புரிமையை பெற முயற்சித் திருந்தால் 1960-களிலேயே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந் திருக்க முடியும். ஆனால் அவரோ கோடிக்கணக்கான மக் களின் இதயங்களில் வாழ விரும்பி, பரிசாக அறிவித்தார்.

அப்போது அவரை சந்தித்த ஒரு பத்திரிகை நிருபர், ‘இந்த கண்டுபிடிப்புக்காக காப்புரிமையைப் பெற ஏன் மறுத்துவிட்டீர்கள்’ என்று வினவினார். இந்த கேள்விக்கு டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் சற்றும் சிந்திக்காமல் கூறிய பதில் என்ன தெரியுமா..? சூரியனுக்கு யாராவது காப்புரிமை கோர முடியுமா...? அதே போன்றதுதான் இந்த சொட்டு மருந்தும் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினத்துக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்றார்.

போலியோ சொட்டு மருந்துபோன்று அவரது மனதும் உயர்ந்ததுதான்!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement